குறிப்பாக தவெக தலைவர் விஜய் சரியான நேரத்துக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வராததும், இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும் நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல், உடனே கரூரில் இருந்து சென்னை திரும்பியதும் விஜய் மீது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் மீது தமிழக அரசு பதிந்துள்ள வழக்குகளும், நியமித்துள்ள விசாரணை ஆணையமும் அக்கட்சிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது, சந்தேகங்களையும் கிளப்பி இருக்கிறது.
திமுக- தவெகவுக்கு இடையேயான யுத்தத்தை கரூர் சம்பவம் மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிற நிலையில், டெல்லி இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டத்தில் இறங்கியுள்ளது. கரூர் விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தமிழக அரசிடம் இருந்து தன்னுடைய உள்துறை அமைச்சகம் மூலமாக அறிக்கையை கேட்கச் சொன்னார் அமித் ஷா. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவெக அணுகும் முன்னரே இது நடந்தது. தொடர்ந்து ஆளுநரும், தமிழக அரசிடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பாக விவரங்களை கேட்டுள்ளார்.