அவரது பதிவில், ‘‘ஒருமுறை அந்த நடிகரிடம், சிறப்பிதழ் பணிக்காகச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். அது ஒலிப்பதிவாகவும் என்னிடம் இருக்கிறது. பாண்டிச்சேரியில் ஒரு பையனைப் பார்த்தேன். சட்டையின் அத்தனை பட்டன்களையும் கழற்றி விட்டு, உள்ளே சிவப்பு நிற பனியன் போட்டிருந்தான். வலதுகையில் சிவப்புநிறக் கைக்குட்டை ஒன்றைக் கட்டியிருந்தான். நிச்சயமாகப் போதையும் உண்டு. அவனை மறித்த ஆட்டோ ஒன்றின் முன்பக்க கண்ணாடியைக் கையால் ஓங்கிக் குத்தி உடைத்துவிட்டு, கையை உதட்டில் வைத்து முத்தம் தருவதைப் போல ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, ரத்தம் சொட்டுவதைக்கூடப் பொருட்படுத்தாமல் சாலையைத் தாண்டிக் குதித்து ஓடினான்.
இந்தச் சம்பவத்தைச் சொல்லி, "ஏங்க.. கண்ணாடியை எல்லாம் இப்படி உடைக்கக் கத்துக் கொடுக்கக் கூடாது" என்றேன் அவரிடம். பதறுவார் அவரென எதிர்பார்த்தேன். ஆனால் பதில் பேசாமல் ரசித்துப் புன்னகைத்துக் கொண்டார்.
இன்னொருமுறை மூத்த நடிகை ஒருத்தர் அந்த நடிகர் குறித்து ஒரு விஷயத்தைச் சொன்னார். குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடுவது போலக் காட்சி. ஜம்போ அணில் வெடியை வாயில் வைத்துத்தான் பற்ற வைப்பேன் என அடம் பிடித்தாராம். "ஏம்ப்பா... இதைப் பார்த்துட்டு எல்லா பயல்களும் இதை செஞ்சிட்டு வாயே இல்லாம அலைய போறானுகப்பா. வேண்டாம் விட்டிரு" என நடிகை கெஞ்சிய பிறகுதான் விட்டாராம். ஆனாலும் வெடியைக் கவ்வாமல் வாய்க்குப் பக்கத்தில் வைத்துப் பற்ற வைத்த பிறகே திருப்தியானாராம்.