இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா? என்பது புலன் விசாரணையில் தான் தெரியவரும். ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர், காவல்துறை மீது எந்தத் தவறும் இல்லை; அனைத்துத் தவறுகளும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது தான் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
தமிழக காவல்துறையின் உயர்பதவியில் இருப்பவரே இவ்வாறு கூறிவிட்ட நிலையில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள விசாரணை அதிகாரியால் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வாறு நியாயமான விசாரணை நடத்த முடியும். காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் என்ன கூறினாரோ, அதை வலுப்படுத்தும் வகையில் தான் விசாரணை நகரும். அப்படி நடந்தால் இந்த பரிதாப மரணங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களும், ஏதேனும் சதி இருந்தால் அதுவும் மூடி மறைக்கப்படும். அது நல்லதல்ல.