
பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றி வந்த ஜான் ஆரோக்கியசாமியை தவெகவின் வியூக ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார் விஜய். ஜான் ஆரோக்கியசாமியின் ஒருதலைபட்ச தலையீடுகள் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பற்றி ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வியூக வகுப்பாளர் என்பதை தாண்டி தவெக நிர்வாகத்துக்குள் மூக்கை நுழைத்து உள் அரசியல் நடத்தி வருவதாகாவும், உண்மையான தவெகவினர் இதனால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், தவெக ஆதரவாளரும், விஜய்க்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருபவருமான சோனியா அருண்குமார் தனது சமூக ஊடகத்தில் ஜான் ஆரோகிய சாமி மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.
அவரது பதிவில், ‘‘அண்ணன் (விஜய்) தவெக கட்சியை அறிவித்த அன்று என்னை தானாகவே அழைத்து பேசினார் ஜான் ஆரோக்கியசாமி. அதற்கு ஒரே காரணம் நான் தளபதியின் தீவிர ரசிகை என்பதுதான். பல நாட்கள் தவெக சார்ந்த விஷயங்களை என்னிடம் பேசியும், பகிர்ந்தும் வந்தார். அதன் பின்னர் பல முறை “தவெக ஐடி விங் நீங்கள் இல்லாமல் இல்லை” என்று பல மாதங்களாக ஜான் ஆரோக்கியசாமி என்னிடம் பேசி வந்தார்.
ஒரு சில மாதங்கள் கழித்து ஐடி விங் மீட்டிங்குக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து, பின்னர் யூட்யூப் சேனல்களில் பேச சொன்னார். இது புஸ்ஸி ஆனந்துக்கும் நன்றாகவே தெரியும். நான் எந்த சேனலுக்கு பேசப் போகிறேன், என்ன தலைப்பில் பேசப் போகிறேன் என்பதையும் பொதுச் செயலாளரிடம் தெரிவித்துவிட்டே அனைத்து பேட்டிகளையும் தவெக உறுப்பினராக அளித்து வந்தேன்.
நானும் வாட்ஸ்அப் குழுக்களில் முக்கியமான செய்திகளை தொடர்ந்து பகிர்வது என அனைத்தும் சரியாக போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் பெண்கள் ஐடி விங் குழுவில் பேசிக் கொள்ளும் விஷயங்கள் கசியத் தொடங்கின. ஒரு நபர் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை வைத்தேன். அதற்கு ஜான் ஆரோக்கியசாமி “sister leave all the screenshots” என்று கூலாக பதில் அளித்தார். என்னடா இது அநியாயமா இருக்கேன்னு உணர்ந்து, அப்போதே அனைத்து குழுக்களிலிருந்தும் வெளியேறினேன்.
இதற்குப் பிறகு என்னிடம் “இனி பேட்டிகள் தர வேண்டாம், இனி கட்சியில் இருக்க வேண்டாம், வெளியில் இருந்து விஜய்க்கு ஆதரவு தாங்க, வாய்ஸ் ஆஃப் காமன் அலுவலகத்தில் ஒரு எம்ப்ளாயியாக வேலைக்கு வரனும் என என்னை ஜான் ஆரோக்கியசாமி கூறினார். எனக்கு அதில் உடன்பாடில்லை என்று மறுத்துவிட்டேன். இது குறித்து பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லாததால், தளபதி ஒருவருக்காக இன்று வரை இது குறித்து பொதுவில் பேசாமல் இருந்தேன்.
ஜான் ஆரோக்கியசாமி செய்யும் பல தில்லு முல்லு வேலைகள் எனக்கு தெரிந்துவிட்டது என்பதாலேயே என்னை கட்சியில் இருக்க விடாமல் செய்ய வேண்டும் என அவர் நினைத்தார். தளபதியின் தீவிர ரசிகையான என்னை கட்சியில் இருக்கக் கூடாது, கட்சியை விட்டு வெளியே போ என சொல்ல ஒரு வியூக வகுப்பாளருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? யார் இந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது? தவெகவுக்கு பல ஆதரவாளர்கள் தேவை. தளபதியும் அப்படியான மனநிலை கொண்டவரே. யாரையும் கட்சியை விட்டு போகச் சொல்ல தளபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
இந்த பிரச்னைக்குப் பிறகு ஒரு கும்பலை வைத்து என் மீது அதிமுக சாயத்தை பூசுவதை முழுநேர வேலையாக செய்து வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி. இதற்கு ஒரு குறிப்பிட்ட குழுவை வைத்து இயக்கி வருகிறார். பல முறை இது பற்றி தவெக நிர்வாகிகளிடம் கூறியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. “ஜான் தான் தவெகவில் எல்லாமே, ஜானை மீறி எதுவும் செய்ய முடியாது. நீங்க மோதிக்கிட்டிருப்பது பெரிய ஆளோட..” என்று அனைவரிடமும் சொல்லி, எனக்கு மிரட்டல் தருவதை மட்டுமே வேலையாக செய்து வருகிறார்.
தற்போதும் பெண்கள் ஐடி விங் குழுவில் இருந்து அதே கும்பல் ஸ்கீரின் ஷாட்ஸ்s எடுத்து பொதுவில் போட்டு, இன்னொரு பெண்ணை அட்டாக் செய்து வருகின்றனர். இதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கு முன்பு பிரேம் என்ற தம்பியும், இந்த நபரால் பாதிக்கப்பட்டது இங்கு தவெக ஐடி விங்கில் உள்ள அனைவருக்கும் தெரியும். முதலில் பிரேம், பின்னர் நான், தற்போது இன்னொருப் பெண் என தொடர்ச்சியாக இந்த அராஜகம் நடந்து வருகிறது. இதற்கு முழு காரணம் ஜான் ஆரோக்கியசாமி மட்டுமே. குறிப்பிட்ட தவறான நபருக்கு இவர் வரிந்துக் கட்டிக்கொண்டு வருவதால், தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறது இந்த கும்பல்.
ஜான் ஆரோக்கியசாமியும், இந்த குழுவும் சேர்ந்து அதிமுக ஆதரவாளர் என்று என்னை முத்திரை குத்தி பல மாதங்களாக எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல நாட்கள் இணையத்தில் இயங்காமல் தவிர்த்தும் வந்தேன். கடந்த சில நாட்களாக மீண்டும் என்னை தாக்குதல் நடத்த அதே கும்பலை ஏவி வருகிறார் ஜான் ஆரோக்கியசாமி. ஆனால் உண்மையில் அதிமுகவுக்காக வேலை செய்பவர் ஜான் ஆரோக்கியசாமி தான். அதற்கு வேண்டிய அனைத்து ஆதாரங்களையும் தளபதியிடம் கொடுக்கத் தயார். தவெகவின் வியூக வகுப்பாளர் என பல கோடிகளை சம்பளமாக வாங்கியும், மறுபுறம் அதிமுக நபர்களிடமும் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி.
இந்த விஷயமும் பல மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரிந்திருந்தும், பொதுவில் பேசாமல் பொறுமையாகக் இருந்தேன். அதற்கு காரணமும் தளபதி ஒருவரே. அவர் முகத்துக்காக மட்டுமே பொறுமையாக அமைதி காத்து வந்தேன். பொறுமையாக இருந்ததற்கும், ஜான் ஆரோக்கியசாமி செய்யும் பல தவறுகளை உள் அமைப்பில் சுட்டிக்காட்டியதற்கும் எனக்கு கிடைத்த பரிசு “நான் அதிமுக ஆதரவாளர்” என்ற அவதூறும், மனஉளைச்சலும் மட்டுமே’’ என வேதனையை வெளிப்படுத்தி உள்ளார் சோனியா.