
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டசபை தேர்தல் என்பது வெறும் தேர்தல் அல்ல; அது அரசியல் திசைமாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆளும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலைகள், எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சிகள், புதிதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள கட்சிகளின் வியூகங்கள் என அனைத்தும் ஒன்றாக கலந்துள்ள இந்தக் காலகட்டத்தில், எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்பும், அதற்கு கொடுத்த உடனடி பதிலும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம்” எனக் கூறியது, வெளிப்படையாக பெயர் சொல்லாமல் தவெகக்கு விடுக்கப்பட்ட அரசியல் அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக தரப்பில் இருந்து தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு மாற்று, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி வியூகம், 2026-ல் அதிகார மாற்றம்
என்ற கோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இபிஎஸின் இந்த பேச்சு கூட்டணி அரசியலின் கதவை மீண்டும் திறக்க முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
முன்பே, அதிமுக – தவெக கூட்டணி, அதிமுக – பாஜக – தவெக மூன்று கட்சிகளின் கூட்டணி போன்ற யூகங்கள் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டன. ஆனால். அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான பிறகு, தவெக அதில் இணையுமா? என்ற கேள்வி சற்று பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தவெக பற்றி பேசிவந்தது, அரசியல் வட்டாரடததில் முக்கியமான சைகையாகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் அளித்த பதில், எந்தவித குழப்பத்திற்கும் இடமளிக்காத வகையில் இருந்தது. அவர், ‘‘ எங்கள் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. அரசியல் எதிரியுடனும், கொள்கை எதிரியுடனும் கூட்டணி கிடையாது. கட்சியின் நிலைப்பாடு முன்பே தெளிவாக அறிவிக்கப்பட்டது’’ எனத் தெரிவித்து இருந்தார். இது எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் கணக்குகளை மறுவரையறை செய்ய வேண்டும் என உணர்த்தியது. சிடிஆர் நிர்மல் குமாரின் இந்தப் பேச்சுக்கள், தவெக தலைமை அரசியலில் எந்தவித சமரசமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தின.
தவெக அரசியலின் மையம் ஒன்றே... அது விஜய் தலைமையிலான ஆட்சி மாற்றம். அது வெறும் தேர்தல் கோஷமல்ல... அது அரசியல் அடையாளம். கட்சியின் ஆதார கொள்கை. தொண்டர்களின் உணர்வு. பொதுமக்களின் எதிர்பார்ப்பு போன்ற ஒருங்கிணைந்த வெளிப்பாடாக உள்ளது. எந்தக் கூட்டணியாக இருந்தாலும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், கூட்டணி குறித்து பேசவே இடமில்லை என்ற நிலைப்பாட்டை தவெக மீண்டும் அழுத்தமாக கூறி வருகிறது.
தவெகவின் இந்த நிலைப்பாட்டின் மூலம் தவெக, அதிமுகவுக்கு அரசியல் சவாலை விடுத்துள்ளது. கூட்டணி என்ற பெயரில் இணைப்பு அரசியலை மறுத்துள்ளது. சமநிலை அரசியல் அல்ல, தலைமை அரசியல் தான் தங்களின் இலக்கு என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இது அதிமுகவுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் விடுக்கப்பட்ட அரசியல் அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.
தவெக தனித்து களம் காணுமா? ஒரே நிபந்தனையுடன் கூட்டணி அமைக்குமா? அரசியல் சூழல் மாற்றத்தை உருவாக்குமா?
என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகிறது, தவெக எந்த சூழலிலும் தங்கள் அரசியல் அடையாளத்தை இழக்கத் தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் மையமாக இருந்தது “திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்” என்பதே. ஆனால் தவெக தரப்பின் பதில், இதைத் தாண்டி செல்கிறது.
திமுக எதிர்ப்பு மட்டுமே போதாது, மாற்று அரசியல் தெளிவாக இருக்க வேண்டும். தலைமை யார் என்பது உறுதியாக வேண்டும்
என்ற அடிப்படையில் தான் கூட்டணி சாத்தியம் என்ற நிலைப்பாடு வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் தவெக உருவாக்கும் புதிய அத்தியாயம் தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக, கூட்டணிகளில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளின் பின்னணி, சமரச அரசியல் என்றே பார்த்து வந்த நிலையில், தவெக முதல்வர் வேட்பாளர் நிபந்தனையுடன் அரசியல் பேசுவது, புதிய அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்புக்கு, தவெக கொடுத்த பதில் வெறும் மறுப்பு அல்ல, அது அரசியல் திசைகாட்டி, தலைமையைக் கோரும் அறிவிப்பு. 2026-க்கு முன் வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கை என்றே சொல்லலாம். தமிழக அரசியல் வரும் நாட்களில் எந்த திசையில் செல்லும் என்பது கேள்விக்குறி என்றாலும், ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற ஒரே கோட்டில் தவெக பயணிக்கிறது என்பது மட்டும் உறுதி.