ஸ்டாலினின் மகனும், கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஸ்டாலின், சினிமா தயாரிப்பாளர், நடிகராக இருந்து, பின்னர் திமுக இளைஞரணி தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும், பின்னர் துணை முதலமைச்சராகவும் உயர்ந்தார். அரசியலில் உதயநிதியின் கிடுகிடு வளர்ச்சிக்கு மத்தியில் அவரது மகன் இன்பநிதியை விரைவில் அரசியல் களத்தில் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவின் தொடக்ககால கொள்கைகளான பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதியை முன்னிறுத்திய அண்ணாவின் பாரம்பரியத்துக்கு எதிராக, கருணாநிதி குடும்பத்தின் வாரிசு அரசியல் ஒரு முரண்பாடாக பார்க்கப்படுகிறது. அண்ணா தனது குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைத்திருந்தார், ஆனால் கருணாநிதி இதற்கு மாறாக செயல்பட்டாலும் உதயநிதி போன்ற வாரிசுகள் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும், அவர்களது பின்னணி மட்டுமல்லாமல் திறமையும் முக்கியம் என்றும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். அவரது மகன் இன்பநிதி, சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுள்ளார். இன்பநிதி, லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்தவர்.20 வயதுடையவர். அவர் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) பொறுப்பேற்க இருப்பதாகவும், சினிமாவில் நடிக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை தொடர்பான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.