3 மாதங்களுக்கு பிறகு ஜாமின் மனு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி..! புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா.?

First Published Aug 29, 2023, 11:31 AM IST

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு  மனு தாக்கல் செய்துள்ளார்.  

அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்த பிறகு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கானது  விசாரணைக்கு வந்த போது இரண்டு மாதத்தில் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை

அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருதய பகுதியில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த மாதம் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து பழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதியோடு செந்தில் பாலாஜி ஐந்து நாட்கள்  கஸ்டடியில் எடுத்து விசாரித்தது.

 நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று  விசாரணை வந்தபோது செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பாக ஆஜரான  வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யதனர். அதற்கு மறுப்பு தெரிவித்த  நீதிபதி ஜாமின் மனு தொடர்பாக இந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவித்தார்.  எனவே சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.  

ஜாமின் மனு தாக்கல்

இந்த நிலையில் இன்று காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோவன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். இதனை பரிசீலிப்பதாக தெரிவித்த நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த வழக்கு இன்று பட்டியலிடப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது
 

click me!