
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார். முதல் மாநாட்டில் அவர் பாஜகவையும், திமுகவையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என பேசிய பழைய வீடியோ வைரலானது. இதனால் அவர் திமுக கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இதை மறுத்த திருமாவளவன், விசிக திமுக கூட்டணியில் தொடருவதாக அறிவித்தார்.
மேலும் விசிக விஜய் கட்சியுடன் கூட்டணி சேரப்போகிறது எனவும் தகவல்கள் பரவின. இது தவிர வி.சி.க.வின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன், தொடர்ந்து திமுகவை தாக்கி பேசியதால் இந்த தகவல்கள் மேலும் வலுத்தன. ஆனால் இதை மறுத்த திருமாவவளன், ''ஆதவ் அர்ஜூனா கூறியது தனிப்பட்ட கருத்து. அதற்கும் விசிகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, ஆதவ் அர்ஜூனா, விகடன் குழுமத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் விசிகவின் திருமாவளவனும் கலந்து கொள்ள இருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் அவர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. விஜய் இந்த விழாவில் பங்கேற்றதால், திமுகவின் அழுத்தத்துக்கு பணிந்தே திருமாவளவன் பங்கேற்றவில்லை. இதற்கிடையே நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் நீண்ட நேரம் உரையாற்றிய விஜய், ''திருமாவளவன் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாத அளவுக்கு அவருக்கு எவ்வளவு கூட்டணி பிரஷர் இருக்கிறது என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் இங்கு இல்லாவிட்டாலும், அவர் மனம் முழுவதும் நம்முடன் தான் இருக்கிறது'' என்று கூறினார்.
இதனால் திருமாவளவன் சொல்லிதான் விஜய் இப்படி பேசினாரோ என பல்வேறு தரப்பினரும் பலவிதங்களில் பேசத் தொடங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் விஜய் பேசியது குறித்து விளக்கம் அளித்த திருமாவளவன், ''அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்தியிருக்கிறேன்.
அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை. இந்த நிகழ்வின் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணமில்லை. அவருக்கும் விசிகவுக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை. ஆனால் அதற்கு சிலர் அரசியல் சாயம் பூச நினைத்தால், விழாவில் பங்கேற்க ஆராய வேண்டியதிருந்தது'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொன்னவர்களே விஜய்யையும் கட்சி ஆரம்பிக்க சொல்லி இருப்பதாக விசிக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்குப் பிறகும்கூட விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விடுதலைச் சிறுத்தைகளோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது.
தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து ‘அழைப்பு’ விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. இதையெல்லாம் பார்க்கும் எவரும், ரஜினிகாந்த் அவர்களை கட்சி ஆரம்பிக்கச் சொன்னவர்கள்தான் அவர் உடன்படாததால் விஜய் கட்சி தொடங்க வைத்திருக்கிறார்கள் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளவார்கள் .
‘விஜய், மணிப்பூரைப் பற்றிக் குறிப்பிட்டாரே’ என்று அப்பாவியாகக் கேட்பவர்கள் அந்த மேடையில் இருந்த நீதிபதி கே.சந்துருவிடம் Alibi என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். திரைப்பட ஒப்பனை அளவுக்குக்கூட அரசியல் ஒப்பனைக்கு ஆயுள் கிடையாது'' என்று கூறியுள்ளார்.