அரசியல் எனக்கு ஒத்து வராது.. மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய பிரமுகர் விலகல்.. அதிர்ச்சியில் கமல்.!

First Published | Aug 13, 2023, 10:20 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொழிலாளர் அணி செயலாளர் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளது கமல்ஹாசனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இதுதொடர்பாக பொன்னுசாமி வௌியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 2008ம் ஆண்டு பால் முகவர்களுக்கான அமைப்பை உருவாக்கி அதன் நிறுவனத் தலைவராக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் எனது செயல்பாடுகளை பார்த்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியின் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் பொறுப்பில் நியமனம் செய்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் செயல்வீரனாக எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி  நான் செயல்பட்டு வந்ததை அனைவரும் நன்கறிவீர்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பில் இணைந்த போதே என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர்கள் "உனக்கு அரசியல் ஒத்து வராது", என எச்சரிக்கை செய்த போது அதனை புறம் தள்ளி எனது பயணத்தை தொடர்ந்தேன். ஆனால் கடந்த 45 மாத கால அரசியல் பயணத்தில் நண்பர்கள் கூறியது முற்றிலும் சரி தான் என்பதை உணர்ந்து கொண்ட தருணத்தில் "அரசியல் எனக்கு ஒத்து வராது" என்பதை உணர்ந்து கொண்டதாலும், "தவிர்க்க இயலாத ஒருசில காரணங்களாலும்" முற்றிலுமாக "அரசியலில் இருந்து ஒதுங்குவது" என நான் எடுத்த முடிவின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெள்ளிக்கிழமை (11.08.2023) இரவு நான் விடுவிக்கப்பட்டிருப்பது இறைவன் நிர்ணயித்த காலத்தின் கட்டாயம் தான் என்பதை உணர்கிறேன்.

Tap to resize

இந்த தருணத்தில் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் முதல் மாநில செயலாளராக பொறுப்பு வழங்கியதோடு, ஒரு அரசியல் கட்சிக்கு மிக முக்கியத் தேவையான தலைமை தொழிற்சங்கம் உருவாக்குவதற்கான மிகப்பெரிய பொறுப்பையும் என் மீதான நம்பிக்கையின்பால் தலைவர் நம்மவர் அவர்கள் வழங்கிய போது அதனை சிரமேற் கொண்டு செய்து முடித்து அதனை அவரிடம் சமர்ப்பித்தது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் பொருளாதார பின்புலம் இல்லாத சாமானியனான என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து 2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தலைவர் நம்மவர் அவர்களுக்கும், என் மீது மிகுந்த அக்கறையோடு தொடர்ந்து என்னை ஊக்குவித்து வந்த துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான மரியாதைக்குரிய ஏ.ஜி.மெளரியா ஐபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் கட்சியின் ஏனைய நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் மய்ய உறவுகளுக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களின் நலனிற்காகவும் சமூக அக்கறையுடன் கூடிய சமூக ஆர்வலராக சுதந்திரமாகவும், நடுநிலையோடும் கூடிய எனது செயல்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதையும் 2019க்கு முன்பிருந்த அதே செயல்பாடுகள் மீண்டும் வேகமெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!