தனது மக்கள் இயக்கம் மூலமாக, மீனவர் பிரச்னைக்கு நாகையில் உண்ணாவிரதம் இருந்தார்.அப்போது பேசிய விஜய் , ‘தமிழன் மேல ஒவ்வொரு அடியும் விழும்போதும்,அது என் மேல விழுற அடி’ என்று கூறி தன்னுடைய அரசியல் ஆர்வத்தையும்,மக்கள் மேல் கொண்ட அன்பையும் வெளிப்படுத்தினார். காவலன் பட பிரச்னைக்கு திமுக தான் காரணம் என்று, 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர் விஜய் ரசிகர்கள்.
‘தளபதியே வா! தலைமை ஏற்க வா!’ என்று காவலன், வேலாயுதம் படங்களுக்கு போஸ்டரை அடித்து ஆளுங்கட்சியினரை அதிரவைத்து அமர்க்களப்படுத்தினர் விஜய் ரசிகர்கள். 2013ஆம் ஆண்டு ‘தலைவா’ திரைப்படத்தின் ரிலீசுக்கு அன்றைய ஆளும் அதிமுக முட்டுக்கட்டை போட்டது. “தலைவா” என்ற தலைப்பே ஆளுங்கட்சியிடத்தில் சலசலப்பை உண்டாக்கியது.அது மட்டுமில்லாமல், தலைவா படத்தின் கீழ் அதாவது சப்டைட்டிலில் ‘டைம் டூ லீட்’ (Time To Lead) என்ற வாசகம் இடம் பெற்றது. இதுவே தலைவா படத்தின் தடைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
தலைவா படத்தை திரையிட்டால் தியேட்டர்களை தாக்குவோம்’ என மிரட்டல் வந்ததால் எந்தத் தியேட்டரிலும் படம் ரிலீஸாகாது என்று சொல்லிவிட்டநிலையில், விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கொடநாடு வரை சென்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் திரும்பிவந்தார்கள். சென்னை திரும்பிய விஜய்,ஜெயலலிதாவின் ஆட்சியில் செய்த திட்டங்களை கூறி , தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுங்கள் என ஒரு கோரிக்கையை வைத்திருந்தார்.
அதன்பிறகுதான் ஒரு வழியாக ‘தலைவா’ ரிலீஸானது.இதனால் அன்றைய வருடம் விஜயின் பிறந்தநாள் ரசிகர்களால் சரியாக கொண்டாட முடியவில்லை,இது அவர்களிடத்தில் விரக்தியை ஏற்படுத்தியது. விஜய்க்கு அப்போது ‘இளைய தளபதி’ என்று பெயர் வைக்க மு.க.ஸ்டாலின் மிக முக்கிய காரணம் ஆகும்.1991 தேர்தலில் திமுக தேர்தலில் தோற்றது.தளபதி என்ற பெயரில் மு.க.ஸ்டாலினும்,இளைய தளபதி என்ற பெயரில் விஜயும் களத்தில் இறங்கிய சமயம் அது.அதுவே காலப்போக்கில் நிலைத்துவிட்டது.தற்போது மெர்சல் பட பர்ஸ்ட் லுக் வெளியீட்டில் “தளபதி” என்ற பெயரில் ‘ப்ரோமோஷன்’ பெற்றார் விஜய்.இது திமுக தரப்பிடம் சங்கடத்தை உண்டாக்கியது.
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிராக விஜய் பேசிய வசனம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் “மெர்சல் vs மோடி” என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கானது.மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனம்,நடிகர் விஜயின் மற்றொரு அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது.எச்.ராஜா விஜயை “ஜோசப் விஜய்” என்று கூறி மதம் சார்ந்த சர்ச்சையை கிளப்பினார். இவை எல்லாவற்றிற்கும் தன்னுடைய மௌனத்தையே பதிலாக வைத்திருந்தார் ‘விஜய்’.
நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தின் வியாபாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக நெய்வேலி படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற வருமானவரித்துறை, விஜயை அவரது பனையூர் வீட்டிற்கு கையோடு அழைத்துச்சென்று விசாரித்தது. இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. விடிய விடிய சோதனை என தொடர்ந்த வருமான வரித்துறையினரின் அப்டேட், விஜய் வீட்டில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்ற விளக்கத்துடன் முடிந்தது. வருமானவரித்துறை பரபரப்பிற்கு பின் மீண்டும் விஜய் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
பிறகு மாஸ்டர் படப்பிடிப்பு நடக்கிறது, விஜய்யை பார்க்கலாம் என்ற பொதுவான பார்வையால் பொதுமக்களும் அங்கு கூடத்தொடங்கினர். காத்திருப்பவர்களை ஏமாற்றாத விஜயும், ஷூட்டிங் வேன் ஏறி ரசிகர்கள் பட்டாளத்துடன் செல்ஃபி எடுத்தார். விஜயின் செல்ஃபியால் ஆர்வமான ரசிகர்கள், பொதுமக்களும் அதிக அளவில் வர மூன்றாவது நாளும் நெய்வேலியில் கூட்டம் அலைமோதியது. அன்று பேருந்தின் மேலே ஏறிய விஜய் கைகூப்பி நன்றி தெரிவித்தார். அன்றைய தினமே விஜய் எடுத்த செல்ஃபியும் வைரல் ஆனது. இப்படி சத்தமில்லாமல் நெய்வேலிக்கு வந்த விஜய், பெரும் கூட்டத்திற்கு இடையே கைகூப்பியபடியே வெளியேறினார்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்ற ஒர்க்கிங் டைட்டிலில் இந்தப் படம் உருவாகி வந்தது. தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இந்த படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டது. விஜய் குடும்ப வாரிசா ? அரசியல் வாரிசா என்றும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
வழக்கம் போல விஜய் ரசிகர்களும் சும்மா இருப்பார்களா என்ன ? நடிகர் விஜயை அரசியலுக்கு வாருங்கள் என்று போஸ்டர் அடித்து கொண்டாடி வருகிறார்கள். 'எங்களின் ஒற்றை தலைமையே' , 'எங்களை காக்கும் கபசுரரே', 'அரசியலுக்கு வா' என்று போஸ்டர்களை அடித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.