
தமிழ்நாட்டில் முருக பக்தர்கள் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். முக்கியமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலையில் கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியும், திமுக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் மேல்முறையீடு செய்து தடுத்தது. இதை இந்து விரோத நடவடிக்கையாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
நீதிமன்ற வாதத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் "முருகனுக்கு இரு மனைவியர் இருந்தாலும் தீபம் ஒரு இடத்தில் மட்டுமே ஏற்றப்படும்" என்று நக்கலாகக் கூறியது முருக பக்தர்களின் மனனங்களை புண்படுத்தியது. தீபம் ஏற்ற முயன்ற பக்தர்கள் கைது செய்யப்பட்டதும், போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடவடிக்கையும் கடும் அதிருப்தியை அதிகரித்தன.
இந்த சர்ச்சையால் டிசம்பர் 18, 2025 அன்று மதுரையைச் சேர்ந்த முருக பக்தர் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2025 ஜூன் மாதம் மதுரையில் நடந்த இந்து முன்னணி ஏற்பாடு செய்த முருக பக்தர்கள் மாநாட்டை திமுக அரசால் இடையூறு செய்யப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. திருப்பரங்குன்றம் மலையில் தர்கா நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது போல இந்து வழிபாட்டுக்கு தடை விதித்தது சிறுபான்மை தலையீடு என்ற விமர்சனத்தை எழுப்பியது. திமுக தரப்பில் இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, நீதிமன்ற வழக்கு என்று கூறப்படுகிறது. ஆனால், பக்தர்கள் மத்தியில் இது இந்து உணர்வுகளை புண்படுத்தியதாகவே பார்க்கப்படுகிறது. இந்த அதிருப்தி 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதனால், வெறுப்பான முருக பக்தர்கள் ‘‘வரும் தேர்தலில் ஸ்டாலின் அவர்கள் தோற்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட பல மடங்கு முக்கியம் இந்த இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபுவை படு தோல்வி அடைய செய்ய வேண்டும் முருக பக்தர்கள். அந்த முருகனை மனமார வேண்டி கேட்டு கொள்கிறோம்’’ என அறைகூவல் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘‘முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார். ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது’’ என முரட்டு முட்டுக் கொடுத்து புல்லரிக்க வைத்துள்ளார் சேகர் பாபு. இதுகுறித்து பேசிய அவர், ‘‘பாஜகவினர் ஏதாவது ஒரு புரட்சி ஏற்படுத்தலாம் நினைக்கிறார்கள். அவர்களது வேல் யாத்திரைக்கு பிறகு தான் இந்த தமிழக மண்ணில் திராவிட ஆட்சியை மாண்புமிகு, எங்கள் உயிரினும் மேலான அன்பு தலைவர் தளபதி உருவாக்கி காட்டினார். அதன் பிறகு அண்ணாமலை ஆன்மிகத்தை கையில் எடுத்து, ஏதாவது ஒரு வகையில் இந்த தமிழகத்தை கைப்பற்றி விடலாம் என்று காவடி கூட எடுத்துப் பார்த்தார். காலிலே செருப்பு அணியாமல் கூட நடந்து பார்த்தார். ஆனால் தமிழக மக்கள் 39 அல்ல 40 தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் விடையளித்திருக்கின்றார்.
தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற திராவிட மாடல் ஆட்சி மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில் அமைந்திருக்கின்றது. இந்த ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்ததில்லை. அறுபடை வீடுகளையும் இன்றைக்கு புணரமைக்கின்ற பணியிலே 817 கோடி ஒதுக்கீடு செய்து இன்றைக்கு முருகனுக்கு பெருமை கொண்டிருக்கின்றோம். அதேபோல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 105 முருகன் திருக்கோவிலுக்கு மாத்திரம் திருப்பணிகளை செய்திருக்கின்றோம். அதோடு மட்டுமல்லாமல், உலகமே திரும்பிப் பார்க்கின்ற வகையில் 22 நாடுகளை சேர்ந்தவர்கள், இரண்டு நாள் மாநாடு என்று அனைத்து உலக முத்தமிழ் முருகர் மாநாட்டை பழனியில் லட்சோப லட்ச மக்கள் திரளுகின்ற ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறது மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில் இருக்கின்ற அரசு.
அதோடு மட்டுமல்ல, அறுபடை வீடுகளுக்கு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அறுவடை வீடுகளையும் ஒரே முறை தரிசித்து உண்டு உறைவிடத்தையும் ஏற்படுத்தி தந்து இருக்கிறோம். அதற்குண்டான முழு செலவையும் அரசே ஏற்றுக்கொண்டு இதுவரையில் கிட்டதட்ட 1000க்கும் மேற்பட்ட முருக பக்தர்களை கட்டணம் இல்லாமல் அறுபடை வீடுகளையும், முதியோர்கள் சென்று தரிசிக்க வைத்த ஆட்சி இந்த ஆட்சி. திருப்பரங்குன்றத்தை பொறுத்த அளவில் அதை கையில் எடுத்து அரசியலாக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை பொறுத்த அளவில் எம்மதமும் சம்மதமே. எல்லோருக்கும் எல்லா சுதந்திரமும் இருக்கிறது.
இந்தியாவில் சுதந்திர மூச்சுக்காற்று தமிழகத்தில் முழுவதுமாக நிலவிட எத்தனை நடவடிக்கை வேண்டுமானாலும், எத்தகைய நடவடிக்கை வேண்டுமானாலும் மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் தயாராக இருக்கின்றார். நான் ஏற்கனவே சொன்னது போல் இனத்தால், மொழியால், மதத்தால் இந்த மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது. மதுரை மண்ணினுடைய மக்கள் ஒற்றுமையோடு இருக்கின்றார்கள் என்று பேட்டிகளில் நாங்கள் பார்த்தோம்.
மற்ற மாவட்டத்தில் இருந்து இனத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற சங்கிகள் தான் அந்த மதுரை, திருப்பரங்குன்றம், முருகன் திருக்கோயில் பிரச்சனையை ஊதி பெரிதாக்க நினைக்கின்றார்கள். இந்த மக்கள் ஒற்றுமையோடு இருக்கின்ற மக்கள். ராமானுஜர் பிறந்த மண் இது. ஒற்றுமைக்கு விலை மதிப்பு தர முடியாத மண். ஆகவே, முருகனுடைய கனவு பகல் கனவாகும். முருகர் எங்களோடு தான் இருக்கின்றார். நம் தமிழக முதல்வரோடு முருகன் உறுதியாக இருக்கின்றார். முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார். ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.