
‘‘அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா? விஜயா? யார் எனத் தெரியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் முதல் பட்ஜெட் கொடூரமான பட்ஜெட்டா இருக்கும்’’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி.
இது குறித்து பேசிய அவர், ‘‘பிரச்சனை எல்லாமே இவங்க கொடுத்த வாக்குறுதிகள் இருந்து வருகிறது. இன்னைக்கு நிறைவேற்ற முடியாமல் வந்து நிற்கிறார்கள். வருத்தம் என்னவென்றால் ஒரு புதிய கட்சி இந்த மாதிரி வாக்குறுதிகளை கொடுத்துட்டு அதிகாரத்துக்கு வந்து திண்டாடுகிறார்கள் என்றால் பரவாயில்லை. நிதிச் சுமை காரணமாக பணம் இல்லை, கஜானா காலி என புரிந்து கொள்ளலாம். அவர்கள் அனுபவமற்றவர்கள். ஏதோ ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் அப்படிப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள் என்று போய் விடலாம். ஆனால் திமுக 75 ஆண்டு கால கட்சி. கடந்த ஐந்து, ஆறு தசாப்தங்களாக ஆண்டுக்கு இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ ஆட்சியில் இருந்து இருக்கிற கட்சி.
மாநிலத்தில் மட்டுமல்ல, மத்தியில் 15 ஆண்டுகளுக்கு மேல் அதிகாரத்தில் இருந்த கட்சி. அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டோட நிதி நிலைமை என்ன என்பது திமுகவுக்கு நன்றாகவே தெரியும். அந்த தேர்தல் அறிக்கை தயாரிக்க கூடிய குழு தலைவராக இருந்தவர் டி.ஆர்.பாலு. 85 வயது ஆகிறது. மத்திய அமைச்சராக 10, 12 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். அந்த குழுவில் இருந்தவர்களில் முக்கியமானவர்கள் கனிமொழி, பி.டி.ஆர் போன்றவர்கள். பொருளாதார மற்றும் அரசியல் அறிந்தவர்கள்.
இந்த மாதிரி நாம் வாக்குறுதி தருகிறோமே... இது நடைமுறைக்கு ஒத்து வராது. அது மக்களை ஏமாத்துகிற மோசடி என்று அவர்களின் மனசாட்சி அவர்களை கேள்வி கேட்டிருக்க வேண்டும். அதை அறிக்கை குழுவின் தலைவராக இருந்த பி.டி.ஆர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம் என்று அந்த அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கிறார். அந்த குழு முக்கிய உறுப்பினராக இருந்தவர் பிடிஆர்.
2021 ஆம் ஆண்டு மே மாதம் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி பதில் அளிக்கும் போது பழைய ஓய்வு திட்டத்தை கொண்டுவர வாய்ப்பே இல்லை என்று கையை விரிக்கிறார். இது எவ்வளவு பெரிய மோசடி? இன்றைக்கு பாரதி சொல்வான். படித்தவன் பாவம் செய்தால், போவான்... போவான்.. ஐயோ என்று போவான். அந்த வரிகள் தான் எனக்கு ஞாபகம் வருது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பார்க்கும்போது பாரதியோட கவிதை வரிகள் தான் எனக்கு ஞாபகம் வரும். சொல்லி வைத்து கழுத்தறுத்து விட்டது. கல்வி கடன் ரத்து கிடையாது. பழைய ஓய்வு திட்டம் கிடையாது. இது எல்லாமே வந்து தெரியாமல் கொடுத்து விட்டார்கள்.
நிர்வாகத்தை பற்றிய புரிதல் இல்லாம கொடுத்து விட்டார்கள். பல ஆண்டுகளாக ஆண்ட கட்சி. தமிழகத்தில் பெரிய அளவில் அரசியல் நிர்வாகம் என்பது மிக நன்றாக அவர்களுக்கு தெரியும். மாநில நிலைமை எவ்வளவு மோசம் என்பது தெரிந்தும் இப்படிப்பட்ட வாக்குறுதிகளை கொடுப்பது என்பது மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து முதுகில் குத்தி இருக்கிறார்கள். இலவசங்கள் என்பது ரொம்ப வசதியான ஒரு வாதம். எந்த கட்சியும் முழு வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. ஆனால் சில வாக்குறுதியை கொடுத்தால் அதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பது முன்பே நன்றாகத் தெரியும். தெரிந்தும் சில திட்டங்களை அறிவிக்கிறார்கள்.
தமிழ்நாட்டை மிக நன்கு அறிந்த கட்சி திமுக. நிலைமை குறித்து துல்லியமான புரிதலும் கொண்ட நம்பர் ஒன் கட்சி. இந்த பாவத்திற்கு என்ன செய்வது? இலவசங்கள் இந்தியா முழுவதும் இருக்கிற சிக்கல். 12, 14 மாநிலங்கள் இலவசங்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறாகள். இவர்களும் அந்த சிக்கலில் போய் மாட்டியிருக்கிறார்கள். ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி இந்தியா முழுவதும் 12, 14 மாநிலங்களில் இலவசங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு விதமான இலவசங்கள் இருக்கிறது. ஒன்று சமூகத்திற்கு உதவக்கூடிய மதிய உணவு திட்டங்கள், காலை சிற்றுண்டி. அதன் மூலமாக படிக்கிறார்கள். பட்டம் வாங்குகிறார்கள். சமூகத்திற்கு திரும்ப வருகிறது. இது வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள். கல்வி இடை நிறுத்தலை நிறுத்தி சைக்கிள் கொடுப்பதால் அந்த பெண் 12 ஆம் வகுப்பு வரை படிக்கிறார்.
கல்யாணம் பண்ணி கொடுத்து பத்து வருடங்கள் அடுத்து பிள்ளைகள் பெற்று படித்து பெரிய அதிகாரியாக, நீதிபடியாகக் கூட வருகிறார்கள். அது தேவை. காப்பீட்டு திட்டங்கள், சுகாதாரத் திட்டங்கள், கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவு செய்வது, இலவசங்களில் அது முதலீடு. மகளிருக்கு 1000 கொடுப்பதை எந்த விதத்தில் சேர்ப்பது? 1 கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என்றால் மாதத்திற்கு 1000 கோடி. ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி. 5 ஆண்டுகளுக்கு 60 ஆயிரம் கோடி. இதை எப்படி எதில் இருந்து எடுப்பது? சிக்கலே இது போன்ற திட்டங்களால்தான்.
இது போன்ற திட்டங்களால் தான் மற்ற அவசியமான திட்டங்களுக்கு பணம் செலவழிக்க இல்லாமல் போகிறது. உயர் கல்வியில் நமது மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்று நமது முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் உயர்கல்வியின் நிலைமை என்ன தெரியுமா ? பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்கள் திவால். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மாதம்தோறும் சம்பளத்திற்கு திருவோடு ஏந்துகிறார்கள். மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியை ஏற்கனவே முடித்து விட்டார்கள். தமிழ்நாடு இல்லை, இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகம், வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து இருக்கிற பழைய யூனிவர்சிட்டி. இன்றைக்கு அங்கு என்ன நிலைமை என்றால் 2015 முதல் 25 வரைக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன்களை கொடுக்க முடியவில்லை. 2015-ல் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜுவிட்டி கொடுக்க முடியவில்லை. இதெல்லாம் தான் தமிழக அரசின் பிரச்சனை.
அவர்களுக்கு 90 கோடி பணத்தை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. நிதித்துறை செயலாளர் 20 கோடியை மட்டும் தான் ரிலீஸ் செய்கிறார். மீதி பணத்திற்கு என்ன செய்கிறார்கள்? 300 கோடிக்கு மெட்ராஸ் யூனிவர்சிட்டி ஒரு பண்ட் இருக்கிறது. அதில் வருகிற வட்டியை எடுத்துத் தான் மெட்ராஸ் யூனிவர்சிட்டியின் பழைய ஓய்வூதியத்தை கொடுக்கிறார்கள். இப்போது அந்த எஃப்டியை உடைக்கிறார்கள். இப்போது பணியில் இருக்கக்கூடிய பேராசிரியர்கள் வயிற்றில் வாயில் அடித்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களது கடைசி லைப் லைனே அதுதான். அதிலேயே இவர்கள் கை வைக்கிறார்கள். பெரும்பாலான துறைகள் திவால். கஜானா காலி.
போன பொங்கலுக்கு பணம் கொடுக்கவில்லை. இந்த பொங்கலுக்கு 5000 ரூபாய் கொடுங்கள் என்கிறார்கள். ஆனால், கஜானாவில் எதுவுமே இல்லை. சரி, 3000 ரூபாயாவது கொடுங்கள் என்கிறார்கள். ஆனால் ஏதாவது கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். இந்த அமைச்சர்கள், அதிகாரிகளை பாடாய்ப் படுத்தி பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைக்க வேண்டும் என்பது போல் 5000 இல்லையென்றால் 3000 மாவது கொடுங்கள் என்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் கடன் தான் வாங்க வேண்டும். அந்த கடன் மக்கள் தலையில் தான் விழும். 2 கோடி ரேஷன் அரிசி கார்டுகளுக்கு கொடுக்கப் போகிறார்கள். அது ரூ.3000 மா? அல்லது ரூ.5000 மா? என்பதுதான் கேள்வி. 2 கோடி அரிசி கார்டுகளுக்கு 3000 ரூபாய் என்றால் ரூ.6000 கோடி. அந்த ரூ.6000 கோடி எங்கிருந்து வரும்? ஏற்கனவே கஜானா காலி.
யார் ஜெயிச்சு வந்தாலும், ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறப்போவதில்லை. 2026 முழு பட்ஜெட் நமக்கு கிடையாது. பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தான் போடுவார்கள். மே மாதம் நமக்கு புது ஆட்சி வந்துவிடும். ஜூன் அல்லது ஜூலையில் புது பட்ஜெட் கொடூரமாக இருக்கும். பெரும்பாலான துறைகள் திவால். கஜானா காலி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், 2026ல் யார் ஆட்சிக்கு வந்தாலும் சிரமம்தான். அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா? விஜயா? யார் எனத் தெரியாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் முதல் பட்ஜெட் கொடூரமான பட்ஜெட்டா இருக்கும்.
தாறுமாறாக எல்லா விலையையும் ஏற்றப் போகிறார்கள். பணம் இல்லை. வருஷா வருஷம் 6 சதவிகிதம் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு. 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே ஜூலையில் மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். இந்த ஆண்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் உயர்த்தவில்லை. தொழிற்சாலைகளைக்கும் கடைகளுக்கும் உயர்த்தி விட்டார்கள். இந்த ஆண்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் உயர்த்தவில்லை என்றால் அடுத்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்த்துவார்கள். ஆட்சியே மிகக் கொடூரமாக இருக்கும். மக்கள் அவஸ்தைகளை அனுபவிப்பார்கள்’’ என அடித்துச் சொல்கிறார்.