உங்களை நாய் கடித்தால் இங்க வாங்க.. எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேச பதில்!

First Published | Aug 16, 2023, 6:55 AM IST

தமிழ்நாடு மருத்துவத் துறையை தொடர்ந்து சீரழித்து வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ், ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல் வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். ஒருகட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

கேரளாவில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வெறிநாய் கடிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை எனவும், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குண்டான சிகிச்சைகளை துரித நிலையில் மேற்கொண்டதன் காரணமாக, குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் தாய் ஷைனி ஊடகங்களில் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன. சமீப காலமாக அரசு மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லும் சாமானியர்களின் கால் போகிறது; கை போகிறது; உயிரும் போகிறது என்ற அவலம் திமுக ஆட்சியில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. சளிக்குச் சென்றாலும் நாய்க்கடி ஊசி. உண்மையிலேயே நாய் கடிக்கு சிகிச்சை கேட்டுச் சென்றால், நாய்க்கடி ஊசி இல்லை என்ற நிலை.

Tap to resize

தசைப் பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார். சிறு குழந்தையின் தவறான சிகிச்சையால் கை அகற்றப்பட்டு, தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை. ஆனால், சுகாதாரத் துறை அமைச்சருக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த திமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர், மக்கள் நலன் காக்கும் அமைச்சரா அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் அமைச்சரா? என்பதே சந்தேகமாக உள்ளது.

இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது விடியா திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது, சுகாதாரத் துறை அமைச்சர், அவரது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என  எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 6 மணிக்கு உடற்பயிற்சியை முடிப்பேன். ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் எல்லாம் 6 மணி வரை குறட்டை விட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். நான் 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவருக்கு வயிற்றெரிச்சலை அளிக்கிறது.

தமிழ்நாட்டின் மருத்துவத்துறை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். 10 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் செய்ததை நான் இரண்டரை ஆண்டுகளில் செய்திருக்கிறேன். நான் இந்த இரண்டரை ஆண்டுகளில் எத்தனை இடங்களுக்கு மருத்துலமனைகளுக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறேன் என்ற பட்டியலை வைத்திருக்கிறேன். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னாள் வரை பாம்புக் கடி மருந்துகளும், நாய் கடி மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் இருந்தது. இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி உங்களை நாய் கடித்தால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து மருந்துகள் போட்டுக்கொள்ளலாம். இந்த வசதி கடந்த இரண்டரை ஆண்டு காலமாகத்தான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!