
செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான மோதல் அதிமுகவில் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் கோவையில் தொடங்கியபோது, செங்கோட்டையன் இதில் பங்கேற்கவில்லை. இது கோவை மற்றும் கொங்கு மண்டலத்தில், அவரது சொந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி என்பதால், இது மீண்டும் மோதல் வெடிப்பதற்கு காரணமாக அமைந்தது.
இன்று, செங்கோட்டையன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த சந்திப்பில், அவரது மேசையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இருந்தன, ஆனால் எடப்பாடி பழனிசாமியின் படம் இடம்பெறவில்லை. அப்போது பேசிய அவர், ‘‘1972-ல் எம்.ஜி.ஆர் இயக்கத்தை துவங்குகிற போது என்னுடைய கிராமத்தில் கிளைக் கழகத்தை உருவாக்கினோம். புரட்சித்தலைவருடைய செல்வாக்கு என்பது நாடே வியக்கத்தக்க அளவுக்கு இருந்தது. செல்வாக்கு மிக்க தலைவராக பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட தலைவராக வாழ்ந்தார். மக்கள் மனதில், இதயத்தில் குடி கொண்டிருக்கிற இதய தெய்வம் என்று எல்லோரும் பாராட்டப்படுகின்ற ஒரு தலைவராக புரட்சித் தலைவர் விளங்கினார்.
அந்த புரட்சித்தலைவருடைய வழியில் 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தல் வருகிற போது அந்த தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்டார். அப்போது இந்தியாவிலேயே அவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் யாரும் வெற்றி பெறவில்லை. இரண்டு லட்சத்து 37,000 வாக்குகள் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அதற்கு பிறகு இடைத்தேர்தல். கோவையிலும் மருங்காபுரியிலும் மாபெரும் வெற்றி ஈட்டுத்தந்த தலைவராக இருந்தார். 1975 லே பொதுக்குழு கோவையில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் அரங்கநாயகம் தலைவர். திருப்பூர் மணிமாறன் செயலாளர். என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழு நடத்த வேண்டும் என்று புரட்சித் தலைவருடைய சார்பாக எனக்கு ஆணை வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையிலேயே பொது குழுவை பொறுத்த வரையிலும் முழுமையாக நாங்கள் நின்று செயல்படுத்தியதை புரட்சித்தலைவர் வியந்து சத்யா ஸ்டுடியோக்கு அழைத்து அண்ணன் கே.ஏ.கே, அண்ணன் ஆர்எம்வீ இருக்கும்போது மனதார பாராட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். அதற்கு பிறகு 1977 நான் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடுகின்ற போது புரட்சி தலைவர் அவர்கள் நீ சத்தியமங்கலத்தில் நில் என்று சொன்னார். சத்தியமங்கலம் என்பது எனக்கு புதிதான தொகுதி. நான் என்ன செய்வது என்று கேட்டபோது ‘‘என் பெயரை உச்சரி. நீ வெற்றி பெறுவாய்’’ என்று குறிப்பிட்டார்.
நான் எதற்காக இதை சொல்கிறேன் என்றால் அப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் தேர்தல்காலம் வருகிற போது யார் யார் வெளியே செல்கிறார்களோ அவர்களை எல்லாம் புரட்சித்தலைவர் அரவணைப்பார். எஸ்டிஎஸ், கோவை செழியன் போன்றவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தில் இருந்து வெளியே செல்கின்ற போது அவரது இல்லங்களுக்கு சென்று புரட்சித்தலைவர் வாருங்கள் என்னோடு என்று இணைத் இந்த இயக்கத்தை நடத்துவதற்கு காரணம் தமிழக மக்களின் நலன் கருதி தொண்டர்களுடைய நலன் கருதி, தமிழ்நாட்டின் இந்த பணிகளை மேற்கொள்ள வாருங்கள் என்று அழைத்தார்.
புரட்சித்தலைவரை பொறுத்தவரையிலும் மாமேதையாக மக்கள் நெஞ்சங்களில் குடியிருக்கும் தலைவராக எம்ஜிஆர் விலங்கினார். அந்த தலைவர் பத்தாண்டுகளும் சிறந்த ஆட்சி தமிழகத்தில் தந்தார். இந்தியாவில் வியக்கத்துக்க அளவிற்கு ஏழை மக்களுடைய பசிப்பிணியை போக்கி, ஏழை மக்களுக்கு சத்துணவு வணங்கிய ஒரு முதலமைச்சர். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். அப்படி பெருமை சேர்த்த முதலமைச்சர் அவர்.
அவருடைய பத்தாண்டு காலத்திற்கு பிறகு புரட்சித் தலைவர் மறைவுக்கு பிறகு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொறுப்பேற்றார். தலைவருக்கு பிறகு இந்த இயக்கத்தை வழிநடத்துவதற்கு ஒரு ஆளுமை, அதே நேரத்தில் பல் மொழிகளில் பேசக்கூடிய திறமை, மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைமையாக நீங்கள் வரவேண்டும். நீங்கள் தான் அதற்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் அவரிடத்தில் சென்று வேண்டுகோள் விடுத்தோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சிறந்த ஆட்சியை தமிழகத்தில் தந்தார்கள். ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருக்கின்றபோது இந்திய நாடு திரும்பி பார்க்கின்ற அளவிற்கு உலக நாடுகள் திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு ஒரு சிறந்த முதலமைச்சராக ஆளுமை மிக்க முதலமைச்சராக தமிழகத்தில் பவனி வந்தார்.
அவருடைய ஆட்சி என்பது ஐந்து முறை முதலமைச்சராக இருந்து, ஏழை மக்களின் இதயங்களிலும், படித்த இளைஞர்களிடமும், அதே நேரத்தில் திராவிடவாதிகள் அனைவராலும் போற்றப்படுகின்ற தலைவியாக விளங்கினார். அதை நான் குறிப்பிடுவதற்கு காரணம், ஆன்மீகவாதிகளும் ஏற்று கொள்கிற தலைமை, திராவிடவாதிகளும் ஏற்றுக் கொள்கிற ஒரு தலைமையாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்கினார். இது தமிழ்நாட்டின் வரலாறு. ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று கி.வீரமணி பட்டத்தை வழங்கினார். நான் எதற்காக சொல்கிறேன் என்றால் இந்த இயக்கத்தை பொறுத்தவரை ஏழை எளிய மக்களுக்காக தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அதிமுக. அம்மா அவர்கள் மறைந்தார்கள்.
மறைந்ததற்கு பிறகு 2016 ஆட்சிக்கட்டிலில் அம்மா அவர்கள் வெற்றிவாகை சூடி ஓராண்டு காலத்திற்கு பிறகு அவர் மறைந்தார்.அதற்கு பிறகு இந்த இயக்கத்திலே பல்வேறு சோதனைகள் வருகிற போது அந்த சோதனையில் அன்றைக்கு எல்லோரும் சேர்ந்து இந்த இயக்கம் உடைந்து விடக்கூடாது. இந்த இயக்கத்தை பேணி காக்க வேண்டும் என்ற முறையில் அன்றைய பொதுச் செயலாளராக திருமதி சசிகலா அவர்களை ஒருமனதாக நாங்கள் நியமித்தோம் அதற்கு பிறகு காலச்சக்கரங்கள் சுழன்று மீண்டும் முதலமைச்சர் யார்? என்றபோது முன்னாள் முதலமைச்சர், எதிர் கட்சி தலைவராகஇருந்த ஓ.பி.எஸைர் அவர் முன்மொழிந்தார்.
ஆனால் இந்த இயக்கம் பல்வேறு சோதனைகள் வந்தபோது, பல்வேறு தடுமாற்றங்கள் வந்தபோது தடுமாற்றம் இல்லாமல் இந்த இயக்கத்திலேயே நான் பல்வேறு பணிகளை ஆற்றி இருக்கிறேன் . அதை புரட்சித்தலைவர், அம்மா அவர்கள் ஆடியோ மூலமாக நிகழ்ச்சியின் மூலமாக என்னை பாராட்டியதும் அனைவருக்கும் தெரியும். நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்று சொன்னால் நமக்கு பல்வேறு நிலைகளை கடந்து பணியாற்றுகிற போது, நெடும் பயணத்தை நாம் மேற்கொகிறபோது பல்வேறு பொறுப்புகள் கிடைக்கும். பல்வேறு சோதனைகள் வரும். அந்த சோதனைகள் அனைத்தும் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டு பணிகளை நான் ஆற்றி இருக்கிறேன். நான் எதற்காக இதை சொல்கிறேன் என்றால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி போன்ற தலைவர்களை விட பெரிய ஆள் இங்கு யாரும் இல்லை’’ எனத் தெரிவித்தார்.