செங்கோட்டையன் மனம் திறந்து பேசப்போகிறேன் என அறிவித்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பு சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. காரணம் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஜெயலலிதா பாணியை பின்பற்றி அரசியல் செய்ய நினைக்கிறார். அதனால்தான் இந்த முட்டல், மோதல்கள் எல்லாம் நடக்கிறது என்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள். அதனால் சமாதானத்துக்கு வழியில்லை என்றும் கூறுகிறார்கள்.
பலகட்ட அரசியல் மோதல்களை கடந்து, அதிமுகவை கைப்பற்றிய ஜெயலலிதா, கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்த அமைச்சர்கள், சீனியர்களை ஓரம்கட்டி செல்லாக்காசு ஆக்கினார். தனக்கு நம்பிக்கையானவர்களை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு, அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமே குவித்து வைத்துக் கொண்டு அதிரடி அரசியல் செய்தார். அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகள் ஆக்கப்பட்டனர். எந்த அமைச்சரும் தனிப்பட்ட முறையில், நிர்வாகத்திலும் சரி.. கட்சி விஷயமானாலும் சரி.. முடிவெடுக்க அதிகாரம் கிடையாது. போயஸ் கார்டனில் இருந்து உத்தரவு வரவேண்டும்.