நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயையும், தவெகவையும், அவரது தொண்டர்களையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். முன்பு விஜயுடன் தோழமை பாராட்டிய சீமான், தவெகவின் விக்கிரவாண்டி மாநாட்டுக்கு பிறகு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விஜயை கடுமையாகத் தாக்கி வருகிறார். 2024-ஆம் ஆண்டு ஏப்ரல், விஜய் தனது தவெக கட்சியைத் தொடங்கினார். அவர் "திராவிடக் கொள்கையும் தமிழ் தேசியமும் என் இரு கண்கள்" என்று அறிவித்ததும், சீமான் உடனடியாக வெடித்துக் கிளம்பினார். திராவிட இயக்கத்தை "தமிழர்களை அடக்கிய குடும்பம்" என்று குற்றம் சாட்டி, தமிழ் தேசியத்தை மட்டுமே உயர்த்திப் பிடித்தார்.
விஜயின், தமிழ் தேசியம், திராவிடக் கொள்கை, காங்கிரஸ்-பாஜக விமர்சனம், சுற்றுப்பயண ஏற்பாடுகள் என விஜயை குறி வைத்து வாலண்டரியாக தாக்கி வருகிறார் சீமான். நாதகவின் தமிழ் தேசியக் கொள்கைக்கு மாறாக, விஜய்யின் திராவிடம், தமிழ் தேசியம் என்கிற கலப்பு அணுகுமுறையை சீமான் ‘கூமுட்டைத் தனம்’ எனக்கூறி கடுப்பானார். ஒரு பக்கம் நில்லு... அல்லது மற்றொரு பக்கம் நில்லு; நடுவில் நின்னா லாரியில் அடிபட்டு செத்து விடுவாய் என கிண்டல் செய்தார் சீமான்.