கனிமொழி பேசுகிறார். அதிமுக கட்சி அலுவலகம் டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருக்கிறது என்று பேசுகிறார். அந்தம்மா கனவு கண்டதா என்று தெரியவில்லை. திருமதி கனிமொழி அவர்களே, அதிமுக அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. வந்து பாருங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்துப் பார்த்தீர்கள். ஒன்றும் நடக்கவில்லை. ஏனென்றால் அதிமுகவை எம்ஜிஆர், அம்மா என்ற இரு தெய்வங்களும் அருள் புரிந்து காத்தருள்கிறார்கள்.
அதிமுகவை உடைக்க, பிளக்க சதி செய்தீர்கள். எந்த விதத்திலும் அதிமுக செயல்படக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் மூலமாக வெவ்வேறு விதத்தில் முயற்சி செய்தீர்கள். அத்தனையும் அதிமுக தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது. இது தொண்டர்கள் நிறைந்த கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி, ஸ்டாலின் அவர்களே நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை அசைக்கவோ ஆட்டவோ முடியாது. அதிமுகவை அழிக்க எத்தனையோ பேரை கொம்பு சீவிக்கொண்டிருக்கிறீர்கள். எத்தனையோ வழியில் சோதனையை ஏற்படுத்துகிறீர்கள். அத்தனை சோதனையும் தூள் தூளாக்கப்படுகிறது.