
தமிழக தேர்தல் களத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக மிக வேகமாக முந்திக்கொண்டு செல்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தவெக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அதேவேளை விஜய் யாருடனாவது பலமான கூட்டணி அமைத்தால் முதல்வர் பதவியை எட்டுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் பல எதிர்ப்புகளுக்கு இடையே தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தவெகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதிமுகவின் முன்னாள் இரண்டாம் கட்ட தலைவர் நாஞ்சில் சம்பத் போன்றோர் இணைந்த பிறகு கட்சி மேலும் சூடு பிடித்திருக்கிறது. தற்போது விஜய் ஒரு பக்கம், செங்கோட்டையன் ஒரு பக்கம் பரபரப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். தவெக, காங்கிரஸுடன் கூட்டணி சேரலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே தவெக தொடங்கிய புதிதில் அந்த கட்சிக்கு 15% வாக்குகள் மட்டும் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக வெளிவந்த கருத்துக்கணிப்பில் தவெகவுக்கு 20 சதவீதம் வாக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து பத்து பேர் கொண்ட ஒரு குழுவை நடிகர் விஜய் நியமித்திருந்தார்.
அந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்தின் தேர்தல் களம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது? என ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் ஒரு கட்டமாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக 104 இடங்களை பெற்று முதலிடம் வகிக்கும். அதேவேளை தவெக 74 இடங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்திலும் அதிமுக 56 இடங்களை பெற்று மூன்றாம் இடம் பிடிக்கும் என சர்வேயில் தெரிய வந்துள்ளன. தவெக நடத்திய சர்வே தொடர்பாக இந்தியா டுடே ஊடகம் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. அதன் சுமார் 40,500 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில் திமுகவுக்கு 32.9% ஆதரவு இருக்கிறது. 31.7% தவெகவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. அதிமுகவை பொறுத்த வரையில் 27.3% ஆதரவு பெற்று இருக்கிறது. மற்ற கட்சிகள் 8.1% ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தர்மபுரி, மதுரை, தென்காசி, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருவாரூர், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் தவெகவுக்கு அதிகமான அளவு வாக்குகள் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தவெகவுக்கு முதற்கட்ட தேர்தலிலே தமிழகத்தின் மிகப்பெரிய இயக்கமான அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பெறுவதும், 74 இடங்களுக்கு மேல் வெற்றி வாய்ப்பு இருப்பதும் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
காங்கிரஸ், தேமுதிக, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் உட்பட பல முக்கிய கட்சிகளை கூட்டணியாக சேர்த்துக் கொண்டால் தவெக ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள். தற்போது சூழ்நிலையில் ஜனநாயகன் பட வெளியீட்டுக்கு பிறகு விஜய் தீவிர பரப்பரை செய்வார். புதிய கூட்டணிகள் அமைப்பார் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தரப்பிலும், திமுக தரப்பிலும் தங்களது வாக்கு வங்கிகையை பலப்படுத்தும் நோக்கத்தில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முக்கியமான ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் சொல்கிறார்கள். தவெக குறித்து புதிய கருத்துக்கணிப்பு வெளிவந்தன் மூலம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிகள் இடையே பலத்த போட்டியிருக்கும். இருந்தபோதிலும் தற்போது கருத்துக்கணிப்பு படி வாக்கு சதவீதங்கள் ஒன்று அல்லத இரண்டு சதவீதங்கள் தான் அதிகபட்ச வேறுபாடாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்களும் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசம்தான் வெற்றி பெறுவார்கள் என்பதும் தெரிகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இதே சூழ்நிலை நீடிக்குமானால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டசபையில் முடியும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அப்படி நிக்ழந்தால் அதிமுக- தவெக ஆகிய இருவரும் ஒருங்கிணைய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் ஆட்சியை பிடிக்கலாம். அதே வேலை திமுக யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாததால் அந்த கட்சி பின்னடைவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.