இதையடுத்து, தமிழகத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவை கடந்த செப்டம்பரில் அமித் ஷா அமைத்தார். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தமிழக கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடத்திய அனுபவம் உள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயலை தமிழக பொறுப்பாளராக அமித் ஷா நியமித்துள்ளார். அவரும் சென்னை வந்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். அதிமுகவிலிருந்து பிரிந்த ஓபிஎஸ், டிடிவி.தினகரனை கூட்டணியிலாவது சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி விடாப்பிடியாக மறுத்து வருகிறார்.
அதேபோல், ராமதாஸ்- அன்புமணி மோதலால் பாமக பிளவுபட்டு ராமதாஸ் திமுக கூட்டணிக்கு செல்ல முயற்சிக்கிறார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும் திமுக கூட்டணியை விரும்புவதும், அதிமுக - பாஜக கூட்டணிக்கு தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில், தமிழக கூட்டணி நிலவரம் குறித்து அமித் ஷா, பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரிடம் பிரதமர் மோடி நிலவரத்தை கேட்டுள்ளார். அப்போது, வலுவான போட்டியில் தமிழக தேர்தல் களம் இருக்கும் நிலையில், திமுக அணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க முடியாத நிலை குறித்து, பிரதமர் தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.