
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் அடுத்து எங்கு செல்கிறார்? என்கிற எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், திமுகவிலும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையன் நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாக கூறப்படுகிறது. அவர் விஜய்யை ஏற்கனவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தவெகவில் மாநில அளவில் அமைப்புப் பணிகளுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக ஆதரவாளர்கள் இதற்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் -திமுக அமைச்சர் சேகர் பாபு இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். செங்கோட்டையனை திமுகவில் இணைக்கவே இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் செங்கோட்டையன் பிடிகொடுக்காமல் பேசியுள்ளார். அவரை எப்படியும் திமுகவில் இணைத்து விட வேண்டும் என்கிற முடிவில் இருந்து வருகிறது திமுக. அடுத்து, செங்கோட்டையனின் லைனுக்கு இரண்டு முறை வந்துள்ளார் மு.க.ஸ்டாலின். அப்போது, உங்களுக்கு என்ன தேவை. உங்களை போன்ற அனுபவமுள்ள சீனியர்கள் திமுகவுக்கு வந்தால் நல்லது. நீங்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் நாங்கள் செய்து தருகிறோம்’’ என கேட்டுக் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதற்கு முன் சில திமுக சீனியர் தலைவர்கள் நேற்று இரவு முதல் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
ஆனால், செங்கோட்டையனோ, "இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள்" என மறுப்பு தெரிவிக்காமல் தவிர்த்துள்ளார். திமுகவினர் பலர் பேசினாலும் செங்கோட்டையன் தவெகவில் இணைவதற்கு முடிவெடித்துவிட்டார். இதற்கு காரணம், செங்கோட்டையன் "திமுகவின் பி-டீம்" என்று எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி வந்தார். அந்த வதந்தி தன்னால் உண்மையாகி விடக்கூடாது என்பதால் செங்கோட்டையன் திமுகவை தவிர்க்கிறார் என்கிறார்கள். தவெகவில் இணைந்தால், கொங்கு மண்டலத்தில் தவெகவுக்கு அமைப்புப் பலம் கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைவது உறுதி என்கிறார் பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ், ‘‘செங்கோட்டையனோடு எனக்கு பல ஆண்டுகள் நெருங்கிய பழக்கம் உண்டு. அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மறைந்த முதலமைச்சர் அம்மா ஆகிய இரு தலைவர்களுடைய நம்பிக்கைக் கூறியவராக திகழ்ந்தவர் செங்கோட்டையன். அவரோடு எனக்கு கிட்டத்தட்ட ஒரு 42 ஆண்டுகளாக மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த வகையிலே அவரை குறித்து கடந்து சில நாட்களாக வந்து கொண்டிருக்கிற செய்திகள் பற்றி அவரோடு பேசுவதற்காக நான் இன்று அவரை சந்தித்தேன். அவருடைய ஆதரவாளர்கள், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அதேபோல தமிழக முழுவதும் இருக்கக்கூடிய அவரது அரசியல் நலம் விரும்பிகள், தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைய வேண்டும். அவருடைய அரசியல் பயணம் தமிழக வெற்றிக்கழகத்தில் விஜயின் கரத்தை வலுப்படுத்தி பயணம் அமைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சிலரோடு பேசியதன் மூலம் நான் அறிந்து கொண்டேன். ஆகவே உங்களைப் போலவே நாளைய தினம் அவர் தமிழகத்தில் வெற்றிக் கழகத்தில் இணையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவே நான் பார்க்கிறேன். தமிழக வெற்றிக்கழகம் நிச்சயமாக அந்த கட்சியினுடைய வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான கருவியாக செங்கோட்டையன் இருப்பார் என்று நான் திடமாக நம்புகிறேன். அடுத்து செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு அவருக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவம் அல்லது பொறுப்பு, கவுரவத்தை பார்த்து அதிமுகவில் இருக்கக்கூடிய, அதிருப்தி மன நிலையில் இருக்கக்கூடியவர்கள் சிலர் அவருடைய முடிவை பின் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நான் பார்க்கிறேன்.
இன்றைக்கு தவெக என்பது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு போட்டியாக தேர்தல் களத்தில் பிரதான போட்டியாளராக அதிமுகவிற்கு சமமான வலிமையோடு திகழ்கிறது. பெரும் அரசியல் சக்தியாக இருக்கிறது. சில பகுதிகளில் அதிமுகவைவிட தவெகவிற்கு கூடுதலான ஆதரவு இருப்பதாக எனக்கு தெரிந்த கருத்துக்கணிப்புகளை நடத்துகிற ஒன்று இரண்டு நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். அதேபோல சமீப காலமாக விஜய், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழை உச்சரிட்டது அந்த புகழையும் பேசுவதற்கு தொடங்கி இருக்கிறார். அதன் மூலம் அதிமுகவில் இருக்கக்கூடிய தொண்டர்கள், அடிமட்டத்தில் இருப்பவர்கள், அதிருப்தியில் இருக்கக்கூடிய புள்ளிகளின் பார்வையும் விஜய் பக்கம் திரும்பும். மேலும் சிலர் அடுத்தடுத்த நாட்களில் இணையக்கூடிய வாய்ப்புகளும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
அதிமுகவில் இருக்கக்கூடிய விரும்பத்தகாத சூழ்நிலை குறித்து என்னிடம் செங்கோட்டையன் தெரிவித்தார். அவர் திமுகவுக்கு செல்லாததற்கு காரணம் நேர் எதிர் நிலையில் இருக்கக்கூடிய ஒரு கட்டம்தான். அந்த நெருடல் ஏற்படுவது இயற்கை. ஒரு உதாரணத்திற்கு சொல்வதானால் அதிமுக என்பது திமுகவை எதிர்த்து எதிர்த்து அதனுடைய பாதையை, எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தில் சேருகிற முடிவு எடுத்தால் செங்கோட்டையனுக்கு நெருடல் ஏற்படும். தவெக என்பது திமுகவை கூர்மையாக எதிர்க்கக்கூடிய மற்றொரு இயக்கம். அதில் இணைவதில் எந்த நெருடலும் கிடையாது. அவருடைய அரசியல் அனுபவத்தை தவெக உரிய வகையிலே பயன்படுத்திக் கொள்வது அந்த கட்சியினுடைய வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது என்று நான் பார்க்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.