நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்களை முன்வைத்து, விஜய் தமிழக அளவில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். இது டிசம்பர் வரை தொடரும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 16 மாவட்டங்களில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. "உங்க விஜய் நான் வரேன்" என்ற முழக்கத்துடன் இந்தப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். விஜய், திமுகவின் ஊழல், அதிமுகவின் பலவீனங்களை விமர்சித்தார். திருச்சியில் முதல் பொது கூட்டத்தில் "சொன்னீர்களே செய்தீர்களா?" என்று திமுகவின் வாக்குறுதிகளை கேள்வி எழுப்பினார். இங்கும் பெரும் கூட்டம் தன்னெழுச்சியாக கூடியது திமுகவை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜயின் இந்தப் பயணம் தமிழக அரசியலை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது ரசிகர்கள் கூட்டம். இது ஓட்டாக மாறாது என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.