அரசியல் கட்சி என்றாலே, மாற்று கட்சியை மாச்சரியத்தோடு பார்ப்பதுதான் நடைமுறை என்ற காலம் இப்போது மீண்டும் தலைதூக்கி வருகிறது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் பின்பற்றிய அரசியலில், கொள்கை வேறாக இருந்தாலும், பண்பாடு மேலோங்கி இருந்து. நல்ல அரசியல் நாகரிகம் தூக்கி நின்றது. ஆனால், இப்போது முதல்வரை அங்கிள் என்று அழைப்பதும், பதிலடியாக அரசியல் தலைவரை நடிகைகளுடன் இணைத்து அநாகரிகமாக பேசுவதுமாக சந்தி சிரிக்கத் தொடங்கியுள்ளது.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில், பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என்று அழைத்தார். சென்ற முறை ஸ்டாலின் சார் என்றவர், இந்த முறை அங்கிள் என்ற வார்த்தையை பலமுறை உச்சரித்தார். ஒரு அரசியல் தலைவரை, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என்றோ, மிஸ்டர் ஸ்டாலின் என்றோ, ஏன் ஸ்டாலின் சார் என்றோ அழைப்பதற்கு மாறாக இப்படி அங்கிள் என்று உறவு முறை வைத்து பேசுவது முறையல்ல.
தவெக தலைவர் விஜய்க்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அரசியல் ரீதியாகத் தான் முரண்களே ஒழிய, இது மச்சான், மாமன் இடையில் உள்ள பிரச்சினையல்ல.