தங்களுடைய வலுவான வாக்கு வங்கியாக இருந்தவர்களே இன்னொரு பக்கம் எதிர்த்து போராட்ட அரசியலை முன்னெடுத்து இருக்கிறார்கள். கூட்டணி கட்சியினரே குடைச்சல் கொடுக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி சுற்றிச் சுற்றி நெருக்கடிகள் இருக்க, இவை எல்லாவற்றையும் சமாளிக்க கூடிய வகையில் புதிய ரூட்டை எடுத்து இருக்கிறார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அந்த வகையில் திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழிக்கு கூடுதல் பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதில் முக்கியமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை உருவாக்கி, அதற்கு தலைமை பொறுப்பையும் கனிமொழிக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த குழுவில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கார்த்திகேய சிவ சேனாபதி உள்ளிட்ட பல முக்கியமானவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்படி எல்லோருடைய பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது இந்த டீம். இதையொட்டி மாவட்டம் தோறும் பலதரப்பட்டவர்களை சந்திக்க இந்த டீம் முடிவு எடுத்து இருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அமைப்பினர், தொழிலாளர்கள் அமைப்பினர், மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், வாகன போக்குவரத்து சங்கத்தினர் என எல்லோரையும் சந்தித்து, அவர்களிடம் கருத்துக்களை கேட்டு, அவர்களுடைய பிரச்சனைகள் எல்லாம் என்ன? எனக் கேட்டு வாக்குறுதிகளை தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.