
முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசியல் விறுவிறுப்படைந்துள்ளது. கூட்டணி வியூகங்கள், புதிய கட்சிகளின் வருகை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோஷம் ஆகியவை தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக, பாமக ராமதாஸ் அணி, ஓபிஎஸ் தவிர அனைத்து கட்சிகளும் ஓரளவிற்கு கூட்டணியை இறுதி செய்துவிட்டன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்தும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை குறித்தும் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியாகும். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஐந்து தொகுதிகளிலிம், 2016-ம் ஆண்டு 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றது.
இந்த இரண்டு தேர்தல்களிலும் திமுகவின் தோல்விக்கு காங்கிரஸ் தான் காரணம் என அப்போது பேசப்பட்டது. எனவே 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கியது. அதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் திமுகவிடம் கேட்டு பெற்று அதிக எம்எல்ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. கடந்த தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை 40 இடங்கள் வரை கேட்கிறது. மேலும் ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையையும் சில காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் சில நாட்களாக சலசலப்பு நீடித்து வருகிறது. இருப்பினும் திமுக கடந்த முறை போட்டியிட்ட 25 தொகுதிகளுடன் கூடுதலாக மூன்று தொகுதிகள் வரை ஒதுக்கி மொத்தம் 28 தொகுதிகளை கொடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சியில் சில தலைவர்கள் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில் அவர்களுக்கு கூடுதல் சீட்டு கொடுப்பது தேர்தல் களத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கலாம் என்று திமுக தலைமை நினைக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் விடாப்பிடியாக இருந்தால் அதிகபட்சம் 30 சீட் வரை ஒதுக்கலாம் என்று திமுக நினைக்கிறது.
காங்கிரஸ் கட்சியைப் போலவே திமுகவின் நீண்ட கால நண்பர்களாக இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இந்த தேர்தலில் 12 சீட்டுகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி வட தமிழகம் மட்டும் இல்லாமல் தமிழக முழுவதும் கட்டமைப்பு இருக்கும் கட்சி என்பதால் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் விசிகவுக்கு 10 முதல் 12 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்று திமுக தலைமை விரும்புகிறது.
கடந்த முறை 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக இந்த முறை அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை பெற்று தனிச் சின்னத்தில் நிற்க விரும்புகிறது. மேலும் வைகோ ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்றும், திமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று உறுதிப்படக் கூறியிருக்கிறார். எனவே அவர் திமுகவுக்கு எந்த நெருக்கடியையும் கொடுக்காமல், கொடுக்கப்படும் தொகுதிகளில் தனிச் சின்னத்தில் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்களும் இந்த முறை அதே ஆறு தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்கள் வரை ஒதுக்கப்படும் என்றும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மூன்று இடங்கள், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சிக்கு கடந்த தேர்தலில் திமுக தலைமை சீட் ஒதுக்கவில்லை. எனவே மநீம இந்த முறை இரட்டை இலக்கத் தொகுதிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கு மூன்று தொகுதிகள் வரை மட்டுமே திமுக ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய கட்சியாக விளங்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிலை குறித்து இன்னமும் தெளிவாக தெரியாமல் இருக்கிறது. ராஜ்யசபா சீட் தருபவருடன் தான் கூட்டணி என்று பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் திமுக அதிமுக என இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், கூட்டணியை விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறி வருகிறார். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எட்டு தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும், ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ராமதாஸ் தலைமையிலான பாமக திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது. ஆனால் ராமதாஸ் இருக்கும் அணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று திருமாவளவன் தொடர்ந்து கூறி வருகிறார். முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ராமதாஸை இணைத்து கொள்வதில் விருப்பம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை ராமதாஸ் திமுக கூட்டணியில் இணையாவிட்டால் வட தமிழகத்தில் வலுவாக இருக்கும் 30 தொகுதிகளில் அவரை தனித்து களமிறங்க வைத்து, திமுக மறைமுக ஆதரவு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இது அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் வியூகமாக பார்க்கப்படுகிறது.
125 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இந்த முறை விஜயின் வருகையால் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுக விரும்புகிறது. இந்த முறையும் மெஜாரிட்டியை தக்க வைக்க திமுக குறைந்தது 170 முதல் 180 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
சிறிய கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியோரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க விரும்புவதாகவும், தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரையும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் - 74
உதயசூரியன் நேரடி போட்டி - 160 தொகுதிகள்
2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதை சமாளிக்க திமுக தனது கூட்டணி கட்டமைப்பை மிகவும் கவனமாக செலுத்தி வருகிறது. இந்த தகவல்கள் தற்போது அரசியல் நகர்வுகள் மற்றும் ஊடக செய்திகளின் அடிப்படையிலானவை மட்டுமே. அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு தேர்தல் அறிவிப்பு அறிவிப்புக்குப் பின்னரே முழுமையாக வெளியாகும்.