சீட் கேட்டது மகனுக்கு.. கிடைத்தது அப்பாவுக்கு.. இளங்கோவன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னணியில் முதல்வர்?

First Published Jan 24, 2023, 10:12 AM IST

ஈரோடு கிழக்கில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்குத் தன் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட் கேட்டிருந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலினே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாக தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்துவது வழக்கம். அதேபோல் இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம்.  இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.  இதையடுத்து வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் அலல்து அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால்,  ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 

வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் இருப்பதாலும், கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன் என ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்திருந்தார். இதனால், காங்கிரஸ் வேட்பாளர்  சஞ்சய் சம்பத் என்பது கிட்டதட்ட உறுதியானது. 

இதனிடையே, சென்னையில் மணப்பாக்கம், கெருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ம் தேதி ஆய்வை மேற்கொண்டார். அப்போது, முதல்வர் தங்கள் பகுதிக்கு வந்திருக்கிறார் என்ற செய்தியை அறிந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அவரது மகன் தனது இல்லத்துக்கு வரும் படி அழைப்பு விடுத்தார்.

இளங்கோவனின் அழைப்பை ஏற்று அவரின் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த மறைந்த திருமகன் ஈவெரா படத்துக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் சிறிது நேரம் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு நடைபெற்ற அடுத்த சில மணி நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராக யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்களை ஏற்று காங்கிரஸ் தலைமை ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்ததாக கூறப்படுகிறது. 

மற்றொரு காரணம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு உள்ளூர் மாவட்ட தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். எனக்கு வாய்ப்பு குடுத்தே ஆக வேண்டும் என பிரச்சனை எழுப்பினார். நேர்காணலில் போது காங்கிரஸ் கட்சி தலைமை நிர்வாகிகளிடம் எனக்கு உறுதியாக சீட் கொடுத்தே ஆக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தவர் நிர்வாகிகள் முன்பு அழுதே விட்டார். இதனையடுத்து உட்கட்சி பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்பதற்காக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தலைமை வாய்ப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. 

click me!