2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) பாரம்பரியமாக திமுக பக்கம் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் முக்கியப் பங்காற்றும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) திமுக, நாம் தமிழர் கட்சி (NTK), மற்றும் அதிமுக கூட்டணியுடன் நேரடி போட்டியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் திமுக கூட்டணியுடன் இணைந்துள்ளார்கள் என்றே கூறலாம். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் சிறுபான்மையினர் வாக்குகள் முக்கிய பங்காற்றின.
24
திமுகவின் வாக்கு வங்கி
சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த சிறுபான்மையினர் வாக்குகள் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வெற்றிக்கு வித்திட்டது என்று சொன்னால் மிகையாகாது. வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தல் எத்தனை முனை போட்டிகளை எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை. சிறுபான்மையினர் வாக்குகளை யார் கைப்பற்றுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த கேள்வி எழுவதற்கு முக்கிய காரணம் நடிகரும், தவெக தலைவருமான விஜய் தான். விஜய், கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரின் தவெக கட்சிக்கு இந்த சமூகத்திலிருந்து சில ஆதரவை பெறக்கூடும். ஆனால், திமுக கூட்டணியின் நிலையான ஆதரவை அம்மக்களிடம் இருந்து மாற்றுவது சிரமமானது என்ற பார்வையும் நிலவுகிறது. சிறுபான்மையினர் வாக்குகள் திமுக கூட்டணிக்கு முக்கிய ஆதரவு அளிக்கும் நிலையில், தவெக மற்றும் நாம் தமிழர் ஆகியவை இளம் வாக்காளர்களை ஈர்க்க முயல்கின்றன.
34
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறி
அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியுடன் நேரடி போட்டியில் ஈடுபடுவதால், வாக்குகள் நிச்சயமாக பிரியும். சிறுபான்மையினர் வாக்குகள், திமுக கூட்டணியின் வெற்றிக்கான முக்கிய அம்சமாக கடந்த தேர்தல்கள் வரை இருந்தது. ஆனால், தவெகவின் செயல்பாடுகள், வாக்குகளை மாற்றக்கூடியவையாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இன்று நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய விஜய் ஆளும் கட்சியான திமுக, மத்தியில் ஆளும் பாஜக என இரு கட்சிகளையும் மிகவும் காட்டமாக விமர்சித்தார். அந்த கூட்டத்தில் தவெக பெண் தொண்டர் ஒருவர் இயேசுவும், விஜயும் இருக்கும் படத்தை தூக்கி பிடித்திருந்தார்.
அதில்,” விஜய் அண்ணா இயேசு எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், “திமுகவோட கிறிஸ்டியன் ஓட்டு எல்லாம் இப்படி போகுதே, பாவம் திமுக” என்று தமிழக வெற்றிக் கழகத்தினர் பதிவிட்டு திமுகவை கலாய்த்து வருகின்றனர்.கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்கள் பெரும்பாலும் நாகையில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சிறும்பான்மையினர் வாக்குகள் விஜய் பக்கம் ஒருவேளை திரும்பினால், அது ஆளும் கட்சியான திமுக மற்றும் எதிர் கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சிகளின் வாக்குகளில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள் அரசியல் ஆலோசகர்கள்.