
தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல். அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களான கே. மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விசில் சின்னத்தில் களமிறங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுடன் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமாரும் இணைந்தார். இந்த அரசியல் நகர்வு, அதிமுகவுக்கு ஏற்பட்ட முக்கிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. இப்போது அதே தொகுதிகளில் மீண்டும் தேர்தல் வருவதால், “முன்னாள் கட்சி... இப்போது புதிய கட்சி... மக்கள் யாருக்கு தீர்ப்பு?” என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மரகதம் குமரவேலும் சத்யபாமாவும் தாங்கள் ஏற்கெனவே பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதிகளில் மீண்டும் வாக்காளர்களை சந்திக்க இருப்பது இந்த இடைத்தேர்தலின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
மதுராந்தகம் தொகுதி ஏற்கெனவே கடுமையான போட்டியை சந்தித்த தொகுதி. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தவெக வேட்பாளர் எழில் கேத்தரினை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார். திமுகவும் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது.
ஆனால் சில மாதங்களிலேயே அரசியல் கணக்கு தலைகீழாக மாறியுள்ளது. முன்பு எதிரணியாக இருந்த தவெக, தற்போது மரகதம் குமரவேலுக்கு அரசியல் மேடையாக மாறியுள்ளது. இதனால் “மரகதத்தின் தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு? கட்சி மாறியதன் தாக்கம் எவ்வளவு?” என்பதை தீர்மானிக்கும் தேர்தலாகவும் இது பார்க்கப்படுகிறது.
தாராபுரம் தொகுதியிலும் நிலைமை வித்தியாசமாக இல்லை. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமா, தற்போது மீண்டும் அதே தொகுதியில் புதிய கட்சியின் சார்பில் மக்களை சந்திக்க உள்ளார். தாராபுரம் தொகுதி வரலாற்றில் அதிமுகவும் திமுகவும் பலமுறை வெற்றி பெற்றுள்ளதால், இது எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர கோட்டை என்று சொல்ல முடியாத தொகுதியாக உள்ளது. இதனால் சத்யபாமாவுக்கு இது சாதாரண தேர்தல் அல்ல. கட்சி மாறிய பிறகும் தன்னை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்பதற்கான நேரடி அரசியல் பரிசோதனையாகவே இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.
இரண்டு தொகுதிகளிலும் திமுக தனது வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்துவிட்டது. மதுராந்தகத்தில் வழக்கறிஞர் ஐ. பரந்தாமனும், தாராபுரத்தில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் இரு தொகுதிகளிலும் போட்டி மும்முனையாக மாறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
ஒருபுறம் ஆளுங்கட்சியான தவெக தனது புதிய அரசியல் பலத்தை நிரூபிக்க வேண்டும். மறுபுறம் திமுக தனது தேர்தல் அமைப்பு மற்றும் வாக்கு வங்கியை பயன்படுத்தி களத்தை பிடிக்க முயற்சிக்கும். இன்னொரு புறம் அதிமுக, தன்னிடம் இருந்து வெளியேறிய முன்னாள் எம்.எல்.ஏக்களை எதிர்த்து தனது அமைப்பு பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த தேர்தல் அதிமுகவுக்கு ஒரு தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்கான போட்டி மட்டுமல்ல. “கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மக்கள் மத்தியில் இன்னும் செல்வாக்குடன் இருக்கிறார்களா?” என்ற கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டிய தேர்தல்.
கட்சி சின்னம், வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு, உள்ளூர் நிர்வாகிகளின் பலம், வாக்கு பிரிப்பு என பல அம்சங்கள் முடிவை தீர்மானிக்கலாம். குறிப்பாக முன்னாள் அதிமுக வேட்பாளர்களே தற்போது தவெக சின்னத்தில் நிற்பதால், பாரம்பரிய வாக்குகள் எந்த அளவுக்கு மாற்றம் பெறுகின்றன என்பதும் மிக முக்கியமானதாக இருக்கும்.
செக் மேட் யாருக்கு?
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது; அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்போது அரசியல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களது நகர்வுகளை கணக்கிட்டு வருகிறது. முன்னாள் அதிமுக முகங்கள் தவெகவின் விசில் சின்னத்தில் வெற்றியை வசப்படுத்துமா? திமுக தனது வேட்பாளர்கள் மூலம் அதிர்ச்சி கொடுக்குமா? அல்லது அதிமுக தனது முன்னாள் கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா?
இதற்கான பதில் வாக்குப்பெட்டியில் தான் உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி — மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு இரண்டு தொகுதிகளின் வெற்றி–தோல்வியைத் தாண்டி, தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான முக்கியமான அரசியல் சிக்னலாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.