
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என்கிற ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனை போட்டி உருவாகி இருக்கிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உட்பட 13-க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மறுபுறம் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. வழக்கம்போல நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது. புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய் தனது தலைமையில் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில் தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றன. ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளதால் அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான காங்கிரஸ், ‘அமைச்சரவையில் பங்கு, ஆட்சியில் அதிகாரம்’ என்ற முழக்கத்தை கையில் எடுத்துள்ளது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடக்காமல் இருந்து வருகிறது.
திமுக காங்கிரஸ் இடையேயான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகி வந்த நிலையில் பிப்ரவரி 22ஆம் தேதி தொகுதி பங்கீடு குழு அமைக்கப்படும் என்று திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுக காங்கிரஸ் சலசலப்பு வெளிப்படையாக நடந்து வரும் நிலையில் அதிமுக பாஜக இடையே சத்தம் இல்லாமல் பனிப்போர் நடைபெற்று வருகிறது.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான பாஜக 70 தொகுதிகள் வரை அதிமுகவிடம் கேட்டு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து நடந்து வரும் பேச்சு வார்த்தைகளில் பாஜக 60 முதல் 65 தொகுதிகளை கேட்டு அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை கொடுத்த 20 தொகுதிகளை மீண்டும் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளைக் காட்டி கூடுதல் தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், வேலூர், கோயமுத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்திருந்தது. 2021 தேர்தலை ஒப்பிடும் பொழுது பாஜகவின் வாக்கு வங்கி மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால் அப்போது கொடுக்கப்பட்ட 20 தொகுதிகளிலிருந்து மும்மடங்காக 60 தொகுதிகளை பாஜக கேட்கிறது.
மேலும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலையும் அதிமுகவிடம் பாஜக சமர்ப்பித்துள்ளது. மாவட்டத்திற்கு ஒரு தொகுதிகள் என்றும், மக்களவைத் தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த ஒன்பது தொகுதிகளில் தலா இரு தொகுதிகள் வேண்டும் எனவும் பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் நெல்லை, பழனி, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி போன்ற முக்கிய கோவில்கள் இடம் பெற்றுள்ள பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளையும் பாஜக கேட்டுள்ளதாம். இந்த முறை குறைந்தபட்சம் 70 தொகுதிகளில் போட்டியிட்டு குறைந்தது 40 தொகுதிகளை வென்று சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி சம்மதிப்பாரா? அல்லது கடந்த முறை போலவே 20 முதல் 25 தொகுதிக்குள் பாஜகவை சுருக்கி விடுவாரா என்பதை இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.