
ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது. கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. இதைச் சொல்வது கடினமாக இருக்கலாம். கேட்பது எரிச்சலாக இருக்கலாம். புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். ஆனால், ஜெ., - சசி நட்பின் வரலாற்றில், இதை ஆணித்தரமாய் எடுத்துச்சொல்ல, ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலாவின் விசுவாசத்தை ஜெயலலிதா மனதார உணர்ந்திருந்தார். சசிகலா, ஜெயலலிதாவுக்கு அதைச் சரியான சந்தர்ப்பங்களில் உணர்த்தி இருந்தார். இந்த உணர்வுக்கடத்தல்தான், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு, உடலைவிட்டுப் பிரியும்வரை, சசிகலாவை அவர் பக்கத்திலேயே வைத்திருக்கக் காரணம். ஆனால், அப்படிப்பட்ட சசிகலா இப்போது அதிமுகவில் இல்லை. வரம் கொடுத்தவர் தலையிலேயே கை வைத்த கதையாக ஒதுக்கப்பட்டும் ஆலமரம் அழிந்து விடக்கூடாது என்கிற வைராக்கியத்துடன் பல சூழ்ச்சிகளுக்குப் பிறகு இப்போதும் அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறார் சசிகலா .
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களையும், பிரிந்து சென்றவர்களையும் மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என உரிமைக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்க முயற்சி எடுப்பதாகச் சொல்லும் சசிகலாவும் தினகரனுமே ஆளுக்கொரு திசையில் பயணிக்கிறார்கள்.
இதை உறுதிப்படுத்துவது போல், அண்மையில் பசும்பொன்னுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை சந்திப்பதற்கான வாய்ப்பு இருந்தும் டி.டி.வி.தினகரன் ஏனோ அதை தவிர்த்தார். இத்தனைக்கும், ஓபிஎஸ்ஸும், செங்கோட்டையனும் சசிகலா வருகைக்காக காத்திருந்து அவரைச் சந்தித்தார்கள்.
ஆனால் பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘‘சின்னம்மா எங்களோடு வந்து இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் தாமதமாக புறப்பட்டதால் அவரால் சரியான நேரத்திற்கு இங்கு வரமுடியவில்லை. அவர்கள் மனதால் எங்களுடன் எப்போதும் இருப்பார்கள். ஏனென்றால், துரோகம் வீழ்த்தப்பட வேண்டும்” என்று கூறி சமாளித்தார். சசிகலாவை சந்திப்பதை தவிர்ப்பது ஏன் என தினகரனிடம், கேட்டபோது, ‘‘சின்னம்மா என்பதை தாண்டி அவர்கள் எனக்கு சித்தி. வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீர்கள்’’ என்று எரிச்சலைக் காட்டினார்.
தினகரனும், சசிகலாவும் பொதுவெளியில் சந்தித்துப் பேசுவதை தவிர்ப்பது ஏன்? என்பது அதிமுகவினருக்கும், அமமுகவினருக்கும் புரியாத புதிராக இருந்து வருகிறது. இந்த மர்மத்திற்கு அடிநாதமே டி.டி.வி தினகரனின் தன்னிச்சைபோக்கு தான் என்கிறார்கள். ஜெயலலிதா மரணம், ஓபிஎஸின் தர்மயுத்தம், டிடிவி.தினகரனின் தன்னிச்சையான போக்கு, எடப்பாடி பழனிசாமியின் துரோகம் என மனம் வெதும்பி கிடக்கிறார் சசிகலா.
இதுகுறித்த அவரது மன வேதனைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் அவரது ஆதரவாளர்கள். ‘டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்தே ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. அதன்பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போதுதான் தினகரன் வெளியில் வந்தார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிடக் கூடாது என சசிகலா அழுத்தமாகச் சொல்லி இருந்ததையும் மீறி தினகரன் வெளியிட்டது சசிகலாவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.
ஜெ.,வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், சசிகலா குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழிச் சொல்லை நீக்கவே இந்த வீடியோவை வெளியிட்டதாக தினகரன் தெரிவித்தாலும், சசிகலா இதை ‘தினகரனின் கீழ்த்தரமான செயல்’ என கோபத்தை வெளிப்படுத்தினார். முந்திரிக் கொட்டை தனமாக நடந்து கொண்டு ஜெ.,வின் வீடியோ விவகாரத்தில் சசிகலா, அவரது குடும்பத்தினரின் ஒட்டு மொத்த கோபத்திற்கும் ஆளானார் தினகரன்.
ஜெயலலிதா மரணமடைந்த பிறகு சர்ச்சைகளை தவிர்க்கவே அப்போது சசிகலா பொறுமை காத்து, ஓ.பி.எஸை முதலமைச்சராக கொண்டு வந்தார். பிறகு சசிகலா முதல்வராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் வேண்டும் என உடனிருந்தவர்கள் அறிவுறுத்தினர். சசிகலாவும் அவசரம் காட்ட வேண்டாம் என்றே கூறி வந்தார். ஆனால் டி.டி.வி.தினகரனும், வெங்கடேஷனும் தங்களது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள அவசரப்படுத்தினர். ஓ.பி.எஸை அவர்களே பதவி விலகச் சொல்லி நள்ளிரவில் அழுத்தம் கொடுத்து கையெழுத்து வாங்கினர்.
ஓ.பி.எஸ் தர்மயுத்தத்தை தொடங்கிய அந்த புள்ளிதான் அதிமுகவின் இந்த நிலைக்கு முக்கிய காரணமே. நம்பிக்கைக்குரிய நபராக பார்க்கப்பட்ட ஓ.பி.எஸ், தினகரனின் அவசரத்தனத்தால் ஜெயலலிதா சமாதியில் போய் பேசியது அதிமுகவில் உள்ளவர்களின் மனங்களைக் கிளறி விட்டது. இப்படி செய்துவிட்டார்களே என டிடிவி.தினகரன் மீதும், சசிகலா மீதும் கோபத்தை தூண்டி விட்டது. தினகரன் அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக்கப்பட்டார். சில பல காரணங்களால் பதவியேற்கும் முன்பே சசிகலா சிறைக்கு செல்லும் நிலை உருவானது. அப்போது சசிகலா தன்னைத்தான் முதல்வராக்குவார் என கணக்குப்போட்டார் தினகரன். ஆனால், அவரது போக்குகள் சரியில்லை என்பதை கணித்த சசிகலா எதிர்பாராதவிதமாக எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்தார். சசிகலாவின் இந்த முடிவு டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலா நினைத்து இருந்தால் என்னை முதலமைச்சராக்கி இருக்கலாம்’’ என குடும்பத்தாரிடம் விரக்தியை வெளிப்படுத்தினார் தினகரன்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமி நிர்வாகத்தில் டி.டி.வி.தினகரனின் தலையீடு அதிகமானது. தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்து, எடப்பாடி பழனிசாமியை பொம்மையாக வைத்திருக்க முடிவு செய்தார். இந்த தலையீட்டையும், தினகரனின் ஆதிக்கப்போக்கையும் அதிமுகவினர் விரும்பவில்லை. ஓ.பி.எஸுக்கு நேர்ந்த கதியையும் உணர்ந்த அதிமுக நிர்வாகிகள், டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கி, ஓபிஎஸுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்து சேர்த்துக் கொண்டார்கள். மொத்தமாக சேர்ந்து முடிவு எடுத்து இனிமேல் இந்த விஷயத்தில் நாம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்று அன்றே எடப்பாடி முடிவுக்கு வந்து விட்டார்.
சசிகலா நினைத்திருந்தால் முதல்வராகி இருப்பேன். எனக்கே இந்த நிலைமையா? எனக் கொந்தளித்த டி.டி.வி.தினகரனிடம், ‘‘அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இரு. எல்லாம் சரி செய்யலாம்’’ என சசிகாலா எடுத்துக் கூறியும் அதனை உதாசீனப்படுத்தி, தனியாக அமமுக கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்தார் டிடிவி. இதையெல்லாம் சசிகலா கொஞ்சமும் விரும்பவில்லை.
அமமுக கட்சிப் பெயரில் திராவிடம் இல்லை. அண்ணா இல்லை என்று கூறி கட்சியில் இருந்தே விலகிச் சென்றார்கள் சில ஆதரவாளர்கள். பெங்களூரு சிறையில் இதை நேரலையில் பார்த்த சசிகலா ‘‘என்கிட்ட ஒன்னு சொல்லிட்டு, அங்கே போய் வேற ஒன்னு செய்வதா? கட்சி பெயரில் எம்ஜிஆர் எங்கே? திராவிடம் என்ன ஆச்சு? கொடியில் ஜெயலலிதா படம் மட்டும் போதுமா? ஒரு பக்கம் எம்ஜிஆர், இன்னொரு பக்கம் அண்ணா படத்தை போட்டு இருக்கலாமே. அவர்களை தூக்கி போடுவது சரியா? எனக் கொதித்துப்போய் விட்டார்.
அதையெல்லாம் சட்டை செய்யாத டிடிவி. தினகரனோ, அடுத்து சசிகலா குடும்ப உறவுகளையும் ஒவ்வொருவராக ஓரம் கட்டத் தொடங்கினார். அமமுக ஆட்சிக் கட்டிலில் அமரும். தேர்தலில் 234 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்துவேன். 150 தொகுதிகளில் கட்டாயம் குக்கர் விசிலடிக்கும். நான்தான் அடுத்த முதல்வர் என்று அவரது ஆதரவாளர்களிடம் கூறி வந்தார்.
‘‘குடும்ப ஆதிக்கத்தை செலுத்திய ஒரு கட்சி இன்று மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் தவிக்கிறது. இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். வேறு யாருக்கும் நான் பதில் கூற தேவையில்லை. நான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவன். பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட சசிகலா அழைத்ததன்பேரில் நான் மீண்டும் அரசியலுக்கு வந்தேன். சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு கட்சியின் பாதுகாப்பு கருதி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தார். இவையனைத்தும் தன்னிச்சையாக நடந்தது. இதில் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்கு என்னால் ஒன்றும் செய்யமுடியாது.
எங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 18–ல் இருந்து என்னையும் சேர்த்து 22 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன’’ எனக் கூறி தினகரன் தன்னை எம்.ஜி.ர் போலவே நினைத்து செயல்பட ஆரம்பித்தார். சசிகலாவைப் பொறுத்தவரை அதிமுகவை விட்டு விலகுவதில் ஆரம்பத்திலிருந்தே உடன்பாடு இல்லை. சட்ட ரீதியாக அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில்தான் அவர் கவனம் செலுத்துமாறு தினகரனிடம் கூறி வந்தார். ஆனால், தினகரனின் அவசரத்துக்கு அளவே இல்லாமல் போனது.
அடுத்து பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க விவேக் ஜெயராமனோடு சென்றார் தினகரன். அப்போது ‘‘நான் இல்லாவிட்டால் இந்தக் கட்சிக்குள் நீ வந்திருக்க முடியாது. அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்' என தினகரனிடம் கோபத்தைக் கொட்டினார் சசிகலா. ஆனாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு தினகரனின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் வந்துவிட்டது. ‘‘மக்கள் என்னைத்தான் அடுத்த தலைவராக நினைக்கிறார்கள். அ.தி.மு.க தொண்டர்களே என்னை நம்பித்தான் உள்ளனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் அரசியல் எல்லாம் மத்தியில் பாஜக ஆட்சி உள்ளவரையில்தான். எம்.ஜி.ஆருக்குப் பிறகு செல்வாக்கான தலைவராக உயர்ந்துவிட்டேன்' என இறுமாப்புக் காட்டினார்.
டி.டி.வி.தினகரனின் இந்த ஆணவப்போக்கு மொத்தமாக எல்லோரிடமும் வெறுப்பை சம்பாதித்தது. சசிகலாவுக்கும் சங்கடங்களை ஏற்படுத்தியது. சசிகலா குடும்பத்தினரின் அரசியல் வாழ்வுக்கே சிக்கலை ஏற்படுத்தி விட்டது. அத்தோடு சசிகலா சிறையில் இருந்தபோதே பல்வேறு காரணங்களை சொல்லி ஏமாற்றி பல நூறு கோடி சொத்துக்களை தன் வசப்படுத்திக் கொண்டார் டி.டி.வி.தினகரன். சிறையில் இருந்து வெளி வந்த பிறகு, பிரிந்து சென்றவர்களை சசிகலா ஒன்றிணைக்க எடுக்கும் முடிவுகளுக்கு பல விஷயங்களில் தடங்களாக இப்போதும் செயல்பட்டு வருகிறார் தினகரன்.
இப்போது சசிகலா, டிடிவி.தினகரகனை சந்திப்பதை அறவே தவிர்த்து வருகிறார். காரணம் அரசியல், சொத்துக்கள் என பல வகைகளிலும் சசிகலாவை நம்ப வைத்து கழுத்தறுத்து முச்சந்திக்கு கொண்டு வந்து விட்டார் தினகரன். யாரை வேண்டுமானாலும் நம்பத் தயாராக இருக்கும் சசிகலாவுக்கு, தினகரன் மீது இருந்த மொத்த நம்பிக்கையும் போய் விட்டது.
அதிகாரம், அந்தஸ்து கொடுத்த எடப்பாடி பழனிசாமியும் சில சூழ்ச்சி வேலைகளை செய்து பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க மாட்டேன் என அடம்பிடித்து வருகிறார். பழைய விசுவாசங்களை மறந்துவிட்ட எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு இருந்ததையும் பொருட்படுத்தாமல் அவருக்கு முதல்வர் பதவி கொடுத்து அலங்கரித்தவர் சசிகலா. ஆனால், கொட நாடு கொலை வழக்கில் சிக்கி, அதில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலினுடன் மறைமுக டீலிங் போட்டு அதிமுகவை அழித்து வருகிறார். கொட நாடு சம்பவம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் நடந்தது. அவர் அதிமுகவில் உள்ளவர்களின் ரகசிய ஃபைல்கள் கிடைக்கும், அதை வைத்து எதிகாலத்தில் அரசியல் செய்யலாம் என திட்டமிட்டு அங்கு தனது ஆட்களை அனுப்பி கொள்ளையடிக்க முயற்சி செய்தார். ஆனால், ஆதாரங்களையும், சாட்சிகளையும் அழிக்க மேலும் சில கொலைகள் நடந்ததும் அவரது திட்டங்களை வெளிச்சமாக்கி விட்டது.
அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி அரசியல் செய்தார். திமுக ஆட்சிக்கு வந்தால், தான் முதல்வரானால் உடனடியாக, கொடநாடு வாழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்காமல் விடமாட்டேன் என வீராவேசமாக முழங்கினார் ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகும், இப்போது ஆட்சி முடியும் தருணத்திலும்கூட அந்த வழக்கில் அவர் கிள்ளிக்கூட போடவில்லை.
காரணம், அதிமுக ஒன்றிணைந்து விட்டால் மீண்டும் திமுகவால் வெற்றி பெற முடியாது. ஆகையால், இந்த வழக்கை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமியை கைக்குள் வைத்துக் கொண்டு அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே ஸ்டாலினின் திட்டம். ஆகவே அவருடன் டீலிங் போட்டு பிரிந்தவர்களை ஓன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருகிறார்.
இப்போது எடப்பாடி பழனிசாமியால் தான் தனது பதவி பறிபோனது. கொங்கு மண்டலத்தில், தனது சமூகத்தினரின் செல்வாக்கு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்து விடக்கூடாது. அதிமுக பிரிந்து கிடக்கிறது. அக்கட்சியின் பிரிவுக்கு பிறகு அதிமுகவின் செல்வாக்கு தென்மாவட்டங்களில் எடுபடவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தில் மட்டுமே தன்சமூகத்தை வைத்து செல்வாக்கு இருந்து வருகிறது. அதை உடைக்க வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராகி விடக்கூடாது. தனக்கு ஒரு கண் போனால் தனது எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். ஆகவே அவர், டி.டிவி.தினகரன், செங்கோட்டையனை தனக்கு பக்கபலமாக வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தூண்டி விட்டு வருகிறார்.
இந்த அரசியலுக்கு ஒத்தூதும் வகையில் ஓபிஎஸையும் தன் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டு பலம் காட்டி வருகிறார் டிடிவி. ‘‘அதிமுக வெற்றி பெறாது. தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம்’’ என முட்டுக்கட்டை போட்டு அக்கட்சியினரை இணைய விடாமல் மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறார் டிடிவி.தினகரன்.
சசிகலாவை பொறுத்தவரை, அதிமுகவின் இந்த நிலைமைக்கு ஓபிஎஸின் தர்ம யுத்தம்தான் அடிப்படை காரணம். அந்த தர்ம யுத்தத்திற்கு டி.டி.வி.தினகரனின் ஆணவத்தனம்தான் பிள்ளையார் சுழி போட்டது. எடப்பாடி பழனிசாமியின் துரோகம் அதிமுகவை அழித்து விட்டது என மனவேதனையில் புளுங்கி கிடக்கிறார். இதையெல்லாம் சரி செய்ய, பிரிந்து கிடக்கும் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிற உறுதியை மட்டும் அவர் கைவிடவில்லை.
இதற்காக பாஜகவிடமும் எடுத்துச் சொல்லி அதிமுகவை ஒன்றிணைக்க பல வகைகளில் முயற்சி எடுத்தார். டெல்லி தலைமைக்கு நிலைமையை எடுத்துச் சொல்ல பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தான் நம்பியவர்களே துரோகம் செய்து விட்டார்கள் என சசிகலா உடைந்து போகவில்லை. எப்படியாவது அதிமுகவை ஒருங்கிணைத்து மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்கிற வைராக்கித்தில் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது இந்த முயற்சிகள் தேர்தலுக்கு முன் பலனைத் தரும்’’ என்கிறார்கள் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள்.