
திமுக -காங்கிரஸ் இடையே விரிசல் தொடங்கி விட்டது. திமுக கூட்டணியில் பஞ்சாயத்துகள் தொடங்கி விட்டது. குறிப்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான கிரீஷ் சோளங்கர், திமுகவிடம் காங்கிரஸுக்கு சரி பாதி தொகுதிகள் வேண்டும். ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளார். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ். அழகிரி, சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட முக்கியமான வர்களும் இதே குரல்களை ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதையொட்டி திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பஞ்சாயத்து என நீலகிரி பிரச்சாரத்தில் ஒரு அரசியல் வெடிகுண்டை வீசி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக- பாஜக தவிர்த்து பல கட்சிகள் விலகி போய்க்கொண்டு இருக்கிறார்கள். அதிமுக பிரிந்து கிடக்கிறது என திமுக கூறி வரும் நிலையில் அதற்கான பதிலடி அட்டாக்தான் இதுவா? எனக்கேட்டால் அதுவும் ஒன்று. இன்னொரு பக்கம் இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு ஒரு உள்ளடி வெடியையும் பற்ற வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்.
என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். பாஜகவுக்கு ஆதரவாக இப்போது வரை தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார் எங்கள் பொதுச்செயலாளர். ஆனாலும் டெல்லி எங்களுக்கே உள்ளடி வேலை செய்து வருகிறது. ஒரு பக்கம் செங்கோட்டையன், இன்னொரு பக்கம் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் என அவர்களை வைத்து ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டே வருகிறார்கள். அவர்களை எல்லாம் சேர்த்துக் கொள்ள முடியாது என ஏற்கனவே எங்கள் பொதுச்செயலாளர் டெல்லி வரை போய் உறுதிப்படுத்தி விட்டார். ஆனாலும் அவர்களை வைத்து ஏதாவது பஞ்சாயத்தை இழுத்துக் கொண்டே வருகிறார்கள்.
வெற்றியை தேடித்தரும் என்றுதான் ஓராண்டுக்கு முன்பே நாங்கள் பாஜகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்தினோம். அதற்காக நாங்களும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அப்படியானால் இந்த கூட்டணி சக்கரங்களை பழுது இல்லாமல் ஃப்ரீயாக ஓட விடவேண்டும். அதற்கு இடையில் நிறைய ஸ்பீடு பிரேக்கை கூட்டணியில் உள்ள டெல்லியே போட்டுட்டு இருக்கிறார்கள்.
அப்புறம் அந்த மாற்று திட்டத்தைதான் எடுக்க வேண்டி வரும். காங்கிரஸ் தவெக உள்ளிட்ட ஒரு மெகா கூட்டணி. இதை மையமாக வைத்து தான் காங்கிரஸ், திமுக கூட்டணி விரிசல் என இப்போது நீலகிரியிலும் பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். சரி, இது சாத்தியப்படுமா? ஏற்கனவே பாஜகவோடு உறுதியான கூட்டணி என போன நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சொன்னார்கள். அதன்பிறகு அந்த கூட்டணியை விட்டு விலகினார் எடப்பாடி பழனிசாமி. பிறகு நாடாளுமன்ற தேர்தல் மட்டும் கிடையாது, அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் கூட பாஜகவுடன் நோ கூட்டணி என அதிரடியாக அறிவித்தார்.
அடுத்து என்ன நடந்தது? சில மாதங்களிலேயே மறுபடியும் சட்டமன்றத் தேர்தலில் சேர்ந்து விட்டார். தேர்தல் முடிந்த பிறகு, தேர்தல் நேரத்தில் என எப்போது வேண்டுமானாலும் சேரலாம், எப்போது வேண்டுமானாலும் பிரியலாம். ஏனென்றால் கூட்டணி என்பதே தேர்தல் நேரத்தில் போடக்கூடிய கணக்கு. வரலாற்றில் எத்தனையோ முறை கூட்டணி மாறிய காட்சிகளை பார்த்திருக்கிறோம் என்கிறார்கள் இதை கூர்ந்து கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள்.
எடப்பாடி பழனிசாமி மீது இந்த சந்தேகம் இருப்பதால்தான் செக் வைப்பது போல பாஜகவும், இன்னொரு புறம், ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையன், டி.டி.வி.தினகரனை வைத்து பல செக்குகளை வைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு கவுண்டராக எடப்பாடி பழனிச்சாமியும் பாஜகவை கழற்றி விட மற்றொரு திட்டத்தையும் கையில் எடுக்கலாம். தவெகவை பொறுத்தவரை டிசம்பர் வரை பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளது. அதற்கு பிறகு தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கும். அவர்களுமே கூட்டணிக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. இந்தியா கூட்டணியில் வலுவாக இருக்கக்கூடிய காங்கிரஸ் கூட்டணி எப்படி வரும்? என்கிற கேள்வியும் எழுகிறது.
ஆனால், அதே இந்தியா கூட்டணியில்தான் கேரளாவில் காங்கிரஸோடு கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர் எதிர் துருவத்தில் பயணிக்கிறார்கள். அகில இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் இரு கட்சிகளும் ஒரே இந்திய கூட்டணியில் பயணிக்கிறார்கள். ஆகையால் அரசியலில் எதுவும் நடக்கலாம். இந்த நம்பிக்கை ஒரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு இருக்கிறது என்கிறார்கள் அவரது அதி தீவிரமான ஆதரவாளர்கள். ஆகையால் எடப்பாடி பழனிச்சாமி மாற்றுடத திட்டத்தை கையில் எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக அவர்களது பிளான் -பியை வைத்து பூச்சாண்டி காட்டுவதை நிறுத்த வேண்டும் என்று டெல்லிக்கு சைலண்டாக ஒரு மெசேஜ் தட்டி விட்டு இருக்கிறார்கள்.
இதையெல்லாம் காங்கிரஸ் தரப்பில் எப்படி பார்க்கிறார்கள் என்றால் திமுகவிடம் அதிக தொகுதிகளை பெற வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த அரசியல் கணக்குகள் எல்லாவற்றையும் வைத்து தங்களுக்கான சாதக கணக்குகளை மற்ற கட்சிகளை போல அவர்களும் போட்டபடி இருக்கிறார்கள். அதே நேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை பிச்சைக்காரன் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது கண்டனங்களையும் பதிவு செய்து இருக்கிறார் காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவரான செல்வப் பெருந்தகை.
ஆக, ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு வகையில் அரசியல் விளையாட்டை முன்னெடுத்து வருகிறார்கள். வெளிப்படையாக வலுவான கூட்டணி என்று பேசுகிறார்கள். அதே நேரத்தில் உள்ளுக்குள் சில திட்டங்களையும் வைத்திருக்கின்றன. இதெல்லாம் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். ஆனால். இந்த கேம் நடந்து கொண்டு இருப்பது உண்மை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.