
எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான தோழமையாளராகவும், விசுவாசியாகவும் அறியப்பட்டவர் செங்கோட்டையன். அதிமுகவின் சூப்பர் சீனியர் என்று கொண்டாடப்பட்டவர்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன். இவர் அதிமுக சார்பில் 9 முறை சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். முதல்முறையாக 1977ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 8 முறை கோபிசெட்டிபாளையத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்த போது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். செங்கோட்டையன் வனத்துறை, போக்குவரத்துத் துறை, விவசாயத் துறை, தொழில்நுட்பத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வி என பல்வேறு துறையின் அமைச்சராக இருந்தவர்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது கட்சியின் பொருளாளராக இருந்தார். 1988 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு திட்டங்களை வகுத்துத் தந்தவர் என்ற பெருமை செங்கோட்டையனை சேரும். ஜெயலலிதா, சத்துணவு திட்ட உயர்நிலை குழுவில் இருந்த போது அவரை காங்கேயம் வந்து விழா நடத்தியவர் செங்கோட்டையன். அப்போது முதல் ஜெயலலிதாவின் இறுதி மூச்சு வரை விசுவாசியாகவே இருந்தார்.
கடந்த 1989-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியுடன் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா மோதியதால் தமிழக சட்டசபையில் குழப்பம் ஏற்பட்டது. கே.ஏ.செங்கோட்டையனுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காயமடைந்த ஜெயலலிதாவைச் சுற்றி நின்றனர். அந்த அத்தியாயம் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் செங்கோட்டையனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அப்போதிருந்து, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.-க்கு விசுவாசமாக இருந்து ஜெயலலிதாவுக்கு ஒரு முக்கிய விசுவாசியாக தனது நிலையை அவர் உறுதிப்படுத்தினார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா மூன்று நபர்களை மட்டுமே நம்பியிருந்தார். அவர்களில் முக்கியமானவர் செங்கோட்டையன். 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக அவையின் எதிர்க்கட்சித் தலைவரானபோது ஜெயலலிதாவுக்கு மூன்று தளபதிகள் இருந்தனர். செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் அவர் நம்பியிருந்த தளபதிகள். அப்போது செங்கோட்டையன் வெறும் மாவட்டச் செயலாளர் மட்டுமல்ல, அவர் மிக முக்கியமாக நம்பிய ஒருவராகவும் இருந்தார். எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஜெயலலிதா 1989 ஆம் ஆண்டு முதன்முதலில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டபோது, பிரச்சாரங்களை மேற்பார்வையிட்டவர் செங்கோட்டையன் தான்.
ஜெயலலிதா பிரச்சார இடத்தை அடைவதற்கு முன்பு, செங்கோட்டையன் அந்த இடத்திற்குச் சென்று எல்லாம் சரியாக இருக்கிறதா என்று உறுதிசெய்வார். அந்த சுற்றுப்பயணம் அவரை ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தொழிலாளர்களுக்கும் நெருக்கமாக்கியது. செங்கோட்டையனின் முக்கியத்துவம் மேற்குப் பகுதியில்தான் உள்ளது. அது அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. 1989-ல் அதிமுக பிரிந்தபோது, ஜெயலலிதாவுக்காக ஈரோடு தொகுதியை செங்கோட்டையன் பெற்றுத் தந்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்த வரை எந்த தேர்தல் என்றாலும் கூட்டணி, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை செங்கோட்டையன் மேற்கொண்டார். முதல் நாள் தேர்தல் பிரச்சாரம் முடிந்து ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் வரை காத்திருந்துவிட்டு அடுத்த நாள் ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் பேசலாம் என்பதில் தொடங்கி மேடை, மைக், கூட்டம் சேர்ப்பது என அனைத்தையும் நள்ளிரவு வரை ஆய்வு செய்து ஒரு ஒத்திகை நடத்தி அது திருப்தி அளித்த பிறகே தூங்கச் செல்வார் செங்கோட்டையன். இதனாலேயே ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பை செங்கோட்டையனிடமே ஒப்படைத்திருந்தார்.
செங்கோட்டையன் கட்சி பதவிகளில் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகு செங்கோட்டையனின் அமைச்சர் பதவியை அவருடைய தனிப்பட்ட காரணங்களுக்காக ஜெயலலிதா பறித்தார். ஆனாலும் செங்கோட்டையன், ஜெயலலிதாவிடம் தனது விசுவாசத்தை கைவிடவே இல்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு, கட்சியை கைப்பற்ற பலர் முயன்ற போதும் செங்கோட்டையன் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு அமைதியாக இருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு ஆனார். ஜெயலலிதா மறைந்த பிறகும் அதிமுக துடிப்போடு இயங்கவேண்டும் என செயலாற்றியவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் புகழ் நிலைத்து நீடிக்க வேண்டும் என உளமாற நினைத்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதாவின் புகைப்படத்தை தன் சட்டைப்பையில் வைத்து அதனை அனைவரும் பார்க்கும்படி வைத்திருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்த உடன் அந்தப்படத்தை தூக்கியெறிந்து விட்டு விஜய் படத்தை வைக்க ஆரம்பித்து இருக்கிறார்.