நாட்டு நாட்டு பாட்டு மட்டும் தான் உங்களுக்கு தெரியும் - இந்த பாடல்களும் உலக ட்ரெண்டிங்கா இருந்தது தான் !

First Published Jan 23, 2023, 5:03 PM IST

ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதை 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம் பெறும் 'நாட்டு நாட்டு' பாடல் வென்று இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது.

தெலுங்கில் இருந்தாலும், கொரிய மொழியாக இருந்தாலும், ஸ்பானிஷ் மொழியாக இருந்தாலும், சில வைரல் நடனங்கள் யூடியூப் மற்றும் டிக்டாக் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை பெற்று வருகிறது. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சக்கைபோடு போட்டு வருகிறது. கோல்டன் குளோப் அவார்ட் ஜெயித்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது இந்த பாடல்.

பிரான்சிலிருந்து ஜப்பான் வரையிலான TikTokers இந்த பாடலுக்கு நடனம் ஆடி, சமூக வலைத்தளங்களில் வைரல் செய்து வருகிறார்கள். நகைச்சுவை நடிகர்களான லாரல் & ஹார்டி இப்போது இந்தப் பாடலுக்கு நடனமாடும் பழைய கிளிப்பின் நகைச்சுவையான மேஷ்-அப் YouTube அதிக பேரால் பார்க்கப்பட்டு வருவதே உதாரணமாக சொல்லலாம். பாடல் வரிகளே தெரியாமல் சர்வதேச அளவில் ஹிட்டான பாடல்களை இதில் பார்க்கலாம்.

நாட்டு நாட்டு (2022)

ஆஸ்காருக்கு அடுத்தபடியாக உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப்ஸ் விருதை 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம் பெறும் 'நாட்டு நாட்டு' பாடல் வென்று இந்திய திரை உலகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ஆங்கிலேய இளைஞருக்கு போட்டியாக நடனமாடும் காட்சி பார்ப்பவர்களையும் துள்ளல் போட வைக்கும் நடன அசைவுகளை கொண்டது. அந்த அளவுக்கு இசையமைப்பாளர் கீரவானியின் இசை வடிவமும், பிரேம் ரக்ஷித்தின் நடன அமைப்பும் இருந்தது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடும் இரண்டு புரட்சியாளர்களின் கதையைச் சொல்லும் விதமாக இந்த படத்தை எடுத்திருப்பார் ராஜமௌலி. அதுமட்டுமில்லாமல், உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லமான மரின்ஸ்கி அரண்மனையை பின்னணியாகக் கொண்டு இந்த பாடல் ஆகஸ்ட் 2021ல் படமாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேமா (2020)

நோம்செபோ ஜிகோட் பாடிய ஜூலு (தென்னாப்பிரிக்க இனக்குழு) பாடல் அதிகாரபூர்வமற்ற முறையில் ‘ஆப்பிரிக்க கீதம்’ என்று பெயரிடப்பட்டு இப்போது உலகளவில் வெற்றி பெற்றுள்ளது. அதிகாரபூர்வ பாடல் யூடியூபில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்டது, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவை பெற்றது.

தென்னாப்பிரிக்காவைத் தாண்டி அதிர்வலைகளை உருவாக்கியது. அங்கோலா நடனக் குழுவான ஃபெனோமெனோஸ் டோ செம்பா, உணவுத் தட்டுகளை வைத்துக்கொண்டு பாடலுக்கு சிரமமின்றி நடனமாடுவதைக் காட்டியது. இது உலகளவில் வைரலானது. இது #JerusalemaChallenge என்ற ஹேஷ்டேக் மூலம் மேலும் வைரலானது.

கங்கனம் ஸ்டைல் (2012)

தென் கொரியாவின் புகழ் பெற்ற ராப் பாடகரான பி ஸை (Psy) என்று அழைப்படும் பார்க் ஜா சாங்கிற்கு, உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். கொரிய மொழி அறியாத பல கோடி பேர் அவரின் ராப் பாடல்களை யூடியூபில் பார்த்து மகிழ்கின்ற னர். 2012 ஜூலை 15ல், பி ஸை, கங்கனம் ஸ்டைல் என்ற ராப் பாடலை, எழுதி, இயக்கி பாடி வெளியிட்டார். மெஹா ஹிட்டடித்த இந்த வீடியோவை உலகெங்கும் பல கோடி பேர் பார்த்து ரசித்தனர். 

2012ன் இறுதியில் பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 30 நாடுகளில் நம்பர் ஒன் ராப் பாடலாக உருவெடுத்தது. தென் கொரியாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த பிறகு, ஆகஸ்ட் 2012 இல் உலகம் முழுவதும் இந்த பாடல் வைரலானது, அமெரிக்காவில் பில்போர்டு ஹாட் 100 இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்டு இறுதியில் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.

மக்கரேனா (1996)

ஜூலை 2020 இல், டிஜிட்டல் பப்ளிகேஷன் தி புட்டிங் மில்லினியல்ஸ் மற்றும் ஜெனரல் Z க்கு மிகவும் பிரபலமான 1990 களின் பாடல்களில் ஒரு ஆய்வை நடத்தியது. மக்கரேனா இதில் 8வது இடத்தை பெற்றது.

ஸ்பானிய ஜோடியான லாஸ் டெல் ரியோவின் இந்த பாடல் முதலில் ஒரு ஃபிளமெங்கோ நடனக் கலைஞரின் பாடலாக எழுதப்பட்டது. 1993 இல் ஸ்பானிஷ் மொழியில் வெளியிடப்பட்டது. ஆனால் இது 1996 ஆம் ஆண்டு பேசைட் பாய்ஸின் ரீமிக்ஸ் பதிப்பாகும். இதில் ஆங்கில வசனங்கள் மற்றும் ஸ்பானிஷ் கோரஸ் உலகளவில் அலைகளை உருவாக்கியது.

லம்படா (1989)

யூடியூப் மற்றும் சமூக ஊடக தளங்கள் உருவாவதற்கு முன்பே, லம்படா பாடல் அனைவரின் புருவங்களை உயர்த்தி உலகளவில் பிரபலமானது. பிரெஞ்ச் பாப் குழுவான கயோமாவின் 1989 ஹிட் இசை வீடியோவான இதை, மலேசியா போன்ற சில நாடுகள் தொலைக்காட்சியில் இந்த வீடியோவை ஒளிபரப்புவதைத் தடை செய்தது. இருந்தும் இது பல்வேறு நாடுகளில் அந்த காலத்திலேயே ட்ரெண்டிங் ஆனது.

click me!