
இந்தியாவின் சமையலில் கறிவேப்பிலைக்கும் முக்கிய பங்கு உண்டு. பல குழம்பு வகைகளில் தாளிப்பிற்கு கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். எல்லோர் வீட்டு சமையலறைகளிலும் தவறாமல் இடம்பெறும் இலைகளில் கறிவேப்பிலையும் ஒன்று. பொதுவாக சமையலில் கறிவேப்பிலையை வாசனைக்காக சேர்ப்பார்கள். இது தவிர கருவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
கறிவேப்பிலையில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்துள்ளன. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும், நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், க்ளைகோசைடுகள் போன்றவையும் கறிவேப்பிலையின் காணப்படும் பிற அத்தியாவசிய சத்துக்களாகும். நாள்தோறும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து உண்பதால் கார்பசோல் என்ற ஆல்கலாய்கள் நமக்கு கிடைக்கின்றன. இவை செல்களில் ஏற்படும் ப்ரீ ரேடிக்கல் பாதிப்பை குறைத்து புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா?!
கறிவேப்பிலைகளை பொடி செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து நாள்தோறும் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாகும் என சித்த மருத்துவம் சொல்கிறது. கறிவேப்பிலையில் குடல் இயக்கத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. இதனால் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூட குறையலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நன்மைகளை தன்னகத்தை கொண்டுள்ள கறிவேப்பிலைகளை சமைக்கும் முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
பொதுவாக கறிவேப்பிலைகளை பலர் கடைகளில் இருந்து தான் வாங்குகிறார்கள். இப்படி கடைகளில் விற்கப்படும் கறிவேப்பிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும். அவற்றை சமைக்கும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கு காணலாம்.
இதையும் படிங்க: முடி பிரச்சினை மட்டுமா? இதயம் முதல் செரிமானம் வரை எல்லா பிரச்சினைக்கும் ஒரே தீர்வு - கறிவேப்பிலை
கறிவேப்பிலையை எப்படி சமைக்க வேண்டும்?
கடைகளில் வாங்கும் கறிவேப்பிலைகளில் அழுக்கு, தூசி போன்றவை படிந்திருக்கும். அதில் பல கிருமிகள் கூட இருக்கலாம். அதனால் கறிவேப்பிலையை சமைப்பதற்கு பயன்படுத்துவதற்கு முன்பாக நன்கு கழுவு வேண்டும். நீங்கள் கழுவும் நீரில் கல் உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் கறிவேப்பிலைகளை ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பவராக இருந்தால், அதனை கழுவியப் பின்னர் ஈரப்பதம் நீங்கும் அளவிற்கு உலரவிட்டு பின்னர் பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்கலாம்.
கறிவேப்பிலைகளை முறையாக கழுவுவது அதில் படிந்துள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளில் படிவுகளை நீக்க உதவுகிறது. இப்படி கழுவி பயன்படுத்துவதால் கறிவேப்பிலை இலைகளின் மீது இருக்கும் ரசாயனங்களை நீக்க முடியும். கறிவேப்பிலைகளை கழுவுவதால் பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கலாம். கறிவேப்பிலைகளில் வாழும் லார்வாக்கள், பூச்சியின் முட்டைகள் ஆகிவற்றை நீக்க கண்டிப்பாக கழுவ வேண்டும்.
எப்படி கழுவலாம்?
கறிவேப்பிலை இலைகளை உப்புநீரில் (ஒரு லிட்டர் நீருக்கு 1 டீஸ்பூன் உப்பு) 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த ஓடும் நீரில் கழுவலாம். குழாயில் வரும் நீரில் கழுவுவது நல்லது. சுத்தமான துணி அல்லது காகித துண்டு வைத்து அவற்றை விரைவில் உலர வைக்கலாம்.
பாரம்பரியமாகவே இந்தியாவில் சில நடைமுறைகள் உள்ளன. ஆயுர்வேதம் எந்த இலையாக இருந்தாலும், பயன்படுத்தும் முன் அவற்றை கழுவுவதை வலியுறுத்துகின்றது. அப்படிதான், கறிவேப்பிலையும் சமைக்கும் முன் கழுவப்படுகிறது. பின்னர் அந்த ஈரம் உலர்த்தப்பட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக கடைகளில் கறிவேப்பிலையை வாங்குவதை விடவும் வீடுகளில் உள்ள கறிவேப்பிலைகளை பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். அதனால் உங்கள் வீட்டில் இடமிருந்தால் சிறிய கறிவேப்பிலை செடியை நட்டு வைத்து வளருங்கள்.