
குழந்தைகளுக்கு ஒரு கதையை சொன்னால் அதை அவர்கள் மீண்டும் கேட்க ஆசைப்படுவார்கள். நீங்கள் இன்று மந்திரவாதி கதை சொல்லியிருந்தால் கூட மறுநாளே மந்திரவாதி கதையை சொல்லச் சொல்லி கேட்பார்கள். ஒரே கதையை மீண்டும் சொல்வது உங்களுக்கு சலிப்பாக இருந்தாலும் அதை கேட்பதில் அவர்களுக்கு எந்த சலிப்பும் இருக்காது. புத்தங்களைக் காட்டி கதை சொல்லும்போது ஒவ்வொரு பழைய பக்கங்களிலும் அவர்களுக்கு புதிய கதைகள் தோன்றலாம்.
குழந்தைகளுக்கு பிடித்த புத்தகத்தில் மீண்டும் மீண்டும் அதேக் கதைகளைப் படிக்கும் போது அவர்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். கதைகளை கேட்கும் நேரம் அவர்களுடைய மகிழ்ச்சியான நேரமாக மாறுகிறது. அந்தக் கதைகளில் உள்ள சொற்களை, வாக்கியத்தை அவர்கள் கவனிக்கத் தொடங்குகிறார்கள். குழந்தைகளுக்கு ஏன் ஒரே கதையை மறுபடியும் வாசித்துக் காட்ட வேண்டும் என்பதற்கு 6 சிறந்த காரணங்களை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: குழந்தையை வளர்க்கும் போது இந்த '5' விஷயங்கள் ரொம்ப முக்கியம்; மறந்தும் கூட இந்த '1' தப்பு பண்ணிடாதீங்க!
இனிய அறிமுகம்:
மனதிற்கு பிடித்த ஏற்கனவே கேட்டு ரசித்த கதைகளையே மறுபடியும் கேட்பது குழந்தைகளுக்கு சொல்ல முடியாத அளவில் இனிமையான உணர்வை ஏற்படுத்தும். திரும்பத் திரும்பக் கேட்பதால் அந்த கதைகளுக்குள் அவர்களுடைய எண்ணங்கள் இணைகின்றன. அந்த கதாப்பாத்திரங்களை நன்கு அறிந்து கொள்கிறார்கள். அடுத்தடுத்து என்ன நிகழப் போகிறது என்பது குறித்து அவர்களுடைய எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. ஏற்கனவே கேட்ட கதை என்பதால் அதன் உணர்வுகள், மொழி ஆகியவற்றை ஆராயாமல் அவர்களைப் பாதுகாப்பாக உணரச் செய்கிறது.
உற்சாகமான கதை கேட்டல்:
தங்களுக்கு விருப்பமான கதைகளைக் கேட்கும்போது அடுத்து என்ன நிகழப்போகிறது என்பது குறித்து அறிய ஆவலாய் இருப்பார்கள். கதையில் அவர்களுடைய ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதை வாசிப்பதை சுவாரசியமாக்குகிறது. குழந்தைகள் கதைகளில் எவ்வளவு நெருக்கமாகிறார்களோ அதற்கேற்றார் போல அதில் உள்ள ஒலிகள், மற்ற பாவனைகள், செயல்களை செய்ய தொடங்குவார்கள்.
சொற்கள் அறிமுகம்:
திரும்பத் திரும்ப ஒரே கதையை கேட்பதால் குழந்தைகளுக்கு அந்தக் கதையில் வரும் வார்த்தைகளும், வாக்கியங்களும் அறிமுகம் ஆகின்றன. மீண்டும் மீண்டும் கேட்பதால் கதையில் வரும் சொற்களை அவர்கள் அடையாளம் காண தொடங்குவார்கள். இதனால் அவர்களுடைய மூளையில் புதிய சொற்கள் அதன் அர்த்தங்கள் இடம்பெற தொடங்குகின்றன. இது அவர்களுக்கு தகவல் தொடர்பில் உதவி பெறுகிறது. வார்த்தைகளை புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.
கேட்கும் திறன் மேம்படும்:
குழந்தைகளின் கேட்டல் திறனை மேம்படுத்த ஒரே கதையை திரும்பத் திரும்ப சொல்வது உதவுகிறது. குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கேட்கும் போது அந்த மொழியில் தேர்ந்தவர்களாக மாறுகின்றனர். அவர்களுடைய கேட்டல் திறனை மேம்படுத்துவதன் மூலம் மொழியில் நல்ல திறன் பெறவும் நல்ல வாய்ப்பாக அமைகிறது.
இதையும் படிங்க: குழந்தைங்க எல்லாத்துக்கும் குறை சொல்றாங்களா? அதுக்கு இதான் காரணம்!!
மொழி வடிவங்கள் புரிதல்:
ஒரே கதையை மீண்டும் மீண்டும் வாசித்துக் காட்டும்போது பேசும் போது மொழி எவ்வாறு அமைகிறது என்பது குறித்து குழந்தைகளுக்கு தெரிய தொடங்குகிறது. கேட்ட சொற்களை திரும்பத் திரும்ப கேட்பது அவற்றை அவர்களின் மனதில் நன்கு பதிவு செய்கிறது. இப்படி அவர்கள் மொழியினை புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு வாசிப்பு அமர்வும் உதவுகிறது. இதனால் குழந்தைகள் வளரும் போது வாசிப்பிலும், எழுத்திலும் திறம்பட செயல்படுவார்கள்.
கதையும் கதை மாந்தர்களும்!
ஒரே கதையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது குழந்தைகளுக்கு அக்கதையின் கருப்பொருள், கதாப்பாத்திரங்கள், கதைக்களம் போன்றவை நன்கு புரியும். ஒவ்வொரு முறை கதையை சொல்லும்போதும் அவர்கள் அதனை நன்கு புரிந்து கொள்ள முடியும். சிறு வயதில் கதைகளை திரும்பத் திரும்ப கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிக்கலான விஷயங்களை புரிந்து கொள்ள தயாராகிறார்கள். புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளும்போது அதை விமர்சனம் செய்யும் அளவுக்கு சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.