Why Birds Fly in V Shape: பறவைகளுக்கும் ஏரோடைனமிக்ஸ் விதிகள் தெரியுமா? விஞ்ஞானிகள் ஆமாம் என்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணம், பறவைக் கூட்டங்கள் 'V' வடிவத்தில் பறப்பதுதான். இதில் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா?
Why Birds Fly in V Shape - பறவைகள் ஏன் 'V' வடிவத்தில் பறக்கின்றன?
வானத்தில் பறவைக் கூட்டங்கள் பறப்பதை கவனித்திருக்கிறீர்களா? அவை ஒரு ஒழுங்கான வரிசையில் செல்வதைப் பார்க்கலாம். குறிப்பாக, ஆங்கில எழுத்தான 'V' வடிவத்தில் பறந்து செல்வதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்தக்காட்சிக்குப் பின்னால், வெறும் ஒழுக்கம் மட்டுமல்ல, ஒரு ஆச்சரியமான அறிவியல் ரகசியமும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்யும் வலசைப் பறவைகள் இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள அறிவியலை இங்கே பார்க்கலாம்.
வலசைப் பறவைகள் 'V' வடிவத்தில் பறக்க முக்கிய காரணம், காற்றின் அழுத்தத்தைக் குறைப்பதுதான். காற்றைக் கிழித்து வேகமாக முன்னேற, பறவைகள் 'ஏரோடைனமிக்ஸ்' விதியைப் பின்பற்றுகின்றன. கூட்டத்தில் முன்னால் செல்லும் லீடர் பறவை, காற்றின் அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு மற்ற பறவைகளின் சுமையைக் குறைக்கிறது. இந்த அறிவியலைப் பயன்படுத்துவதால்தான், சில பறவைக் கூட்டங்கள் லட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். '
V' வடிவத்தில் பறக்கும்போது, முன்னால் உள்ள லீடர் பறவை தன் இறக்கைகளை வேகமாக அடிக்கும். அப்போது அதன் இறக்கை முனைகளிலிருந்து காற்று மேல்நோக்கி எழும்பும். இதை அறிவியல் மொழியில் 'அப்வாஷ்' (Upwash) என்பார்கள். பின்னால் வரும் பறவை, இந்த 'அப்வாஷ்' காற்று ஓட்டத்தில் சரியாகப் பொருந்திக்கொள்ளும். இதனால், பின்னால் வரும் பறவைக்கு இயற்கையாகவே மேலெழும்பும் சக்தி (Lift) கிடைக்கிறது. இதன் விளைவாக, அது குறைந்த முயற்சியில் அதிக தூரம் பறக்க முடிகிறது.
விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, பறவைகள் தனியாகப் பறப்பதை விட, இப்படி 'V' வடிவத்தில் கூட்டமாகப் பறப்பதால் சுமார் 70% வரை ஆற்றலைச் சேமிக்க முடிகிறதாம். இன்னும் சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இப்படிப் பறக்கும்போது பறவைகளின் இதயத் துடிப்பு (Heart rate) மிகவும் குறைவாக இருக்குமாம். அவை குறைந்த முறை இறக்கைகளை அடித்து, காற்றில் மிதந்தபடி (Gliding) பயணிப்பதால், உடலுக்கு அதிக பளு ஏற்படுவதில்லை. அதனால்தான் இதயத் துடிப்பு குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
'V' வடிவத்தில் பயணிக்கும்போது, முன்னால் இருக்கும் லீடர் பறவை மீது காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அதனால் அந்தப் பறவை சீக்கிரம் சோர்ந்துவிடும். ஆனால், பின்னால் வரும் பறவைகள் சோர்வின்றி பறக்க முடியும். லீடர் பறவை சோர்ந்துபோனதும், அது உடனடியாக தன் இடத்தை மாற்றி, கூட்டத்தின் பின்னால் சென்றுவிடும். மற்றொரு வலிமையான பறவை முன்னோக்கி வந்து தலைமைப் பொறுப்பை ஏற்கும். இப்படி கூட்டத்தில் உள்ள எல்லா பறவைகளும் முறைவைத்து லீடராக மாறி, ஒன்றுக்கொன்று உதவிக்கொள்கின்றன. இவற்றின் மத்தியில் சுயநலமில்லாத உண்மையான டீம்வொர்க் தெரிகிறது.
பறவைகள் 'V' வடிவத்தில் பறப்பதால், ஒவ்வொரு பறவைக்கும் முன்னால் உள்ள பறவை தெளிவாகத் தெரியும். அதனால் பயணத்தின்போது எந்தப் பறவையும் வழிதவறிப் போகாது. ஒருவேளை, ஏதாவது ஒரு பறவை சோர்வாலோ அல்லது காயம்பட்டோ கீழே விழுந்தால், அதற்குத் துணையாக மேலும் இரண்டு மூன்று பறவைகள் கீழே இறங்கும். அது குணமடையும் வரை பாதுகாப்பாக இருந்து, பிறகு வேறு கூட்டத்துடன் சேர்ந்து பயணிக்கும். இப்படி பறவைகள் ஒரு அற்புதமான கம்யூனிகேஷனைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கை நமக்குக் கற்றுத்தரும் இன்ஜினீயரிங் பாடங்களுக்கு, வலசைப் பறவைகளின் பயணமே ஒரு சிறந்த உதாரணம். பறவைகளின் இந்த 'V' வடிவ ஏரோடைனமிக்ஸ் சூத்திரத்தை அடிப்படையாக வைத்துதான், இன்று ராணுவப் போர் விமானங்களும் எரிபொருளைச் சேமிக்க இதே வடிவத்தில் பறக்கின்றன. பறவைகளின் இந்த இயல்பான அறிவுத்திறன் உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்படுத்துகிறது!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.