
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் கொய்யாப்பழம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. செரிமான முதல் இதய ஆரோக்கியம் வரை நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்கவும் இந்த பழம் உதவுகிறது. இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் கொய்யாபழத்தில் கொட்டிக்கிடந்தாலும், சிலர் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மீறினால் அது அவர்களுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். இந்த பதிவில் யாரெல்லாம் கொய்யாப்பழம் சாப்பிடவே கூடாது என்று தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு அடிக்கடி வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்பட்டால் நீங்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் வைட்டமின் சி மற்றும் சர்க்கரை நிறைந்துள்ளன. ஆகவே, இதை சாப்பிட்டால் செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். இதன் விளைவாக வாயு தொல்லை ஏற்படும். வயிறு உப்புசம் பிரச்சனையும் மேலும் அதிகரிக்கும். எனவே வயிறு உப்புசம் பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட வேண்டாம். விரும்பினால் சிறிய அளவில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இரவு ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தற்போது பலர் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட கூடாது. ஏனெனில் கொய்யாப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளன. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் உடலில் பொட்டாசியம் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், பொட்டாசியம் அதிகமானால் சிறுநீரகங்கள் அதை திறம்பட வடிக்கட்ட முடியாமல் போகும். எனவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடும் முன் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
சளி மற்றும் இருமல் பிரச்சனை இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிட வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றன. இல்லையெனில் அது பிரச்சினையை மேலும் மோசமாகும். ஏனெனில் கொய்யாப்பழம் குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளதால் சளி, இருமல் இருக்கும் போது அதை தவிர்ப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.
இன்றைய காலத்தில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். கொய்யாப்பழத்தில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. ஆகவே மிதமாக எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அதுபோல நீங்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டால் உடனே உங்களது இரத்த சர்க்கரை அளவை சரி பார்க்கவும்.
சிலருக்கு கொய்யா பழம் சாப்பிட்டால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆகவே, உங்களுக்கு ஏற்கனவே தோல் அலர்ஜி பிரச்சனை இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடும் மருத்துவரை அணுகுங்கள். நீங்கள் தவறுதலாக கூட கொய்யாப்பழத்தை சாப்பிட்டால் சருமத்தில் ஒவ்வாமை, தடிப்புகள், வீக்கம் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.