
தென்னிந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் காலையுணவு இட்லி ஆகத்தான் இருக்கும். ஏனென்றால் இட்லி சமைப்பதற்கு எளிமையான உணவு. அரிசியும், உளுந்தும் போட்டு ஆட்டி தயாரித்த புளித்த மாவில் இட்லி அவித்து அதனுடன் மணக்க மணக்க சாம்பார், சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும். ஒருவேளை சட்னி, சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் பொடி வகைகளை வைத்துக் கூட சாப்பிட்டு விடலாம். அது மட்டுமில்லாமல் ஆவியில் வேக வைப்பதால் எளிதில் இட்லி செரிமானம் அடையும்.
இட்லியை காலை மற்றும் இரவு உணவாக எடுத்துக் கொள்வார்கள். இட்லியில் பல நன்மைகள் இருந்தாலும் அதற்கென உள்ள முறைப்படி சாப்பிட்டால் தான் நல்லது. இல்லையென்றால் சில தீய விளைவுகளை ஏற்படுத்தும். எந்த உணவாக இருந்தாலும் அதற்கென உள்ள முறைப்படி தான் உண்ண வேண்டும். இட்லி சாப்பிடுவதற்கு என்று சில வரைமுறைகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளில் இட்லிக்கு சட்னி அல்லது சாம்பார் மட்டும்தான் வைப்பார்கள். சில வீடுகளில் இரண்டும் இருக்கும்.
சட்னியில் கடலை சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி என பல வகைகள் உள்ளன. இட்லிக்கான பொடி வகைகளிலும் உளுந்து பொடி, தேங்காய் பொடி, மிளகாய் பொடி என பல வகை பொடிகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றினை வைத்து இட்லி சாப்பிடும் போது அது உடலுக்குள் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் வைத்து சாப்பிட வேண்டும் என்ற பேராசையில் உண்ணும்போது சுவை நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்குண்டான பாதிப்புகள் ஏற்படும்.
இதையும் படிங்க: காலை டிபனுக்கு சத்தான வெஜிடபிள் இட்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க!
அதாவது நான்கு இட்லிக்கு நான்கு வகை பொடிகள், மூன்று வகை சட்னிகள் என எடுத்துக்கொண்டால் அது உடலுக்குள் செல்லும்போது சில பாதிப்புகளை உண்டு பண்ணுகின்றன. இதனால் நெஞ்செரிச்சல், வயிறு தொடர்பான கோளாறுகள் வரலாம். இட்லி பொடியில் சேர்க்கும் நல்லெண்ணெய் அல்லது நெய் அதிக கலோரிகளுக்கு வழிவகுக்கும். காலை இட்லியுடன் வடை சாப்பிடுவது நல்லதல்ல. இதில் உள்ள அதிக கலோரிகள் உடலுக்கு நன்மை பயக்காது.
இதையும் படிங்க: இட்லி மாவு புளிச்சு போச்சா? இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க இட்லி டேஸ்ட்டா இருக்கும்!
இட்லியின் நன்மைகள்:
இட்லியை ஆவியில் வேக வைப்பதால் இதில் கொழுப்புச்சத்து காணப்படாது. எளிதில் செரிமானம் ஆகும். இட்லி சாப்பிடும் சமயங்களில் சாம்பாரும் சாப்பிடுவதால் அரிசியில் கார்போஹைட்ரேட்டும், பருப்பில் புரதச்சத்தும் கிடைக்கிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
நீங்கள் 2 அல்லது 3 இட்லிகள் சாப்பிட்டால் ஒரு கப் சாம்பார் வைத்து சாப்பிடலாம். இதுவே ஆரோக்கியமானது. இத்துடன் சட்னி விரும்பினால் சேர்க்கலாம். ஆனால் தேங்காய் சட்னி உடல் எடையை கூட்டும். அளவாக உண்பது நல்லது. விரும்பினால் புதினா, வெங்காயம், தக்காளி இதில் ஏதேனும் ஒரு சட்னி வகை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு தேவையான வைட்டமின்களை தரும். இதுவே ஆரோக்கியமான வழிமுறை. காலை உணவுகளில் இட்லி நல்ல தேர்வாக இருக்கும். ஆனால் அளவாக உண்ண வேண்டும்.