
ஒவ்வொரு குழந்தைகளும் வெவ்வேறு உடலமைப்பை கொண்டிருப்பார்கள். எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி கிடையாது. ஆகவே ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை எல்லா குழந்தைகளுக்கும் பழக்கக் கூடாது. குழந்தைகள் என்றாலே எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதுவே அவர்களுடைய உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர நாள்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது குழந்தைகளின் உடலை இன்னும் நெகிழ்வு தன்மையுடன் வைத்திருக்கும்.
தவழும் பருவம் தொடங்கி நடை பயிலும் பருவம் வரையிலும் எப்போதும் குழந்தைகள் இயல்பாக கை கால்களை அசைத்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் நகர்வார்கள். இந்த பருவத்தில் அவர்கள் பெரிதாக உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் 5 வயது முதல் 17 வயது வரை உடற்பயிற்சியை செய்வது அவசியம். ஏன் என்பதை இந்த பதிவில் காணலாம்.
எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும்?
நகர்புறங்களில் இதற்கான விழிப்புணர்வு ஓரளவு உள்ளது. காலையில் பெற்றோருடன் மைதானத்திற்கு வந்து சின்ன சின்ன பயிற்சிகள் செய்யும் குட்டீஸை பார்க்குகளில், விளையாட்டு மைதானங்களில் காணமுடியும். ஒவ்வொரு பள்ளிகளிலும் குழந்தைகள் சிறு வயதிலே உடற்பயிற்சிகளை பழக வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கென தனியாக ஒரு மணி நேரத்தை ஒதுக்குகிறார்கள். ஆகவே குழந்தைகள் பள்ளியில் வழங்கும் உடற்பயிற்சி நேரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
பள்ளியோடு நிறுத்திக் கொள்ளாமல் வீட்டிற்கு வந்த பின்னரும் ஏதேனும் விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் குழந்தைகள் தங்களை ஈடுபடுத்த பெற்றோர் உதவ வேண்டும். நாள்தோறும் ஒரு மணி நேரம் குழந்தைகள் உடற்பயிற்சி அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
வாரத்தில் மூன்று முதல் நான்கு முறை இந்த பயிற்சிகளில் ஈடுபட்டால் போதும். சில பெற்றோர் உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுக்குவது வீண்விரயம் என நினைக்கக்கூடும். ஆனால் இதற்கு என சிறப்பு நேரம் எதையும் ஒதுக்க தேவையில்லை. குழந்தைகள் செல்போனில் கேம் விளையாடுவது, தொலைக்காட்சியில் கார்டூன் பார்ப்பது என தங்கள் நேரத்தில் போக்கும் சமயத்தில் அவர்களை உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வைக்கலாம்.
3 முதல் 5 வயது:
இந்த வயது குழந்தைகள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். அவர்கள் விளையாடுவதே போதுமானது. தினமும் சுமார் 3 மணிநேரம் மிதமாகவும் தீவிரமாகவும் உடல் செயல்படுகளில் இருப்பது அவசியம்.
6-8 வயது:
இந்த வயது குழந்தைகள் குதித்தல், எறிதல், உதைத்தல், பந்து பிடிப்பது போன்ற அடிப்படை உடல் செயல்பாடுகளை கூர்மைப்படுத்துவது தான் அடிப்படையாகும். அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுகளிலும் கலந்து கொள்ளலாம்.
7-8 வயது:
இந்த வயதுடைய குழந்தைகள் வழிகாட்டியுடன் முறையாக பயிற்சி செய்தால் வலிமைப் பயிற்சியைத் தொடங்கலாம்.
9-12 வயது:
இவர்கள் செம்மைப்படுத்துதல், மேம்படுத்துதல், ஒருங்கிணைக்கும் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து விளையாட்டுகளில் கலந்து கொள்ளலாம். மற்ற உடற்பயிற்சிகளிலும் கவனம் செலுத்தலாம்.
12 -19 வயது:
பதின்வயது குழந்தைகள் இலகுவான எடைகள், சரியான வடிவம் முறையான வழிகாட்டுதலுடன் மறுபரிசீலனைகளுடன் செய்ய தொடங்கலாம்.
இதையும் படிங்க: எந்த உடற்பயிற்சியா இருந்தாலும் 'இப்படி' பண்றது தான் நல்லது தெரியுமா?
என்ன மாதிரியான பயிற்சி?
உடற்பயிற்சி என்பது பொதுவாகவே குழந்தைகளின் உடலை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருக்கவும், அவர்களே தசைகளை வலுவாக்கவும் உதவுவதாகும். இதை செய்வதால் அவர்கள் உடல் மட்டுமின்றி மனமும் உறுதியாகும். உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை குழந்தைகள் வாக்கிங் அழைத்து செல்வது கூட நல்ல பயிற்சியாக இருக்கும். இது தவிர ஓடுதல், குதித்தல், தாண்டுதல், நடனமாடுதல் போன்ற செயல்பாடுகள் குழந்தைகளின் உடல் அசைவுகளுக்கு ஏற்ற பயிற்சிகளாக இருக்கும்.
கபடி, கால்பந்து, பூப்பந்து, டென்னிஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை நண்பர்களோடு இணைந்து செய்ய ஏற்ற விளையாட்டுகளாகும். ஒவ்வொரு குழந்தைகளும் தனித்திறமைகளுடன் வளரக்கூடியவர்கள். அதனால் மற்ற குழந்தைகளைப் போல உங்கள் குழந்தையும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென நினைக்க வேண்டாம். உங்களுடைய குழந்தையின் உடல்நிலை, தகுதி ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்து செய்ய வழி காட்டுங்கள்.
இதையும் படிங்க: பின்னோக்கி நடந்தால் 'முழங்கால் வலி' குணமாகிடும்னு சொல்றது உண்மையா?
உங்களுடைய குழந்தையை விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடுத்த நினைக்கும் முன்பாக உடற்பயிற்சி ஆசிரியர், மருத்துவர் ஆகியோரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதன் பின்னர் அவர்களை உடற்பயிற்சி செய்ய அல்லது விளையாட அனுமதிப்பது எதிர்காலத்தில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது.
உங்களுடைய குழந்தையை விளையாட்டிலும், உடற்பயிற்சிகளும் ஈடுபடுத்தும் போது அவர்களுக்கு எல்லா சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவு அளிப்பது அவசியம். இரவு நல்ல தூக்கம் கட்டாயம். இதை நீங்கள் கவனமாக பின்பற்றினால் உங்களுடைய குழந்தை எதிர்காலத்தில் எந்த சவாலையும் சந்திக்கும் ஒருவராக வளர்வான்/வளர்வாள் வலிமையாக!!