
தயிர் சிறந்த உணவு. பாலை உறை ஊற்றி புளிக்க வைக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் புரோபயாடிக் உணவு பொருள் தான் தயிராகும். கோடை காலத்தில் உணவு செரிமான சிக்கல் பலருக்கு ஏற்படலாம். வெயில் உடல் சூட்டு பிரச்சனையால் சிலருக்கு வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் கூட வரும். இந்த நேரத்தில் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
தயிர் செரிமான கோளாறுகளைக் கூட விரைவில் நீக்கிவிடும். உடல் சூட்டை உடனடியாக குறைக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தருவதற்கு தயிரை, மோராக தயார் செய்து குடிப்பது நல்லது. தயிர் உடலுக்கு நல்லது என நமக்கு தெரிந்தாலும், அது குறித்த ஆய்வுகள் இந்த உண்மையை உறுதியாக்குகின்றன.
நார்ச்சத்து உள்ள பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவைகளுடன் தயிரை சாப்பிடும்போதும், அதை தனியாக சாப்பிட்டாலும் இதய ஆரோக்கியம் மேம்படும் என ஆய்வுகள் கூறுகின்றன. தயிரில் உள்ள பொதுவான நன்மைகளை இங்கு காணலாம்.
இதையும் படிங்க: சர்க்கரை அல்லது உப்பு; தயிரில் எதை சேர்த்து சாப்பிடுவது நல்லது?
தயிரின் பயன்கள்:
குடலுக்கு நல்லது:
தயிரில் உள்ள புரோபயாடிக் நுண்ணுயிரிகள் குடல் நன்கு செயல்பட உதவும். வயிறு உப்புசத்தை குறைக்கும் வல்லமை தயிருக்கு உண்டு.
மன அழுத்தம்:
தயிரில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றிகள், நல்ல கொழுப்புகள், புரோபயாடிக்குகள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பை தயிர் குறைக்கிறது. இந்த ஹார்மோன் கட்டுக்குள் இருந்தால் எடை இழப்பு கணிசமாக இருக்கும்.
நினைவாற்றல் மேம்பாடு:
ஞாபக மறதி போன்றவை இல்லாமல் நினைவாற்றல் அதிகம் இருக்க வேண்டுமென்றால் தினமும் தயிர் சேர்க்கலாம். தயிரில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க: தயிர்ல இவ்வளவு விஷயம் இருக்கா? இரவில் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?
சரும பராமரிப்பு:
தயிர் சாப்பிடுபவர்கள் சருமம் வறட்சி இல்லாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் இளமையான தோற்றம் கிடைக்கும். தோல் அரிப்பு இருந்தால் தயிர் சாப்பிடுவது நல்லது. தயிரில் உள்ள துத்தநாகம், வைட்டமின் சி, கால்சியம் ஆகியவை சருமத்திற்கு நன்மை செய்கின்றன.
எலும்பு, பற்கள் வலிமை :
எலும்பு, பற்களை உறுதியாக்க தேவையான பாஸ்பரஸ், கால்சியம் தயிரில் உள்ளன. இதனை நாள்தோறும் உண்பதால் பற்களை உறுதியாக்கும். எலும்புகளையும் வலிமையாக்குவதால் கீல்வாதம் வராமல் தடுக்க வாய்ப்புள்ளது.
பிபி& சுகர் கட்டுப்பாடு:
தயிரில் நிரம்பியுள்ள சத்துக்கள் எளிதில் செரிக்கக் கூடியது. இதிலுள்ள புரதம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். தயிரில் காணப்படும் மெக்னீசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் நன்கு செயல்படுகிறது.
இதய ஆரோக்கியம்:
நாள்தோறும் தயிரை சேர்த்துக் கொள்பவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். கிரேக்கத்தில் தயிர் உண்பது இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைப்பதாக சொல்கிறது.
மூளைக்கு நல்லது:
தயிரில் காணப்படும் புரத உள்ளடக்கம் மூளை செல்களின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் உதவுகிறது. ஆயுர்வேத நிபுணர்கள் தயிர், சர்க்கரை ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் மூளைக்கு நல்லது என்கிறார்கள். ஏனென்றால் தயிருடன் சர்க்கரை சாப்பிடும்போது கிடைக்கும் குளுக்கோஸ் மூளையின் ஆற்றலை மேம்படுத்தும். உடலையும் நீரேற்றமாக வைக்க உதவும். தயிரில் உள்ள டைரோசின் மாதிரியான அமினோ அமிலங்கள், மூளையில் டோபமைன், செரோடோனின், நோர்பைன்ப்ரைன் ஆகிய ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது.