
இன்றைய நவீன காலகட்டத்தில் திருமணமாகி ஓரிரு ஆண்டுகளுக்கு குழந்தை பற்றிப் பெரும்பாலான தம்பதியினர் சிந்திப்பதே இல்லை. அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முயலும்போது, முறையில்லாத வாழ்கை முறையில் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் கொண்டு செல்கின்றனர். அப்படியாக, வளரும் நாடுகளில் நான்கு தம்பதிகளில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் கூறுகிறது.
இதனைத் தவிர்த்து, நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில பழக்கங்களை மேற்கொள்வது அவசியம். அப்படியாக, குழந்தை பேறுக்கு இடையூறாக இருக்கும் 5 முக்கியமான விஷயங்களை பற்றி இங்கே பார்ப்போம்.
மன அழுத்தம்
கடுமையான மன அழுத்தம் பல உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் கருவுறுதலையும் பாதிக்கும். இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். கர்ப்பத்திற்கு, உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஒருவேளை கடுமையான மன அழுத்தத்தைக் கையாளும் போது நீங்கள் கர்ப்பமாகிவிட்டாலும், அது உங்களுடன் சேர்ந்து குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உடற்பருமன்:
கருத்தரித்தலில் உங்கள் உடற்பருமன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடற்பருமன் அதிகரிப்பு அல்லது உடற்பருமன் குறைப்பு, ஹார்மோன்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இவை கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும். இவை சில சமயங்களில் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்கும். எனவே, உங்கள் உடல் எடை சமநிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம்.
தூக்கமின்மை
மனிதனுக்கு 5 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமாகும். இரவு தூங்கும்போது உடல் புத்துணர்ச்சி பெறுவது மட்டுமில்லாமல் மன அமைதியும் பெருகும். ஒழுங்கற்ற தூக்க முறை பல உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், தூக்கமின்மை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, உடல் தொற்று ஆபத்துகளை அதிகரிக்கிறது. பெண்களுக்கு, சீரற்ற மாதவிடாய் பிரச்சனையும், ஆண்களுக்கு தூக்கமின்மை விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
இன்றைய பெண்கள் கருத்தரிக்க மிகப்பெரிய தடையாக இருப்பவற்றில் மிக முக்கியமானது `பிசிஓடி’ (PCOD) ஆகும். அதிக எடை அல்லது மன அழுத்தம் போன்ற பல காரணங்கள் ஒருவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கலாம். ஒரு நிலையான மாதவிடாய் சுழற்சி இல்லாததால், அண்டவிடுப்பின் காலத்தைக் கணக்கிடுவது கடினமாக இருக்கும். எனவே, நீங்கள் நீண்ட நாட்கள் கர்ப்பத்திற்கு முயற்ச்சி செய்பவராக இருந்தால், அருகில் உள்ள மருத்துவரை அணுகுவது அவசியம்.
ஆல்கஹால் மற்றும் புகைபிடித்தல்:
புகைபிடித்தல் உங்கள் நுரையீரலை மட்டுமின்றி, உங்கள் கருவுறுதலையும் பாதிக்கும். சமீபத்தில் ஆய்வின் படி, சிகரெட் புகையில் காணப்படும் ரசாயனங்கள் பெண்களின் கருமுட்டை சிதைவு விகிதத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.அதேபோன்று, அதிகப்படியாக ஆல்கஹால் குடிக்கும் பெண்களே, குழந்தையின்மைக் குறைபாடுகளை அதிக அளவில் எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.