
மீன்கள் உடலுக்கு ஆரோக்கியமானவை. புரதச்சத்துக்கு பெயர்போனவை. மீன் சாப்பிடுவது கண் முதல் இதயம் வரை பல உறுப்புகளுக்கு நன்மை தரக் கூடியது. ஆனால் இப்போதெல்லாம் மீன்களில் ரசாயனம் தடவி விற்பது, நீண்ட நாள் ஐஸில் வைத்து கெட்டு போன மீனை விற்பது என பித்தலாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நல்ல மீன்கள் நன்மை செய்வது போலவே கெட்டுப் போன மீன்கள், ரசாயனம் கலந்த மீன்கள் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன. இந்த பதிவில் கெட்டு போன மீன்களை கண்டறிவது பற்றி காணலாம்.
சில இடங்களில் மீன்கள் கெட்டுப் போகாமல் புதிது போல தெரிய வேண்டும் என்பதற்காக ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பூசுவதாக சொல்லப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் இப்படிப்பட்ட மீன்கள் கண்டறியப்பட்டனவாம். இந்த ரசாயனம் இறந்த மனித உடல்களை கெடாமல் வைத்திருக்க பிணவறையில் வைத்திருப்பார்கள். இந்த மீன்களை நாம் உண்ணும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற உடல் உபாதைகள் வரலாம். தொடர்ந்து உண்டால் புற்றுநோய் கூட வரும் வாய்ப்புள்ளது.
1). ஐஸில் வைக்கும் மீன்கள் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்தால் நல்லதல்ல. அந்த மீன்களை கவனித்து வாங்க வேண்டும். அதற்கு மீனின் செவுளை பார்க்க வேண்டும். மீன் கெட்டுப் போகவில்லை எனில் அவை சிவப்பு நிறமாக இருக்கும். கெட்டுப் போன மீன்களில் வெளிர் நிறமாக காணப்படும்.
2). செவுள் நிறம் மாறாமல் இருக்க சிலர் ரசாயனம் பூசலாம். ஐஸில் வைப்பதால் கூட செவுள் நிறம் மாறலாம். இந்த மாதிரி நேரங்களில் மீனின் உடல் விறைப்பாக இருக்கிறதா என ஆராய வேண்டும். அப்படி மீன் உடல் தொளதொளவென இல்லாமல் உறுதியாக இருந்தால் வாங்கலாம்.
3). செவுளைப் பிளக்கும்போது அங்கு விரல்களை வைத்து தொட்டால் பிசின் போல அங்கு கொழகொழப்பாக இருக்கும். கையில் பிசுபிசுப்பு வந்தால் அது ஃபிரெஷ் மீன் தான். சந்தேகம் வேண்டாம்.
4). மீனின் கண்கள் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அதாவது தெளிவாக நம்மை பார்ப்பது போல இருந்தால் நல்ல மீன். ரத்த நிறம், மங்கிய நிறம், உப்பிய கண்கள் இருக்கும் மீன்கள் ரொம்ப நாள் ஐஸில் வைக்கப்பட்டவையாகும்.
5). ரசாயனம் பூசியுள்ள மீன்களின் மீது மருந்து வாசனை வரும். அதனால் கொஞ்சம் மூக்கை பயன்படுத்துங்கள்.
6). மீனை தலையை பிடித்து தூக்கினால் அதன் வால்பகுதி விறைப்பாக நிற்க வேண்டும். அப்படியில்லாமல் கீழே நோக்கி தொளதொளவென தொங்கினால் கெட்டுப்போன மீன் என்று அர்த்தம். நல்ல மீன் தலைப்பகுதியைத் தூக்கினால் விறைப்பாக இருக்கும்.
7). சில மீன்களின் செவுள் வெளிறி இருந்தாலும் அவை நல்ல மீனாக இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை அறிய உடல், வால், கண் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
மீன் வாங்க சென்றால் மீனின் உடல்பகுதியை தொட்டு பார்க்க வேண்டும். விரல்களால் அழுத்தும் போது சதைப்பகுதி விறைப்பாக இருந்தால் நல்ல மீன். ஆனால் அழுகிய தக்காளி மாதிரி விரல்கள் தொட்டாலே மீன் உடலில் குழிவிழுந்தால் கெட்டுப்போன மீனாகும்.
இதையும் படிங்க: மீனுடன் பால் சேர்த்து சாப்பிடாதீங்க; இந்த பிரச்சனைகள் வரும்!
ஆறு, குளம், மீன் பண்ணை ஆகிய இடங்களில் பிடிக்கும் மீன்களை ஐஸில் வைத்து உண்ணக் கூடாது. அவற்றை உயிருடன் பிடித்து சமைப்பது தான் நல்லது. அவற்றை ஐஸில் வைத்து பயன்படுத்தக் கூடாது. அவை நல்லதல்ல.
இதையும் படிங்க: மீன் வாங்கப் போறீங்களா..? அப்ப முதல்ல 'இத' தெரிஞ்சுக்கோங்க.. நல்ல மீன் வாங்கலாம்!
மீன் சமைக்க தாமதமாகும் என்றால் அதனை கழுவி புளிக்கரைசலில் போட்டு வைக்கலாம். இதை செய்யாவிட்டால் எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட்ட நீரில் ஊறவிடலாம். இதனால் சமைக்கும் நேரம் வரை மீன் பிரஷ் ஆக இருக்கும்.