
தற்போது மழை காலம் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் செய்யும் சில விஷயங்கள் நமக்கு ஆபத்தை அதிகரிக்கலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும்போது சில விஷயங்களை நாம் பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: மழை பெய்யும் போது வீட்டில் ஏசி, டிவி, ஃப்ரிட்ஜ் ஸ்விட்ச் ஆஃப் பண்ண சொல்றாங்களே.. அது ஏன் தெரியுமா..?
இடியுடன் மழை பெய்யும் போது குளிக்கலாமா?
இடியுடன் மழை பொழியும் போது குளிக்கக் கூடாது. சில நேரங்களில் அந்த சமயம் மின்கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் குளிப்பதை தவிர்க்க வேண்டும். பிளம்பிங் மூலம் கூட மின்னல் பயணிக்கும் என சிடிசி அமைப்பு சொல்கிறது. ஒருவேளை தண்ணீர் குழாயில் மின்னல் தாக்கினால், அதன் வழியே மின்சாரம் நகர்ந்து தாக்குதலை ஏற்படுத்தும். மின்னல் தாக்கி உயிரிழப்பது அரிதான விஷயம் என்றாலும் ஒவ்வொரு மழைக்காலமும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இடியுடன் மழை பெய்யும் போது வீட்டில் தண்ணீரை உபயோகிக்கலாமா?
பொதுவாக இடி முழங்க மழை பெய்தால் தண்ணீரைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க ஏனென்றால் மின்னலில் இருந்து வெளிவரும் மின்சாரம் குளியலறையை மட்டுமின்றி கட்டடத்தில் உள்ள நீர் குழாய்கள் மூலம் கூட பயணிக்கும். இந்த நேரத்தில்
பாத்திரங்கள் கழுவுவது, கை கழுவுவதை தவிர்க்கலாம்.
மின்னல் தாக்கினால் என்னாகும்?
சினிமாவில் மின்னல் தாக்கினால் நமக்கு புதிய சக்தி பிறக்கும். ஆனால் நிஜ வாழ்க்கையில் மின்னல் தாக்குவது உயிரிழப்பை ஏற்படுத்தும். ஒருவேளை லேசான தாக்குதலாக இருந்து அதிலிருந்து தப்பினால் உடலில் அதன் பாதிப்பு இருக்கும். தோல் வெடிப்பு (எரித்மா), தசை சுருக்கங்கள்,
நரம்பு மண்டலத்தில் மோசமான காயங்கள், உள்ளுறுப்பு காயங்கள், இதய பிரச்சினைகள், நுரையீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். பெரும்பாலும் மின்னல் தாக்குதலில் உயிரிழப்பவர்களுக்கு மோசமான இதய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: மிரட்டும் கோடை மழை! இடி, மின்னல் வரும்போது என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?
மின்னலின் போது எதை தவிர்க்க வேண்டும்?
மின்னலின் போது கட்டாயம் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது.
மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொலைகாட்சி பார்ப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
இடியுடன் மழை பெய்தால் பிளக் போர்டில் செருகப்பட்ட மின்னணு சாதனங்களை முதலில் பயப்படுத்தக் கூடாது. அதாவது கணினி, தொலைபேசி, டிவி, கேமிங், வாஷிங் மிஷின், மொபைல் சார்ஜிங், மின்
அடுப்புகளை பயன்படுத்தக் கூடாது.
இடியுடன் மழை பொழியும்போது வீட்டின் ஜன்னல் அருகே நிற்கவோ அமரவோ கூடாது. கதவுகள் அருகிலும் போகக் கூடாது.
சிமெண்ட் பூச்சு செய்யப்படாத கான்கிரீட் போடப்பட்ட சுவர்களில் உலோக கம்பிகள் இருக்கும். இதன் வழியே மின்சாரம் செல்ல முடியும் என்பதால் கான்கிரீட் தளங்கள் அல்லது சுவர்களில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னெச்சரிக்கைகள் வானிலை ஆய்வு மையத்தில் இருந்து வெளியானால் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவும்.
பாதுகாப்பாக இருக்க டிப்ஸ்!!
நீங்கள் வெளியிடத்தில் நிற்கும்போது இடியுடன் கூடிய மழை பெய்தால் அருகில் மூடப்பட்ட கட்டிடத்தில் தங்க வேண்டும். அவை இல்லையெனில், மூடிய ஜன்னல்களை உடைய வாகனத்தில் தங்குங்கள்.
வீட்டில் வெறும் தரையில் படுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மின்னல் தரையைத் தாக்கினால், அதன் மின்னோட்டம் 100 அடிக்கு மேல் பயணிக்கும் வாய்ப்புள்ளது. மின்னல் மூலமாக உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட தரை நீரோட்டங்கள் தான் முக்கிய காரணம்.
வெளியில் செல்லும்போது தண்ணீரிலிருந்து விலகியே நடந்து செல்லுங்கள்.
மரத்தடியில் நிற்க கூடாது. ஒருவேளை மரத்தில் மின்னல் தாக்கினால், மின்சாரம் உடனே தண்டுக்கு வந்து தாக்குதலை மோசமாக்கலாம்.
மழை பெய்யும் போது அல்லது அதற்கு பின்னர் விழுந்த மின் கம்பிகளைத் தொடக் கூடாது. அவை மின்சாரம் கடத்தக்கூடியது. காற்றாலை, கம்பி வேலிகளிலும் கூட சில நேரம் பாதிப்பு இருக்கலாம். கவனமாக இருங்கள்.