
சென்னை மீஞ்சூரை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மணிகண்டன் வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சில காலமாகவே பாடி பில்டர்கள் இவ்வாறு உயிரிழந்து வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், அதே நேரத்தில் பாதுகாப்பான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த மரணங்களுக்குப் பின்னால் பல்வேறு காரணிகள் இருக்கலாம். அவற்றில் முக்கியமான சிலவற்றை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிலர் தங்களது உடலை உடனடியாக மெருகேற்ற வேண்டும் என்பதற்காக ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்த மருந்துகள் இதயத்தின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகரித்தல், கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், இதய தசைகள் தடித்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி மாரடைப்பு அல்லது பக்கவாத அபாயத்தை ஏற்படுகிறது. உடற்பயிற்சியின் போது ஏற்படும் மாரடைப்பு அல்லது திடீர் இதயத் துடிப்பு முடக்கம் மரணத்திற்கு ஏற்படுத்தும் முக்கிய காரணிகள். ஏற்கனவே கண்டறியப்படாத இதய நோய்கள், இதய தசை தடித்தல், ரத்தக்குழாய் அடைப்பு, ஆகியவை தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது ஏற்படலாம்.
உடலை மெருகேற்றுவது என்பது படிப்படியான செயலாகும். உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுக்காமல் தீவிரமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மரணத்திற்கு வழிவகுக்கலாம். இது இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இதய முடக்கத்திற்கு வழிவகுக்கலாம். கடுமையான உடற்பயிற்சி செய்யும் பொழுது சிலர் போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பர். இது நீரிழப்பை ஏற்படுத்தி உடலின் சமநிலையை குலைத்து விடும். ஊட்டச்சத்து குறைபாடுகளும், எலக்ட்ரோலைட் சமநிலைமின்னையும் இதயத்தின் செயல்பாட்டை பாதித்து மாரடைப்புக்கு வழி வகுக்கலாம். சிலருக்கு மரபு ரீதியாகவே இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தீவிர உடற்பயிற்சியின் போது வெளிப்படலாம்.
உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். எடுத்த எடுப்பிலேயே கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமல் மருத்துவரை அணுகி உடலில் என்ன கோளாறுகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் இல்லாமல் மற்றவர்கள் செய்வதை பார்த்து அல்லது சமூக வலைத்தள வீடியோக்களை பார்த்து உடற்பயிற்சி செய்வது தவறானது. தவறான முறையில் பயிற்சிகள் செய்யும் போது தசை நார்கள் கிழிதல், எலும்பு முறிவுகள் ஆகியவை ஏற்படலாம். உங்களிக்கு என்ன வருமோ அதற்கு ஏற்றார் போல உடற்பயிற்சி செய்ய வேண்டும். பிறரை பார்த்து செய்வது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பு வார்ம் அப் செய்யாமல் நேரடியாக தீவிர பயிற்சிகளுக்கு செல்லக்கூடாது மற்றும் உடற்பயிற்சி முடிந்ததும் கூல் டவுன் செய்யாமல் உடனடியாக நிறுத்துவது கூடாது. தசைகளை உடற்பயிற்சிக்கு தயார்படுத்தவும், இதயத்துடிப்பை படிப்படியாக சாதாரணமாக கொண்டு வரவும் வார்ம் அப் மற்றும் கூல் டவுன் இரண்டும் முக்கியம். நேரமின்மை காரணமாக உடற்பயிற்சி கூடத்திற்கு விரைவாக சென்று பயிற்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் விரைவாக வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்கிற அவசரத்தில் செய்யக்கூடாது. நிதானமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளை செய்வது தசைகளுக்கு இறுக்கத்தை கொடுக்கலாம். எனவே உடலுக்கும் தசைகளுக்கும் போதுமான ஓய்வை கொடுத்து பின்னர் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உடற்பயிற்சி செய்யும் பொழுது வியர்வை வழியாக உடல் நீர்ச்சத்தை இழக்கும். போதுமான அளவு நீர் அருந்தா விட்டால் நீரிழப்பு ஏற்படும். இது மயக்கம், தலைச்சுற்றல், தசைப் பிடிப்பு, உடல் வெப்பம் அதிகரித்தல், சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உடற்பயிற்சிக்கு முன்னரும், உடற்பயிற்சியின் போதும், உடற்பயிற்சி முடிந்த பிறகும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்பவர்கள் தேவையான அளவு கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை புறக்கணிக்க கூடாது. உடற்பயிற்சியின் போது தசை உருவாக்கத்திற்கு ஊட்டச்சத்துக்கள் தேவை. எனவே சரிவிகித அளவில் உணவை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தசையை வேகமாக வளர்க்க அல்லது தசையின் செயல்பாடுகளை அதிகரிக்க ஸ்டீராய்டுகள், ஹார்மோன் மருந்துகள், அங்கீகரிக்கப்படாத மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இவை கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகப் பிரச்சனை, ஹார்மோன் சமநிலையின்மை, ரத்த அழுத்தம் அதிகரிப்பு, மாரடைப்பு, மனநலப் பிரச்சனைகள் உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். சந்தைகளில் விற்கப்படும் புரோட்டின் பவுடர்களையும் சுயமாக வாங்கி குடிக்கக்கூடாது. உடலுக்கு தேவையான அளவிற்கு அதிகமாக புரோட்டின் எடுப்பது சிறுநீரகத்தை செயலிழக்க வைத்து விடலாம். எனவே மருத்துவ ஆலோசனையுடன் புரோட்டின் பவுடர் எடுப்பது அவசியம். உடற்பயிற்சி செய்பவர்கள் போதுமான அல்லது தூங்க வேண்டியது அவசியம்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் அது மிதமான முறையிலும், ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்துமே அமைய வேண்டும். பிறரைப் பார்த்து நாமும் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது. உங்களுடைய உடல் நிலை என்ன? உங்களுக்கு என்ன விதமான நோய்கள் இருக்கிறது? உங்களால் எவ்வளவு முடியும் என்பதை தீர்மானித்து அதற்கு ஏற்ப உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதிகப்படியான ஆர்வம், தவறான பழக்கவழக்கங்கள், உங்கள் உயிருக்கே கூட உலை வைத்து விடலாம். எனவே முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம்.