
சிறிய தொப்பிகளைப் போல தோற்றமளிக்கும் காளான்களுக்குள் அவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன. வைட்டமின்கள், தாதுக்கள் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை கொண்டிருக்கும் காளான்கள் சமைக்கவோ எளிது. ருசியோ அபாரம். இந்த காளான்கள் வைட்டமின் பி மூலங்களாகும்.
நீங்கள் காலையில் எழுந்து சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபட நினைத்தாலும், சோர்வாக இருக்கிறதா? அப்படியானால் பி வைட்டமின்கள் குறைபாடு இருக்கலாம். காளான்களில் வைட்டமின் பி2(ரிபோஃப்ளேவின்), வைட்டமின் பி3 (நியாசின்), பாந்தோதெனிக் அமிலம் ஆகியவை உள்ளன. காளானை காலையில் உண்ணும் போது இந்த வைட்டமின் குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன. வைட்டமின் பி2 உங்களுடைய செல்களை சுவாசிக்க ஆதரவாக இருக்கிறது. வைட்டமின் பி3 நரம்பு மண்டலம் நன்கு செயல்பட உதவுகிறது. பாந்தோதெனிக் அமிலம் ஹார்மோன் உற்பத்திக்கு ஆதரவாக செயல்படுகிறது. உங்களுடைய காலை சோர்வை நீக்கி சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கு காளான்களை உண்ணலாம்.
காளானில் செலினியம் என்ற கனிமம் உள்ளது. இது செல்களை பாதுகாக்கிறது. வலிமையான கனிமம். இது பொதுவாக கடல் உணவிலும், இறைச்சியிலுன் தான் இருக்கும். சைவ உணவு உண்பவர்களுக்கு காளான்கள் சிறந்த உணவாகும். செலினியம் தைராய்டு ஹார்மோனை ஆதரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும்.
பொதுவாக தசைகளை வலுவாக்கும் பொட்டாசியம் தாதுக்களை வாழைப்பழத்தில் இருந்து பெற முடியும் என நினைத்திருப்போம். ஆனால் காளான்களிலும் இந்த தாது அதிகமாக உள்ளது. உடலில் உள்ள திரவங்களை சமநிலையில் வைப்பதற்கு பொட்டாசியம் உதவுகிறது தசைகள் வலுவாக, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் காளான்கள் அடிக்கடி உண்ணலாம். கண் இமை இழுப்பு அல்லது தசைப்பிடிப்பு இருந்தால் உடலில் பொட்டாசியம் குறைபாட்டை குறிக்கிறது. இதை சரி செய்ய காளான்கள் உண்ணலாம்.
உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க, இரும்புச் சத்தை செயலாக்கவும் செம்பு உதவுகிறது. காளான்களில் செலினியம், இரும்புச்சத்துடன் செம்பும் (காப்பர்) உள்ளது. இவை மூன்றும் இயற்கையாகவே ஒரே உணவில் இருப்பது காளானில்தான். இதை உண்பதால் மினி-மல்டிவைட்டமின் உடலுக்கு கிடைக்கிறது.
காளான்களில் குளுதாதயோன், எர்கோதியோனைன் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை வயதான மற்றும் நாள்பட்ட நோய்களால் ஏற்படும் செல் சேதத்தை எதிர்க்கும். காளானில் இருப்பது போல மற்ற எந்த உணவிலும் எர்கோதியோனைனை காண முடியாது. இது வயதாகும்போது மூளை ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவலாம். பூண்டுடன் காளானை வதக்கி சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகமாகும்.
காளான் நார்ச்சத்து மிகுந்த அதே நேரம் குறைந்த கலோரிகள் கொண்ட உணவு. ஆகவே எளிதில் ஜீரணிக்கும். காளான்களில் எளிதில் கரையும் நார்ச்சத்தான பீட்டா-குளுக்கன்கள் இருக்கின்றன. இவை ஆரோக்கியமான கொழுப்புகளை ஆதரிக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது. அடிக்கடி காளான்கள் சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள் குறைகின்றன.