
நம்மில் பலரும் குளிர்ந்த நீரில் குளிப்பதையே விரும்புகிறோம். குளிர்ந்த நீரில் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. சூடான நீரைக் காட்டிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தருவது மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் சிறந்த தூக்கத்தையும் தருகிறது. உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. தொடர்ந்து குளிர்ந்த குளியல் எடுப்பது உடலில் என்டோர்பின் ஹார்மோன்களை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மன அழுத்தம் குறைந்து. மன ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆனால் குளிர்ந்த நீர் குளியல் அனைவருக்கும் ஏற்றதல்ல. சில உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு இது சில தீங்குகளை தரலாம். எனவே குளிர்ந்த நீரில் குளிப்பதை யார் தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
குளிர்ந்த நீரானது நம் உடலில் படும்பொழுது ரத்தநாளங்கள் சுருங்குகின்றன. இந்த நிகழ்வு வாஸோகான்ஸ்டிரிக்ஷன்(Vasoconstriction) எனப்படுகிறது. இதன் காரணமாக இரத்த ஓட்டம் குறைந்து ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால் இதய நோயாளிகள் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம். ரத்த ஓட்டம் தடைபடும் பொழுது மூளை மற்றும் இதயத்திற்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்காததால் கரோனரி தமனி நோய்கள் அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வெப்பமான நிலையில் இருந்து திடீரென குளிர்ந்த நீரில் குளிப்பது உடலை அதிர்ச்சிக்குள்ளாக்கும். இதன் காரணமாக நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் வெப்பநிலை மாற்றம் உடனடியாக ஏற்படும். எனவே தலைச்சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படலாம். மேலும் உடல் அதிக குளிர் ஏற்பட்டு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளும் தோன்றலாம்.
அதிக குளிர்ச்சி காரணமாக மூச்சுக்குழாய் அலர்ஜி எனப்படும் ஒரு நிலை ஏற்படலாம். இது காற்றுப்பாதைகள் குறுகுவதற்கு காரணமாகிறது. இதன் விளைவாக சுவாசிப்பதில் சிரமம், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது. நோயிலிருந்து மீண்டு வருபவர்கள், புற்றுநோய்க்காக கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்பவர்கள் அதிக குளிர்ந்த நீரில் குளிப்பதை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராக வினையாற்றலாம். அதேபோல் ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் குளிருக்கு அதிக உணர்திறன் உடையவர்கள். எனவே குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடல் வெப்பநிலை கணிசமாக குறையும். இது சோர்வு மற்றும் குளிரை சகிக்க முடியாத தன்மைக்கும் வழி வகுக்கலாம்.
கடினமான உடற்பயிற்சி முடித்த பின்னர் குளிர்ந்த நீரில் குளிப்பது தசை வலி அல்லது தசை பிடிப்பை அதிகரிக்கலாம். ஏற்கனவே தசை பிடிப்பு அல்லது தசைவலி உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தலாம். குளிர்ந்த நீர் தசைகளை மேலும் சுருக்கி ரத்த ஓட்டத்தை குறைப்பதன் மூலம் வலியையும், இறுக்கத்தையும் அதிகரிக்கக்கூடும். கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகளுக்கு ரத்த ஓட்டம் அத்தியாவசியமானது. குளிர்ந்த நீரில் குளிக்கும் பொழுது இந்த செயல்முறை தடுக்கப்படலாம். அதை போல் சூடான நீரில் குளித்தால் எப்படி தோல் மற்றும் கூந்தல் வறட்சி அடையுமோ அதேபோல் மிகவும் குளிர்ந்த நீரும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை நீக்கி வறட்சிக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக சரும வறட்சி, சரும அரிப்பு, சருமத்தில் வெடிப்புகள், சருமம் செதில்களாக உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
குளிர்ந்த நீர் குளியல் மன அழுத்தத்தை குறைத்து மன நிலையை மேம்படுத்தும் என்று சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால் ஏற்கனவே மனக்கவலை உள்ளவர்கள், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். திடீர் குளிர்ச்சி சிலருக்கு பதட்டத்தை அதிகரித்து ஏற்கனவே உள்ள மனநல பிரச்சனைகளை தூண்டலாம். உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவை அதிகரித்து மனதிற்கு மேலும் அழுத்தத்தை கொடுக்கலாம். எனவே மேலே குறிப்பிட்ட பின்விளைவுகளை கருத்தில் கொண்டு அந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீர் குளியல் நன்மை பயப்பதாகவே இருந்தாலும் அனைவருக்கும் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்கும் போது ஏதாவது பிரச்சனையை சந்தித்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.