
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உடலில் கொழுப்புகள் சேர்வது போலவே கல்லீரலிலும் அதிகப்படியான கொழுப்புகள் சேர்கின்றன. இது கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) என அழைக்கப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகிறது. ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் மற்றும் ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் என வகைப்படுத்தப்படுகிறது. இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் மாற்றி அமைக்க முடியும். கொழுப்பு கல்லீரல்லின் நிலை தீவிரமடையும் பட்சத்தில் அது கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
கொழுப்பு கல்லீரலை குணப்படுத்தவோ அல்லது அதன் தீவிரத்தை குறைப்பதற்கோ மருந்துகள் ஏதுமில்லை. வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலையை திறம்பட நிர்வகிக்கவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. கொழுப்பு கல்லீரலில் இருந்து விடுபட உதவும் 5 வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கொழுப்பு கல்லீரலில் இருந்து விடுபட நினைப்பவர்கள் முதலில் உடல் எடையை குறைக்க வேண்டும். உடல் பருமன், குறிப்பாக வயிற்றுப் பகுதிகளில் கொழுப்பு சேர்வது கல்லீரல் கொழுப்புக்கு முக்கிய காரணமாகும். உடல் எடையை குறைப்பது, கல்லீரலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை கணிசமாக குறைக்கும். எடையை குறைப்பது என்பது சீராக இருக்க வேண்டும். விரைவான எடை இழப்பு சில சமயம் கல்லீரல் ஆரோக்கியத்தை மோசமாக்கலாம்.
கொழுப்பு கல்லீரலில் இருந்து விடுபட நினைப்பவர்கள் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். கலோரி கட்டுப்பாட்டுடன் கூடிய சமச்சீர் உணவுகளை சாப்பிட வேண்டும். அதிக சர்க்கரைகள் நிறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அவசியம். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்புகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்கவும். ஆரோக்கியமான கொழுப்புகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன், மத்தி போன்ற மீன்களை சாப்பிட வேண்டும். பெர்ரி பழங்கள், பச்சை இலை காய்கறிகள், கிரீன் டீ போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சிவப்பு இறைச்சிகள், சர்க்கரை சேர்த்த பானங்கள், இனிப்புப் பொருட்கள், வெண்ணெய், வனஸ்பதி ஆகிய உணவுகளை குறைக்க வேண்டும்.
கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கு ஆல்கஹால் முக்கிய காரணமாக அமைகிறது. ஆல்கஹால் சார்ந்த கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் மது அருந்துவதை முழுமையாக நிறுத்த வேண்டும். மேலும் புகை பிடிப்பது, பிற போதைப் பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்களையும் முழுமையாக கைவிட வேண்டும். உடற்பயிற்சி செய்வது, கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் அல்லது எடை தூக்குதல் போன்ற வலிமை பயிற்சிகளையும், யோகா போன்ற பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான உடற்பயிற்சி செய்யலாம். தினமும் அல்லது வாரத்தின் பெரும்பாலான நாட்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
உயர் சர்க்கரை மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோயுடன் நெருங்கிய தொடர்புடையவை. எனவே இந்த இரண்டு நோய்களையும் நிர்வகிக்க வேண்டியது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க வேண்டும். சர்க்கரை நோய் நிபுணர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு ஆகியவையும் கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு அளவுகளை பரிசோதித்து அளவுகள் அதிகமாக இருப்பின் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: இந்த வாழ்க்கை முறை மாற்றங்களை சீராகப் பின்பற்றுவதன் மூலம் கொழுப்பு கல்லீரல் நோயின் தீவிரத்தை குறைத்து கல்லீரலில் செயல்பாட்டை மேம்படுத்த முடியும். உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் இருப்பதாக தெரிந்தால் சரியான மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெறுவது நல்லது.