
நீரிழிவு நோயாளிகளை டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகைகளாக பிரித்துள்ளனர். டைப் 1 என்பது சிறு வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோயாகும். இதில் கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கும். எனவே வெளியில் இருந்து இன்சுலினை ஊசி மூலம் செலுத்தும் நிலைமை இருக்கும். டைப் 2 என்பது பெரியவர்களுக்கு வரும் சர்க்கரை நோயாகும். இதில் கணையத்தில் பீட்டா செல்கள் இருக்கும்போதிலும் உடலுக்கு தேவையான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கும் நிலையாகும். டைப் 2 வகையினருக்கு மருந்து மாத்திரைகள் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க முடியும். டைப் 2 வகையில் சிலருக்கு மட்டுமே வெளியில் இருந்து இன்சுலின் ஊசி செலுத்திக் கொள்ள அறிவுத்தப்படுகின்றனர்.
நீரிழிவு குறித்த தொடர் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், டைப் 5 என்கிற புது வகையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து வேறுபட்டது. குழந்தைகள் வளரும் பொழுது ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடால் இந்த வகை நீரழிவு ஏற்படுவதாக சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் டைப் 5 நீரிழிவு அதிகம் காணப்படுகிறது. இந்த நோயானது கடுமையான இன்சுலின் குறைபாடு கொண்ட நீரிழிவு நோயாகும். டைப் 5 நீரிழிவு நோயில் உடலில் இன்சுலின் உற்பத்தியை கடுமையாக குறைந்து, வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. குழந்தை பருவத்தில் ஏற்படும் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறை இந்த நோய்க்கு முக்கிய காரணமாகிறது.
டைப் 5 நீரிழிவு பெரும்பாலும் மரபணு மாற்றங்களால் ஏற்படுகிறது. குடும்பத்தில் யாருக்காவது டைப் 5 நீரிழிவு இருந்தால் அடுத்த தலைமுறைக்கு பரவ 50% வாய்ப்புள்ளது. உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கே நீரிழிவு வரும் என்று இருந்த நிலையில் டைப் 5 நீரிழிவானது உடல் எடை குறைவாக இருப்பவர்களையும் (அதாவது BMI 19க்கு கீழ் இருப்பவர்கள்), தொப்பை இல்லாமல் ஒல்லியாக இருப்பவர்களையும் தாக்கும் அபாயம் கொண்டது. தொடர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் கணையத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கப்பட்டு, சர்க்கரை அளவு கணிசமாக உயர்கிறது.
டைப் 5 நீரிழிவு நோயாளிகளுக்கு டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கலாம். சில சமயம் அறிகுறிகளை கண்டறிவது சவாலான காரியமாக இருக்கலாம். அதிக பசி, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், காரணம் இல்லாமல் அதி வேகமாக எடையை இழப்பது, அதிக சோர்வு மற்றும் பலவீனம், மங்கலான பார்வை, காயங்கள் மற்றும் புண்கள் ஏற்பட்டால் ஆறுவதற்கு தாமதமாவது. கை கால்களில் கூச்ச உணர்வு அல்லது மரத்துப் போதல், அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படுவது போன்றவை டைப் 5 நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் ஆகும். டைப் 5 நீரிழிவு நோயை கண்டறிவது சற்று கடினம். டைப் 2 போல இன்சுலின் எதிர்ப்பு தன்மை இதில் இருக்காது.
இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும் இன்சுலின் எதிர்ப்பு இருக்காது. எனவே டைப் 5 நீரிழிவு நோயாளிகளை மரபணு பரிசோதனைகள் மற்றும் இன்சுலின் சுரப்பு சோதனைகள் மூலமே கண்டறிய முடியும். இளம் வயதிலேயே அதாவது 25 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்தால் டைப் 5 வகை நீரிழிவுக்கான வாய்ப்புகள் அதிகம். மற்ற நீரிழிவு வகைகளைப் போலவே முழுமையான குணமளிக்கும் சிகிச்சை இல்லை என்றாலும் சில வழிகளில் இதை நிர்வகிக்கலாம். டைப் 1 போலவே வெளியில் இருந்து செலுத்தும் இன்சுலின் ஊசிகள் தேவைப்படலாம். ஏனென்றால் அவர்களின் உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவாக இருக்கும். சில சமயங்களில் வாய்வழி மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம்.
குழந்தைகள் வளரும் பருவத்திலேயே சத்தான, ஆரோக்கியமான, சமச்சீர் உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் மூலமாகவே டைப் 5 நீரிழிவிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும். வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். உங்கள் உடல்நலன் குறித்தோ அல்லது டைப் 5 நீரிழிவு குறித்து வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.