
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததை தரவே விரும்புவார்கள். குழந்தைகள் வளர சிறந்த சூழலை உருவாக்க மெனக்கெடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் பெற்றோர் சொல்லும் வார்த்தைகள் குழந்தைகளுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவித்துவிடுகிறது. குழந்தைகளின் தன்னம்பிக்கையை சிதைத்து அவர்களை முடக்கிவிடும். இது தெரியாமல் பெற்றோர் அடிக்கடி சொல்லும் அந்த 3 வார்த்தைகளை இங்கு காணலாம்.
ஒப்பீடு செய்து கூறும் ஒவ்வொரு வார்த்தைகளும் குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கிறது. மற்ற குழந்தைகள், உடன்பிறந்தவர்கள் என யாருடன் ஒப்பிட்டு பேசினாலும் வெறுப்பு, போட்டி, விரக்தி ஆகிய எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சொல்கின்றன. நீயேன் அவர்களை போல இல்லை.. என ஒப்பீடு செய்ய வேண்டாம். இதனால் அவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் வளர்கிறார்கள். சுயமதிப்பீட்டை இழக்கிறார்கள். இதற்கு பதிலாக "குழந்தைகளின் தனிப்பட்ட பலம் குறித்து பெற்றோர் பேச வேண்டும்". உதாரணமாக.. உங்கள் குழந்தைக்கு ஓவியத்தில் விருப்பம் எனில், 'நீ ரொம்ப நல்லா வரையுறீயே!' என அவர்களை ஊக்கப்படுத்தலாம்.
குழந்தைகளை எதுக்கு இதுக்கெல்லாம் அழுகிறாய்? சின்ன விஷயம் தானே! எனச் சொல்லி அந்த நேரத்தில் குழந்தையை நிறுத்தலஅம். ஆனால் அடிக்கடி இப்படி செய்வது புறக்கணிப்பு. தொடர்ந்து குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்தினால் குழந்தையின் உணர்வுகள் மட்டுப்படுத்தப்படும். அவர்கள் தேவைகளை வெளிப்படுத்த தயங்கி தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதற்கு பதிலாக, குழந்தையின் உணர்வை புரிந்து கொள்வதாகச் சொல்லி அவர்களுடன் பேச முயற்சிக்கலாம். அவர்கள் மனதை தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். இது குழந்தையின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் அவர்கள் வெளிப்படையாக பேசும் மனநிலையுடன் வளர்வார்கள்.
குழந்தைகள் ஏதேனும் விஷயத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என பெற்றோர் விரும்பினால் அவர்களிடம் கடுமையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். 'நீ இப்படியே பண்ணிட்டு இருந்தன்னா நிச்சயம் பெயில் ஆகிடுவ' என சொல்வதற்கு பதிலாக, 'நீ இதை வேறு மாதிரியாக முயற்சி செய்தால் சிறப்பாக வருவாய்! என நேர்மறை எண்ணங்களுடன் சொல்லலாம்.
பெற்றோர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி உண்டு. குழந்தைகள் பெற்றோர் எதை சொல்கிறார்களோ அதைக் கேட்டு வளர்கின்றனர். பெற்றோரின் ஒவ்வொரு கதைக்கும் குழந்தைகள் செவிமடுப்பார்கள். அதனால் குழந்தைகளிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல், கனிவான வார்த்தைகளை சொல்லுங்கள். நிச்சயம் தன்னம்பிக்கையுடன் வளருவார்கள்.