
உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாளக் கூடிய திறனை எமோசனல் இண்டெலிஜென்ஸ் எனலாம். இந்த விஷயம் குழந்தைகளிடம் இருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் உயர் பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் சுய விழிப்புணர்வு, சுய கட்டுப்பாடு, சரியான முடிவெடுத்தல் என எமோசனல் இண்டெலிஜென்ஸ் பல விஷயங்களை உள்ளடக்கியது. குழந்தைகளிடம் எமோஷனல் இண்டெலிஜன்ஸ் வளர பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? ஏன் அது முக்கியம் என இந்தப் பதிவில் காணலாம்.
குடும்ப உரையாடல்கள் குழந்தைகளுடைய ஆளுமையில் பெரும் பங்காற்றுகின்றன. எமோஷனல் இன்டெலிஜென்ஸ் உள்ள குழந்தைகள் விரைவில் துன்பங்களிலிருந்து மீண்டு வரும் திறன் பெற்று இருக்கிறார்கள். இது பிறவியில் கிடைக்கும் சக்தி அல்ல. அனுபவங்களின் வழியே பெறக்கூடியதுதான். குடும்பத்தில் உள்ள பிணைப்பும், உரையாடல்களும் குழந்தைகளுக்கு இத்திறனை வளர்க்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. பெற்றோரின் அனுபவங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்கும் உதவக்கூடியவை.
மன அழுத்தம்
குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும், உணர்ச்சிகளை கையாளவும் பெற்றோர், குழந்தை உரையாடல் அவசியம். தினமும் குழந்தைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும். அவர்களுடைய உணர்வுகளையும் வாழ்க்கையே அவர்கள் அணுகும் விதத்தையும் தெரிந்து கொண்டு அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.
பெற்றோர் தங்களுடைய குழந்தைகளின் உணர்ச்சி அனுபவங்களை அங்கீகரித்து உரையாடும்போது அவர்களுடைய எமோஷனல் இன்டலிஜென்ஸ் மற்றும் மீள் தன்மையை மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள். ஒருவேளை பெற்றோர் குழந்தைகளுடைய உணர்ச்சி வெளிப்பாட்டை புரிந்து கொள்ளாமல் நிராகரிக்கும்போது அதாவது உரையாடலை தவிர்க்கும் போது குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை அடக்குகிறார்கள். இந்த செயல், பிறரிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடாது என்று மறைமுகமாக குழந்தைகளுக்கு பெற்றோர் உணர்த்துவதாக அமைகிறது.
குழந்தைகள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போதும், ஏதேனும் கேள்விகளை முன் வைக்கும் போதும் அதற்கு அன்புடன் ஆதரவாக பெற்றோர் பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து குழந்தைகளை அதிகமாக கட்டுப்படுத்த நினைக்கும் போது அவர்களுடைய உணர்ச்சிகள் நிலையற்ற தன்மைக்கு மாறிவிடும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளிடம் ஆழமான உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும். பெற்றோரின் அனுபவங்களை, குடும்பக் கதைகளை கேட்டு வளரும் குழந்தைகள் உணர்ச்சிகளை சிறப்பாக கையாளும் திறனை பெற்றுள்ளார்கள்.
கதைகள் உணர்ச்சிபூர்வமாக செயல்படக் கூடிய கருவிகள். இவை மனதில் நங்கூரங்களாக பதிந்து ஆழமான புரிதலை உருவாக்குகின்றன. இன்றைய இளம்தலைமுறையினர் பார்ப்பதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக தெரிந்தாலும் முந்தைய தலைமுறையை விட அதிகமாக உள்வாங்கிக் கொள்ளும் தன்மையுடையவர்கள். தங்களுடைய குடும்பக்கதைகளை அடிக்கடி நினைத்து பார்த்து அதில் அர்த்தம் தேடும் பண்புடையவர்கள்.
சுய விழிப்புணர்வு, பச்சாதாபம், சுய கட்டுப்பாடு போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இதற்கு மனம் திறந்த உரையாடல்கள் அவசியம். குறிப்பாக பெற்றோர்கள் தங்களுடைய சொந்த உணர்ச்சிகளை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதை பார்த்து தான் குழந்தைகள் வளர்வார்கள். அதனால் ஒரு நல்ல மாதிரியாக பெற்றோர் இருக்க வேண்டும்.