
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (Central Drugs Standards Control Organisation - CDSCO) சமீபத்தில் நடத்திய தரக் கட்டுப்பாட்டுச் சோதனையில் 53 மருந்துகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் தரமற்றவை என்று கண்டறியப்பட்ட மருந்துகளில் பிரபலமான பொதுவான வலி நிவாரணியான பாராசிட்டமால் மற்றும் நன்கு அறியப்பட்ட ஆன்டாக்சிட் பான் டி ஆகியவையும் அடங்கும்.
இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, மருந்து தயாரிப்புகள் தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் பல மருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மருத்துகள் தர நெறிமுறைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால் அவை தரமற்றவை என்பது உறுதியாகி உள்ளது.
தரம் குறைவாக மாத்திரைகளில் பாராசிட்டாமல் (Paracetamol IP 500 mg), வைட்டமின் பி காம்பிளக்ஸ் (Vitamin B complex), டெமிஸர்டன் (Temisartan), ஷெலக்ல் (Shelcal) வைட்டமின் சி மற்றும் டி3 ( Vitamin C and D3), வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் வைட்டமின் சி சாஃப்ட்ஜெல்ஸ் (Vitamin B complex and Vitamin C softgels) ரிஃப்மின் 550, (Rifmin 550), நிமெசலிட் பாராசிட்டாமல் (Nimesulide Paracetamol) and அமாக்ஸிலின் மற்றும் பொட்டாசியம் மாத்திரைகள் Amoxycillin & Potassium Clavulanate Tablets) ஆகியவை மிகவும் மோசமானவை என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்று சிகிச்சைக்காக வழங்கப்படும் செபோடெம் எக்ஸ்பி 50 (Cepodem XP 50) உலர் சஸ்பென்ஷன் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஹைதராபாத்தில் உள்ள ஹெட்டிரோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
தரமற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாத்திரைகள் நோயாளிகளுக்கு சாத்தியமான அபாயங்களை உருவாக்கும். இந்த தரமற்ற மருந்துகளின் பின்விளைவுகள் சிக்கல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் இந்த மருந்துகளின் பயன்பாடு தொடர்பான பாதுகாப்பு கவலைகளை எழுப்பி உள்ளது.
ஹெட்டோரோ மருந்துகள், அல்கெம் ஆய்வகங்கள், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், ப்யூர் & க்யூர் ஹெல்த்கேர் மற்றும் மெக் லைஃப் சயின்சஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களால் இந்த மருந்துகள் தயாரிக்கப்பட்டன.
வயிற்றில் ஏற்படும் தொற்றுகளுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிகிச்சையான மெட்ரோனிடசோல் தரமற்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதேபோல், பிரபலமான கால்சியம் மற்றும் வைட்டமின் D3 சப்ளிமென்ட் ஷெல்கால் மோசமான தரத்தில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர சோதனைகளில் தோல்வியடைந்த மருந்துகளின் இரண்டு பட்டியல்களை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றில் 48 பிரபலமான மருந்துகள் உள்ளன, இரண்டாவது பட்டியலில் இந்த சோதனைகளில் தோல்வியுற்ற மருந்து நிறுவனங்களின் பதிலுடன் கூடுதலாக 5 மருந்துகள் உள்ளன.
எவ்வாறாயினும், மருந்துகள் போலித்தனமானவை என்று கூறி, அந்த நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுத்ததாக அதில் நிறுவனங்கள் அளித்த பதில்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மருந்துகளை தங்கள் நிறுவனம் உற்பத்தி செய்யவில்லை என்று, போலி மருந்து என்றும் சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. தயாரிப்பு போலியானது என்று கூறப்பட்டாலும், அது விளைவுகளுக்கு உட்பட்டது என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய சந்தையில் "மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய" 156 க்கும் மேற்பட்ட நிலையான டோஸ் மருந்து கலவைகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தடை செய்தது. இந்த மருந்துகளில் பிரபலமான காய்ச்சல் மருந்துகள், வலி நிவாரணிகள் மற்றும் ஒவ்வாமை மாத்திரைகள் அடங்கும்.